‘விடுதலை’ – திரை விமர்சனம்
டாக்டர் த. அறம்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய எல்ரெட் குமார் தயாரித்த ‘விடுதலை- பாகம் -1’ திரைப்படம் தமிழகம் முழுவதும், தமிழர்களின் ஆதரவை பெற்று வெற்றி நடை போடுகிறது.
1987-ஆம் ஆண்டுகளில் தருமபுரி மலைப் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு கனிமச் சுரங்கம் அமைக்க அரசு அனுமதி தருகிறது. இது தங்களின் வாழ்வாதாரத்தை பாதித்துவிடும் என்பதால் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆயுதமேந்திய ‘மக்கள் படை’ என்ற அமைப்போடு இணைந்து இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றனர். அந்த எதிர்ப்பின் அடையாளமாக ஒரு ரயில் பாலத்தில் உள்ள தூணை வெடி வைத்து தகர்த்து, ரயில் விபத்தை உண்டு பண்ணுகின்றனர். அரியலூர் ரயில் விபத்தை இது ஞாபகப்படுத்துவதாக உள்ளது.
இந்த அமைப்பிற்கு கே.டி., இன்ஜினியர் ரமேஷ், பெருமாள் ஆகியோர் தலைவர்களாக செயல்படுகின்றனர். எவ்வளவு முயன்றும் பெருமாள் வாத்தியாரின் புகைப்படத்தை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. இவர்களை ஒடுக்குவதற்காக ஒரு போலீஸ் கம்பெனி அந்த மலைக்கு அனுப்பப்படுகிறது. அந்தக் கம்பெனிக்கு புதிதாக ஒரு ஓட்டுநர் சூரி, குமரேசனாகப் பணியில் சேர்கிறார். கரடி கடித்து போர்வையில் தூக்கிச் செல்லும் ஒரு பெண்ணை போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுகிறார். பழங்குடி மக்கள் கஷ்டப்படும் போது உதவி செய்யும் மனப்பான்மை உடையவராக குமரேசன் சித்தரிக்கப்படுகிறார். இதைப் பொறுத்துக் கொள்ளாத மேலதிகாரி சேத்தன் அவருக்கு கொடும் தண்டனை வழங்குகிறார். அதையெல்லாம் ஏற்றுக் கொண்டு செயல்படும் குமரேசனை கரடி கடித்த பாட்டியின் பேத்தி பாப்பா என்ற தமிழரசி (பவானி ஸ்ரீ) காதல் கொள்கிறார். சேத்தன் ஒரு கொடூரமான அதிகாரியாக காட்சிப்படுத்தப்படுகிறார்.
பழங்குடி மக்களை சமாதானம் செய்ய அரசு, தலைமைச் செயலாளராக வரும் ராஜீவ் மேனன் மூலமாக நூறு அடி சாலை மலையில் அமைக்க முயற்சிக்கிறது. இதை மக்கள் படை தகர்க்கிறது. அந்த நிகழ்வின் போது சில போலீஸ்காரர்கள் மரணம் அடைகிறார்கள். இதனால் ஆத்திரம் கொண்ட டி.எஸ்.பி கௌதம் மேனன் பழங்குடி மக்களை விசாரணை என்ற பெயரால் சுட்டுக் கொள்ளுமாறு உத்தரவு போடுகிறார். கௌதம் மேனன் ஒரு பக்கம் பழங்குடி மக்களுடன் நெருங்கி பழகி அவர்களுக்கு உதவுவதாக காட்டிக் கொள்கிறார். அதே நேரத்தில் கொடூரமாக விசாரணை செய்யும் அதிகாரியாகவும் இருக்கிறார். இந்த போலீஸ் கம்பெனியில் மக்கள் படைக்கு உளவு சொல்லக் கூடிய ஒரு ஏட்டும் இருக்கிறார்.
இன்ஜினியர் ரமேஷின் உறவினர் ஒரு கிராமத்தில் இருப்பதாக தகவல் வருகிறது. கௌதம் மேனனுக்கும், சேத்தனுக்கும் யார் இந்த மக்கள் படையை முதலில் ஒடுக்குவது என்ற போட்டியில், சேத்தன் அந்த ஊரில் உள்ள அத்தனை நபர்களையும் கைது செய்து வந்து ஆண்கள், பெண்கள் என பிரித்து பெண்களை நிர்வாணப்படுத்தி வாசாத்தி பாணியில் கொடுமை செய்கிறார்.
இந்தக் கொடுமைகளைப் பார்க்க சகிக்காமல் குமரேசன், வாத்தியார் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்றும் தன்னுடன் போலீஸ் படைகளை அனுப்பினால் கைது செய்து விடலாம் என்றும் கூறி, ஒரு பெரும் படையுடன் போகிறார். சினிமாத்துவ பாணியில் டிரைவராக இருக்கும் சூரி துப்பாக்கியை ஏந்தி, ஆயுதப் பயிற்சி பெற்ற மக்கள் படையின் பல்வேறு நபர்களை சுட்டு, பெருமாள் வாத்தியாரை நெருங்குகிறார், பெருமாள் வாத்தியார் கைது செய்யப்படுகிறார்.
நகைச்சுவை நடிகர் சூரி மிக இயல்பாக மிக நேர்த்தியாக போலீஸ் வாகன ஒட்டியாக நடித்திருக்கிறார். பவானி ஸ்ரீ பழங்குடி பெண்ணாக எளிமையான தோற்றத்துடன் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி குறைந்த நேரத்தில் மிக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மலையையும், காடையும் பகலிலும் இரவிலும் மிகத் துல்லியமாக காட்சிப்படுத்துகிறார். இளையராஜாவின் பின்னணி இசை இந்த படத்திற்கு மிகப் பொருத்தமாக செல்கிறது. சில நேரங்களில் கதையை விட முந்துகிறது.
படம் முடியும்போது விஜய் சேதுபதி கூறுவதாக ‘மொழியையும், மரபையும் சிதைத்தால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்வார்கள்’ என்ற வசனத்தை வைத்துள்ளார் வெற்றிமாறன். இயல்பாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அவர்கள் ஒன்றிணைவதை இவ்வாறு திசை திருப்ப வேண்டியதில்லை.
இதற்குப் பின் பாகம் 2 வெளியாக வாய்ப்புள்ளது. அதில் இந்த இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் பெரும் பணக்காரர்களையும், அதற்கு உதவும் அரசு குறித்தும் விரிவாக உரையாடல்கள் இருக்கும் என நம்புவோம். இது போன்ற எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை, இயற்கை வளங்களை வரம்பு மீறி சுரண்டுவதை மையக் கருவாக கொண்டுள்ள படங்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது ஒரு ஆரோக்கியமான விஷயமாக இருக்கிறது.