வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.
செய்தித்தொகுப்பு: A. P. மணிபாரதி
கோவை – பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ பாரதி நகர் பகுதிக்கு வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்று (18.01.2023) மனு கொடுக்கப்பட்டது.
கட்சியின் மாநில பொருளாளர் எம் ஆறுமுகம் மாவட்ட செயலாளர் சி சிவசாமி ஜெகநாதன் சண்முகசுந்தரம் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கொடுத்த மனுவில், ” கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் நகராட்சி, ஸ்ரீ பாரதி நகர் பகுதியில் சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் குடும்பங்கள் ஆகும்.
அரசால் வழங்கப்பட்ட மனையில் அவர்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். அரசு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வசித்து வரும் வீடுகள் பாதுகாப்பு இல்லாத வீடுகளாகும். அப்பகுதியில் மின் விளக்குகள் கூட இல்லை.
மலையை ஒட்டிய பகுதியானதால் யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற மிருகங்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. மக்கள் அனுதினமும் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகிறார்கள். தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் வந்து முகாமிட்டு சேதங்களை ஏற்படுத்தியும் வருகிறது.
கடந்த 13.01.2023ஆம் தேதி இரவில் இரண்டு யானைகள் அப்பகுதிக்கு வந்து சுந்தரவேல், தெய்வானை ஆகியோர் குடியிருப்புகளை துவம்சம் செய்துள்ளது. அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தப்பித்துள்ளார்கள். அதேபோல், கடந்த நவம்பர் மாதம், ரங்கசாமி, லட்சுமி ஆகியோர் குடியிருந்து வரும் வீட்டையும் இடித்துத் தள்ளி, வீட்டில் இருந்த அரிசியை முழுமையாக சூறையாடி சென்றுள்ளது.
ஒவ்வொரு முறையும் வனத்துறை அதிகாரிகள் வந்து பார்த்துச் செல்லுகிறார்கள் தவிர பாதுகாப்பு நடவடிக்கை இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.
அப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் மிருகங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை கண்காணிக்க வாய்ப்பில்லை. அப்பகுதியில் வழக்கமாக வந்து கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக பஸ் மாலை 5 மணிக்கு மேல் வருவதில்லை.
இதனால் கூலி வேலைக்குச் சென்று வரும் ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை முடித்து பஸ் இல்லாததால், வேலைக்கு சென்று வருவதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழக பஸ் இரவு ஏழரை மணிக்கு பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து இப்பகுதிக்கு வந்து செல்வது கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக இப்பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
- உடனடியாக அப்பகுதியில் மின்விளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
- யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கையாக அகழிகள் வெட்டி, மின் வேலி அமைத்துக் கொடுக்கவும் வேண்டும்.
- நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ் மீண்டும் பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீ பாரதி நகர் பகுதிக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பாதுகாப்பில்லாத மண்சுவர் ஓட்டு வீடுகளை அப்புறப்படுத்தி, அரசு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தார் ரோடு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்”. என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.