கட்டுரைகள்

வர்க்கமற்ற, சாதியற்ற சமுதாயம் படைத்திட வீறுநடை போடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

டி ராஜா

96 ஆண்டுகளுக்கு முன்பு, 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் நாள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. இந்தியத் திருநாட்டுடன் இயல்பான, உயிரோட்டம் மிக்க பிணைப்பைக் கொண்டிருக்கிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. நமது குடியரசின் நவீன வரலாற்றில் இடம்பெற்றுள்ள பல புகழ்மிகு, முற்போக்கு இயக்கங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்று இருக்கிறது.

காந்திய இயக்கத்தில்  திருப்தியடையாத, விடுதலைப் போராட்டத்தின் செயல்திட்டத்தை மேலும் தீவிரம் கொண்டதாக, முற்போக்கானதாக மாற்றிட விரும்பிய, செயல்துடிப்பும், தத்துவார்த்த முனைப்பும் கொண்ட எண்ணற்ற இளந்தோழர்கள் சங்கமிக்கத் தொடங்கினர். நாடு முழுவதிலும் இருந்து ஒன்றிணைந்த இந்தத் தோழர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கான்பூர் மாநாட்டில் முதல்முறையாக ஓரணியாகத் திரண்டனர்.

இந்த மாநாட்டின் ஊடாக, அமைப்பு ரீதியிலான கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கான விதை இந்திய மண்ணில் விதைக்கப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எண்ணற்ற இடையூறுகளை எதிர்கொண்டது; சமுதாயத்தில் நிலவி வரும் வர்க்க, சாதிய, மற்றும் பாலின முரண்பாடுகளை எதிர்கொண்டது; மக்களின் நன்மதிப்பையும், செல்வாக்கையும் பெற்றது.

விடுதலைப் போராட்ட காலத்தின் பல்வேறு புரட்சிகர இலட்சியங்கள் இடதுசாரி இயக்கங்களில் இருந்து கிளர்ந்து எழுந்தவை ஆகும். வரலாற்றின் விரிந்த பரப்பில், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பல பக்கங்கள் நமக்கென அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். கட்சியின் 97 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, வருங்காலத்தில் நாம் நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கங்களில் சிலவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய பிறகு, லட்சக்கணக்கான மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் இணைந்தனர்; விடுதலைப் போராட்ட இயக்கம் வெகுமக்கள் இயக்கமென வடிவம் கொண்டது. ஜார் மன்னனின் கொடுங்கோன்மைக்கு எதிரான ரஷ்ய மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தில் இருந்து உத்வேகம் பெற்ற கதார் கட்சி மற்றும் வங்கம், உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட பிரதேசங்களை மையமாகக் கொண்ட புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த இடதுசாரிகள் இந்த வளர்ச்சிப் போக்கில் முக்கிய பங்காற்றினார்.

அரசியல் சமவெளி தளத்தில் பூகம்பமாய் வெடித்துக் கிளம்பிய ரஷ்யப் புரட்சி இந்திய சூழலின் மீதும் அதன் தாக்கத்தைப் பதித்தது. அதன் காரணமாக, நமது தேசத் தலைவர்கள் தத்துவார்த்த போராட்டத்தின் மாண்பையும், இந்திய வெகுமக்களின் புரட்சிகர போர்க்குணத்தையும் விரைவாக உணர்ந்தனர். இடதுசாரி தலைவர்களும், தொழிலாளர்களும் இணைந்து 1920-ம் ஆண்டில் ஏ.ஐ.டி.யு.சி – ஐ  உருவாக்கினார்கள். இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடி அமைப்பான ஏ.ஐ.டி.யு.சி-ன் முதல் தலைவராக லாலா லஜ்பத் ராய் பொறுப்பேற்றார்.

பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் சோஷலிச லட்சியங்களுக்காக உயிர்த்தியாகம் புரிந்தனர். அவர்களது அளப்பரிய தியாகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து களம் கண்ட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகமூட்டியது; போராட்டத்தின் கோரிக்கைகள் ஒரு தீர்க்கமான வடிவத்தை அடைந்த நிலையில் , கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான எம்.என்.ராய் அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கையை முதன் முதலாக எழுப்பினார். பூரண சுதந்திர முழக்கத்தை எழுப்ப காங்கிரஸ் இயக்கம் தயக்கம் கொண்டிருந்த போது, 1921 ம் ஆண்டிலேயே பிரிட்டீஷாரிடம் இருந்து பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்று மவுலானா ஹஸ்ரத் மொஹானி முழங்கினார். 1925-ம் ஆண்டில் நடைபெற்ற கான்பூர் மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவராக இவர் பொறுப்பேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய சமுதாயத்தின் பல்வேறு தரப்பு மக்களையும் அணிதிரட்டுவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி வகித்தது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளை 1936-ம் ஆண்டில் ஸ்தாபித்தது. இந்திய மக்கள் நாடக மன்றம் (இப்டா) 1943-ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. வெகுமக்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதிபூண்டிருந்த இவ்வியக்கங்கள் விடுதலை வேட்கையையும், சோஷலிச லட்சியத்தையும் நாடெங்கும் பரப்பின.  

நமது தேசத்தின் மீது பிரிட்டிஷ் அரசின் பிடி தளர்ந்த போது, தேசத்தின் விடுதலை நெருங்கிக் கொண்டிருந்த போது, பம்பாயில் நடைபெற்ற கப்பற்படை கலகத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவானது, இனி அதிகாரப் பிரயோகத்தின் மூலமாக இந்தியர்களை ஆளுவது சாத்தியமற்றது என்று பிரிட்டிஷாரை உணரச் செய்தது. எழுச்சிமிகு இடதுசாரி இயக்கத்தின் முன் போலீஸ் மற்றும் இராணுவம் உள்ளிட்ட பிரிட்டிஷாரின் அடக்குமுறை கட்டமைப்புகள் நொறுங்கிப் போயின. புதிதாகத் தோன்றியிருந்த இடதுசாரி இயக்கத்தின் போர்க்குணத்தை விரைவில் உணர்ந்து கொண்ட பிரிட்டிஷார், ஒன்றன்பின் ஒன்றாக சதி வழக்குகளைக் கட்டவிழ்த்துவிட்டனர் . எதிர்பட்ட  இன்னல்களுக்கு அஞ்சிடாத தோழர்கள் நாடெங்கிலும் இடதுசாரி இயக்கத்தைப் பரப்பினர்.

வீரஞ்செறிந்த கப்பற்படை கலகத்தைக் கண்டு பிரிட்டிஷார் கதிகலங்கி இருந்த போது, பம்பாயில் மாபெரும் வேலைநிறுத்தத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற பேரணியையும் கட்சி நடத்தியது. இது பிரிட்டிஷார் வெளியேறுவதைத்  தவிர்க்க முடியாததாக்கிவிட்டது. வெகுமக்கள் இயக்கங்களின் ஊடாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொருளாதாரப் பிரச்சனைகளை முறைப்படுத்தியதோடு, அவற்றை தேசிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இணைத்திட வித்திட்டது.

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பல்வேறு முற்போக்கான, ஏழை மக்களுக்குச் சாதகமான அம்சங்கள் அனைத்தும் அது போன்ற மக்கள் இயக்கங்களின் ஊடாக இடதுசாரிகள் முன்வைத்த கோரிக்கைகளே ஆகும்.

இத்தகைய மகத்தான வரலாற்றுப் பெருமையுடைய நாம், நம் முன் உள்ள எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு முறியடித்திட உத்வேகம் கொண்டெழ வேண்டும். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்- ஐ எதிர்கொள்வது தான் நம் முன் உள்ள மிக முக்கியமான சவால் ஆகும்.

ஆர்.எஸ்.எஸ்- பா.ஜா.க ஆட்சிக்கு வந்திருப்பது வெறும் ஆட்சிமாற்ற நிகழ்வு மட்டுமன்று. 2014 ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து ஒரு கட்சியை நீக்கிவிட்டு மற்றொரு கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றுவிட்ட நிகழ்வாக மட்டுமே புரிந்து கொண்டுவிட முடியாது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பது நமது ஜனநாயக குடியரசின் பண்புவகை சார்ந்த மாபெரும் பின்னடைவு ஆகும். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள, நமது தேசத்தை வரையறை செய்துள்ள உன்னதமான விழுமியங்களுக்கு எதிரான செயல்திட்டத்தை பா.ஜ.க கொண்டிருக்கிறது.

விடுதலைப் போராட்ட காலகட்டத்தின் முழுவதிலும் ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவே செயல்பட்டது. மகாத்மா காந்தியின் படுகொலையில் அந்த அமைப்பின் தலைவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆவர். ஆர்.எஸ்.எஸ் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்பதோடு சாதிய படிநிலைகளையும், பாகுபாடுகளையும் முன்னிறுத்தும் மனுஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கிறது. பெண்களுக்கு சமஉரிமையும், சமத்துவமும் அந்த அமைப்பில்  மறுக்கப்படுகிறது. இன்றுவரையில், ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

தேச விடுதலைக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தனர். இப்போது அரசாங்கத்துடன் நெருக்கமாக இருக்கும் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்கின்றனர்.

மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் பன்மைத்துவம் ஆகிய இலட்சியங்களைப் பெரும்பான்மைவாதம், வெறுப்புணர்வு மற்றும் ஒற்றைத்தன்மை கொண்டு மாற்றியமைப்பது தான் அவர்களின் செயல்திட்டம் ஆகும்.

வகுப்புவாதம் மனித வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் புரையோடிப் போக முயலுகிறது. சாதிய பாகுபாடும், வெறுப்புணர்வும், வன்முறைத் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகளைப் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான நமது போராட்டத்துடன் இணைத்து நாம் முன்னெடுக்க வேண்டும்.

மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்திட, நம்மைச் சூழ்ந்து வரும் பிரச்சனைகளை நாமே செயலூக்கத்துடன் முன்னெடுத்து தொடர்ந்து போராட வேண்டும். பின்னர், அந்தப் போராட்டங்களுக்கு அரசியல் வடிவம் கொடுக்க வேண்டும். சர்வதேச நிதி மூலதனத்தின் வளர்ச்சிப் போக்கால் நமது மக்கள் சுரண்டப்படுவதையும், சாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் நம் மக்களே உண்டாக்கி வரும் பாகுபாடுகளையும் நாம் உணர்ந்திடல் வேண்டும். இந்தப் போராட்டத்தைத் தத்துவார்த்த மற்றும் வரலாற்றுப் பொறுப்பாக ஏற்க வேண்டியது நமது பணியாகும்.

இடதுசாரிகள் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்-ஐ சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் ஆற்றல் உடையவர்கள்; தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு நிலையான கூட்டணியை உருவாக்கும் ஆற்றல் உடையவர்கள். அளப்பரிய தியாகம் மற்றும் போராட்டங்களின் ஒளிவீசும் மரபை நமது முன்னோர்கள் வடித்துச் சென்றுள்ளார்கள். நாம் அதனைச் செழுமைப்படுத்த வேண்டும்.

நமது கட்சியின் அமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய சமுதாயத்தில் நிலவி வரும் அனைத்து வகையான (சமூக, பொருளாதார, மற்றும் அரசியல்) அநீதிகளையும் ஒழித்திட நாம் உறுதியேற்க வேண்டும் – சமூகநீதி முன்னோடியான டாக்டர். பீமராவ் அம்பேத்கர் வழங்கியுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உயரிய நோக்கங்களை அடைய நாம் உறுதியேற்க வேண்டும்.

அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை கொண்ட இறுதி உரையானது நமக்கு வழிகாட்டும் ஒளிக்கீற்றாகத் திகழ்கிறது.

அராஜக போக்கு, தனிநபர் வழிபாடு ஆகியவற்றை விடுத்து, அரசியல் ஜனநாயகத்தை மட்டுமின்றி – சமூக ஜனநாயகத்தையும் ஸ்தாபிக்கப் பணியாற்றுமாறு அவர் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பியான அம்பேத்கர் போற்றிக் கொண்டாடிய இலட்சிய முழக்கங்கள் நிறைவேறாமல் இருப்பதை இப்போதும் நம்மால் காண முடிகிறது. வர்க்கமற்ற, சாதிகளற்ற சமுதாயம் என்ற இலட்சியத்தை அடைந்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாதையாக அமைந்திட வேண்டும்.

தமிழில்- அருண் அசோகன்
நன்றி – நியூ ஏஜ் 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button