வங்கிகள் வேலைநிறுத்தத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு – டி. ராஜா
டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள வங்கிகள் வேலைநிறுத்தத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை எதிர்த்து நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது. வங்கிகள் தனியார்மயத்தை கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
வங்கிகளை நாட்டுடைமையாக்கும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நின்று களம் கண்டது; ஊரகப் பகுதி மக்களுக்கும் வங்கிச் சேவைகள் சென்றடைவதை உறுதிப்படுத்தியதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது ஆகும்.
பொதுமக்களின் பணம் பாதுகாக்கப்பட வேண்டும்; பொதுமக்களின் செல்வம் அவர்களின் மேம்பாட்டிற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் . கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு டி ராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.