தமிழகம்

விலையேற்றம், வேலையின்மைக்கு எதிராக மே 25 முதல் 31 வரை  அகில இந்திய போராட்டம்: இடதுசாரி கட்சிகள் அறைகூவல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் & லெனினிஸ்ட்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

கட்டுக்கடங்காத விலையேற்றம் பொதுமக்கள் மீது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் சுமையைத் திணித்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் துன்பத்தில் தவிக்கிறார்கள். பசிக்கொடுமை உண்டாக்கும் வலி மற்றும் வேதனையுடன் கூடிய அதீத வறுமைக்குள் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகரித்து வரும் வேலையின்மை மக்களின் துயரத்தை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை கடந்த ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 70%, காய்கறிகள்  20 % , சமையல் எண்ணெய் 23 %, தானியங்கள் 8 %  அதிகரித்துள்ளன. கோடிக்கணக்கான மக்களின் பிரதான உணவான கோதுமையின் விலை 14%  உயர்ந்துள்ளது. கோதுமை தானியத்தை பொதுமக்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோதுமை கொள்முதலும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட கோதுமையின் அளவில், பாதிக்கும் குறைவாகவே ஒன்றிய அரசாங்கம் இந்த ஆண்டு கொள்முதல் செய்துள்ளது.  கோதுமை கொள்முதலுக்கு இந்த ஆண்டு  நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கு 44.4 மெட்ரிக் டன் ஆகும். ஆனால், இந்த ஆண்டு கொள்முதல் 20 மெட்ரிக் டன் அளவிற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு உருளைகள் ஆகியவற்றின் தொடர் விலையேற்றம் மற்றும் கோதுமை பற்றாக்குறை, பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன. நிலக்கரிப் பற்றாக்குறை மின்சார கட்டண உயர்வை தீவிரமடையச் செய்கிறது. இந்தச் சூழலில் ஒன்றிய அரசாங்கம் விலையேற்றத்தை, குறிப்பாக, சமையல் எரிவாயு  உருளையின் விலையேற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அனைத்து பெட்ரோலியப் பொருட்கள் மீதான செஸ்/ மிகுவரியை திரும்பப் பெற வேண்டும் என்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்துகின்றன. பொது விநியோகத் திட்டம் மூலம் கோதுமை வழங்கல் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும்.

இடதுசாரி கட்சிகளின் கோரிக்கை:

1. பெட்ரோலியப் பொருட்களின் மீதான அனைத்து செஸ்/மிகுவரியைத் திரும்பப் பெற வேண்டும்.
2. பொது விநியோகத் திட்டம் மூலம் கோதுமை வழங்கலை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் விநியோகிப்பதன் மூலம் பொது விநியோகத் திட்டத்தைப் பலப்படுத்த வேண்டும்.
4. வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ள குடும்பங்களுக்கான நேரடி நிதி மானியத்தை மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 ஆக உயர்த்திட வேண்டும்.
5. மகாத்மாக காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
6. நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
7. அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
8. வேலையில்லா கால நிவாரணம் அளிப்பதற்கான மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

மே மாதம் 25 முதல் 31 வரை நடைபெறவுள்ள விலையேற்றம் மற்றும் வேலையின்மைக்கு எதிரான அகில இந்திய போராட்ட இயக்கத்தை இடதுசாரி கட்சிகளின் அணிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மே 17 அன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 2022 மே 26  -27 ஆகிய தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும், 2022 மே 25-31 ஆகிய தேதிகளில் வீடு, வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button