தமிழகம்

ரூ.44.30 கோடி மதிப்பீட்டில் காவல் துறை, சிறைகள், சீர்திருத்தப் பணிகள் துறைக் கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.44.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக் கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20.11.2021) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் 44 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 270 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 2 காவல் துறைக் கட்டிடங்கள், 6 உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதல்வர் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம் ஆயுதப்படை வளாகம், நீலகிரி மாவட்டம் – குன்னூர், சோலூர்மட்டம், ஊட்டி இருப்புப்பாதை மற்றும் ஸ்டோன் அவுஸ், திருவள்ளூர் மாவட்டம் – கவரப்பேட்டை, தென்காசி மாவட்டம் – சேந்தமரம் ஆகிய இடங்களில் 40 கோடியே 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 270 காவலர் குடியிருப்புகள், மதுரை மாவட்டம் – ஆஸ்டின்பட்டி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் – வெளிப்பாளையம் ஆகிய இடங்களில் 1 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையக் கட்டிடங்கள் சென்னை மாவட்டம் – வால்டாக்ஸ் சாலையில் உள்ள பெண் காவலர் ஓய்வு இல்லத்தில் பெண் உதவி ஆய்வாளர் முதல் பெண் காவல் துணை கண்காணிப்பாளர் வரையிலானவர்கள் தங்குவதற்காக 86 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் தங்கும் அறைகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் – வாணியம்பாடியில் 54 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

மேலும், சேலம் மாவட்டம் – சேலம் மத்திய சிறை வளாகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பணியாளர்களுக்கான 6 உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் என மொத்தம், 44 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக் கட்டிடங்களைத் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் சுனில் குமார் சிங், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முனைவர் அ.கா.விசுவநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button