கட்டுரைகள்

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கமும் – கட்டுரைச் சுருக்கத்தின் பகுதி – 3

“நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை வீழ்த்தப்பட்டு ‘சுதந்திரமான’ முதலாளித்துவச் சமுதாயம் இப்பூவுலகில் தோன்றிய பொழுது இந்தச் சுதந்திரம் உழைப்பாளிகளை ஓடுக்கவும் சுரண்டவும் அமைந்த புதியதோர் அமைப்பு முறையையே குறித்தது” என்பது உடனே தெளிவாக விளங்கலாயிற்று. இந்த ஒடுக்குமுறையின் வெளிப்பாடாகவும் இதற்கான கண்டனமாகவும் பல்வேறு சோஷலிசப் போதனைகள் உடனே தலைதூக்கத் தொடங்கின. ஆனால் ஆரம்பக் காலத்திய சோஷலிசம் கற்பனா சோஷலிசமாகத்தான் இருந்தது. அது முதலாளித்துவச் சமுதாயத்தை விமர்சித்தது. கண்டித்தது. சபித்தது; அந்தச் சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் என்று கனவு கண்டது; அதை விட மேலான ஓர் அமைப்பு முறையைப் பற்றி ஆகாயக் கோட்டை கட்டி வந்தது; சுரண்டுவது ஒழுக்கக்கேடான செயல் என்று பணக்காரர்களுக்கு உணர்த்த முயற்சித்தது. ஆனால் கற்பனா சோஷலிசத்தினால் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை.

“முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமை முறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை. முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புதிய சமுதாயத்தில் உருவாகக்கூடிய ஒரு சமுதாய சக்தியைக் கற்பனா சோசலிசத்தினால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை.”

இதற்கிடையில், நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் பண்ணை அடிமைமுறையின் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஐரோப்பா முழுவதிலும், குறிப்பாக பிரான்சில், ஏற்பட்ட புரட்சிகளானது, வர்க்கங்களின் போராட்டம் தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும் உந்து விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின.

நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராக அரசியல் சுதந்திர இலட்சியத்துக்கு கிடைத்த எந்தவொரு வெற்றியும் அவ்வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்து விடவில்லை. முதலாளித்துவ சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களுக்கு இடையேயான வாழ்வா? சாவா? போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான, ஜனநாயக அடிப்படையில் வளர்ச்சியுற்றுவிடவில்லை.

வேறு எவருக்கும் முன்பாக, மார்க்சுக்குத்தான் உலக வரலாறு போதிக்கும் படிப்பினையை இதிலிருந்து கண்டறியவும், அந்தப் படிப்பினையை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய போதனை தான் அந்த முடிபாகும்.

நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும், பிரகடனங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள்.

பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும், அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள். மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.

இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும், புதுமையைப் படைக்கவும் திறன் பெற்ற, சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.

மார்க்சின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த ஆன்மிக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.

தனது வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாகவே பாட்டாளி வர்க்கம் அறிவொளியும் கல்வியும் பெற்று வருகிறது; முதலாளித்துவ சமுதாயத்திற்குரிய சார்பு கருத்துக்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது; தன் அணிகளை நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது; தனது வெற்றிகளின் வீச்சை அளந்தறிந்து கொள்ள கற்று  வருகிறது; தன் சக்திகளை எஃகு போல் திடப்படுத்தி வருகிறது; தடை செய்ய முடியாதபடி வளர்ந்து வருகிறது.

முற்றும்.

மாமேதை லெனினின் “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” கட்டுரைத் தொகுப்பிலிருந்து 

தொடர்புக்கு: சரவணன் வீரையா – 9488752879

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button