தமிழகம்

வாழ்வுரிமை பறிக்கும் மோடி அரசின் வஞ்சக செயலை விளக்கி – பிப்ரவரி 18, 19, 20 பரப்புரை இயக்கம் – மார்ச் 7 ஆர்ப்பாட்டம்! – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் தீர்மானம்

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் 08.02. 2023 மற்றும் 09.02.2023 ஆகிய தேதிகளில், கள்ளக்குறிச்சி நகரில் (கண்ணன் திருமண மண்பம்) சங்கத் துணைத் தலைவர் வி பி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

சங்கத்தின் மூத்த தலைவர்கள் இரா முத்தரசன், (மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) அ இராமூர்த்தி (புதுச்சேரி) ஆகியோர் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளையும், சங்கத்தின் முடிவுகளையும் விளக்கி சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் நா பெரியசாமி, மாநிலச் செயலாளர்கள் அ பாஸ்கர் (தலைவர், திருத்துறைப்பூண்டி ஒன்றிய ஊராட்சிக் குழு) நா சாத்தைய்யா,, (சிவகங்கை) கு ராஜா (திருவாரூர்) எஸ் அப்பாவு (கள்ளக்குறிச்சி) ஏ.எல் இராசு (புதுக்கோட்டை) பி. கணேசன் (திருச்சி) ஏ. வரதராஜன் (விருதுநகர்) ஜெ. பிரதாபன் (தருமபுரி) சி. பக்கிரிசாமி (தஞ்சாவூர் தெற்கு) ஆர் ராமச்சந்திரன் (தஞ்சாவூர் வடக்கு) என் நாராயணன் (விழுப்புரம்) கே. பாஸ்கர் (நாகபட்டினம்) ஆர். தங்கவேலு ( கரூர்) எஸ். தனக்கோட்டி (சேலம்) இரெ. இடும்பையன் (மயிலாடுதுறை) ஜி. குருசாமி (இராமநாதபுரம்) பி எஸ் எல்லப்பன் (காஞ்சிபுரம்) எஸ்பி டி ராஜாங்கம் (பெரம்பலூர்) கே. முருகன் (ஈரோடு) எம். எஸ் முத்துசாமி (தென்காசி) எஸ் ஏ பி பாலன் (திருநெல்வேலி) ஆர் ஜெகன் (திண்டுக்கல்) என் எஸ் பிரதாப சந்திரன் (திருவள்ளூர்) தேவராஜ் (திருப்பத்தூர்) கா. பாலகிருஷ்ணன், ஏ. விஜயபாலன் (புதுச்சேரி மாநிலம்) உ அரசப்பன் (பண்ணை தொழிலாளர் சங்கம்) குணசீலியம்மா , எம் பூங்கொடி உட்பட பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயத் தொழிலாளர் வாழ்க்கை நிலை, ஊரகப்பகுதி மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்து, கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் வளர்ச்சி – தொழில் முதலீட்டு உதவித் திட்டம் நிறைவேற்றுக!

தெலுங்கான மாநிலத்தில் தலித் பந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பட்டியலின சாதியினர் குடும்பங்களில் படித்த இளைஞர்கள் சுயதொழில் அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடு குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிதி முழு மானியமாக வழங்கி வருகிறது. இத்திட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டில் பட்டியலின சாதியினர், பழங்குடியின மக்கள் குடும்பங்கள் தொழில் மற்றும் வணிகத் துறையில் ஈடுபட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான சிறப்பு உட்கூறு நிதியை அடிப்படையாக் கொண்டு ரூ 10 லட்சம் முழு மானியம் வழங்கும் முதலீட்டு உதவித் திட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது

வாழ்வுரிமை பறிக்கும் மோடி அரசின் வஞ்சக செயலை விளக்கி – பிப்ரவரி 18, 19, 20 தேதிகளில் பரப்புரை இயக்கம் – மார்ச் 7 ஆர்ப்பாட்டம்!

நாடு முழுவதும் உள்ள 25 கோடி விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மீது மோடியின் ஒன்றிய அரசு கொடுந் தாக்குதல் நடத்தியுள்ளது. விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு நூறுநாள் வேலை பெறும் உரிமை சட்டபூர்வமாக ஏற்கப்பட்டு, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது இந்தச் சட்டத்தின் கீழ் திட்டப் பணிகள் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 15 கோடி குடும்பங்கள் வேலை பெறும் உரிமை அட்டை பெற்றுள்ளன. இவர்களுக்கு நூறு நாள் வேலை வழங்க ஆண்டுக்கு ரூ 2. 74 லட்சம் கோடி நிதியொதுக்கம் செய்ய வேண்டும் என பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் (2020-21) இத்திட்டத்திற்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசு செலவிட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒடுக்கீட்டை குறைத்து வந்த ஒன்றிய அரசு வரும் 2023 – 24 ஆம் ஆண்டிற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. 17ஆயிரம் கோடி ரூபாய் இத்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியப் பாக்கி இருக்கும் நிலையில், நடைமுறையில் ரூ 43 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம் வேலை அட்டை குடும்பங்களுக்கு தலா 15 நாட்கள் கூட வேலை வழங்க இயலாது என்பதை சுட்டிக் காட்டி. விவசாயத் தொழிலாளர்கள் போராடி பெற்ற, வேலை பெறும் சட்டபூர்வ உரிமையை மறுத்து, வாழ்வுரிமையை பறிக்கும் வஞ்சக செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசின் விவசாயத் தொழிலாளர் விரோதச் செயலை ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர்களிடம் விளக்கி, பிப்ரவரி 18, 19, 20 தேதிகளில் விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் நடத்துவது என்றும், வரும் 07.03.2023 ஆம் தேதி மாவட்ட வட்ட, வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் முடிவு செய்கிறது.

வீடில்லாதோர் வீடு கட்ட குடும்பத்துக்கு தலா ரூ 6 லட்சம் மானிய நிதி வழங்குக!

ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து வீடு கட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கு தற்போது வழங்கப்படும் நிதிப் பற்றாக்குறையால் பல நெருக்கடிகள் ஏற்படுகின்றன. வீடு கட்டும் பணி பாதியில் நின்றுவிடுகிறது. இதனக் கருத்தில் கொண்டு வறுமை நிலையில் வாழும் குடும்பங்கள் அனைத்தும் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கொண்ட வீடு கட்டி வாழ தலா ரூ 6 லட்சம் முழு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு சிறப்பாகச் செய்திருந்தது

தங்களன்புள்ள,
நா பெரியசாமி
பொதுச் செயலாளர்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button