வாரணாசி அர்ச்சகர்களுக்கு 100 ஜோடி சணல் காலணிகள்!
புதுதில்லி, ஜன.11- வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் பணியாளர்களுக்கு 100 ஜோடி சணல் காலணிகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அனுப்பி வைத்துள்ளார். காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் தோல் மற்றும் ரப்பர் காலணிகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மற்றும் சேவைப் பணி செய்வோர், பாதுகாவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் வெறும் காலுடன் பணி செய்து வருவது பிரதமர் மோடிக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களுக்காக 100 ஜோடி சணல் காலணிகளை பிரதமர் கொள்முதல் செய்து, அவற்றை கோயிலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஒன்றிய அரசு, “காசி விஸ்வநாதர் கோயில் மீது பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார். வாரணாசி தொடர்பான அனைத்துப் பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். நுணுக்கமான பிரச்சனைகளிலும் அவர் கவனம் செலுத்துகிறார். ஏழைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு இது மற்றொரு உதாரணம்” என்று குறிப்பிட்டுள்ளது.