வழிகாட்டி மையத்தில் குவியும் பாலியல் புகார்கள்: அரசின் வழிகாட்டுதல் இல்லாததால் ஆலோசகர்கள் தவிப்பு
அரசின் கல்வி வழிகாட்டி மையத்தில் மாணவர்கள் தெரிவிக்கும் பாலியல் புகார்களைக் கையாள்வதற்கு உரியவழிமுறைகள் இல்லாததால், ஆலோசகர்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக 2018-ல்சென்னை டிபிஐ வளாகத்தில் கல்வி வழிகாட்டி உதவி மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 மூலம் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு பயனடையலாம். தனியார் பள்ளிகள் மீதான கல்விக் கட்டண புகார்கள் குறித்த புகார்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவையில் பாலியல் தொந்தரவால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை 14417 என்ற எண்ணில் தயக்கமின்றித் தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
அதன்பின், உதவி மையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாகவும், அவற்றில் பாலியல் சார்ந்தவை அதிகம் உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், மையத்துக்கு வரும் பாலியல் புகார்களை கையாள்வதற்கான வழிகாட்டுதல் இல்லாததால், ஆலோசகர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
இதுகுறித்து கல்வி வழிகாட்டி மைய ஆலோசகர்கள் சிலர் கூறியதாவது: அமைச்சரின் அறிவிப்புக்கு முன் தினமும் 150 முதல் 200 அழைப்புகள் வரை வரும். அவை பெரும்பாலும் உயர்கல்வி குறித்த சந்தேகங்கள், பொதுத்தேர்வு குறித்த அச்சம் என கல்வி சார்ந்தவைகளாக இருக்கும். சில அழைப்புகள் மட்டும் கல்விக் கட்டண முறைகேடு போன்றவையாக இருக்கும்.
ஆனால், சில நாட்களாக உதவி மையத்துக்கு தினமும் 500 முதல் 550 அழைப்புகள் வரை வருகின்றன. அவற்றில் பெரும்பாலும் பாலியல்புகார்கள் மற்றும் அது தொடர்புடையதாகவே உள்ளன.
வழக்கமாக, மையத்தில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படும். உளவியல் பாதிப்புகள், மனநலநிபுணர் மூலம் சரிசெய்யப்படும். பள்ளிகள் மீதான புகார்கள், துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஆனால், பாலியல் புகார்கள் குறித்த வழிகாட்டுதல் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படவில்லை. இதனால் அவற்றைக் கையாள முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். இதனால் நிறைய புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
சில மாணவிகள் தெரிவிக்கும் பாலியல் சம்பவங்கள் மோசமானவை. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருப்பது, எங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மனநல ஆலோசனைகள் மட்டும் வழங்கி, ஆறுதல் தெரிவித்து வருகிறோம். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க. இவ்வாறு அவர்கள் கூறினர்.
காவல் துறை பிரதிநிதி
இதுகுறித்து ஒய்வுபெற்ற ஆசிரியர் செ.நடராஜன் கூறும்போது, ‘‘ மழைக்கால உதவி மையத்தில் பெறப்படும்புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஏனெனில், சம்பந்தப்பட்ட துறை பிரதிநிதிகள் அந்த மையத்தில் இருப்பார்கள். ஆனால், கல்வி வழிகாட்டி மையத்தை, கல்வித் துறை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை. அதேபோல, பாலியல் புகார்களில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று துறை அதிகாரிகளுக்கு முழுமையான புரிதல் இல்லை. எனவே, பாலியல் புகார்களை கையாள்வது குறித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தெளிவுரை வழங்க வேண்டும். கல்வி மையத்தில் காவல் துறை பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.