கட்டுரைகள்

ராம ராஜ்யத்தின் இப்போதைய நடைமுறை : அரசியல் கட்சிகளை உடைக்கும் சகுனி வேலையே !

 –த.லெனின்

மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு, நரித்தனத்தோடு, அதிகாரத்தைச் சுவைப்பதே வலதுசாரி வகைப்பட்ட பாசிச அரசியலின் பொதுத்தன்மையாகும். இதற்கு ஏற்ற வகையில் செயல்படுவதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வழிநடத்தப்படும் பா.ஜ.க. பா.ஜ.க. ஒரு வேறுபட்ட கட்சி, புதிய வகைப்பட்ட கட்சி, மாறுபட்ட முறையில் சிந்தித்துச் செயல்படுவதாகத் தன்னை எப்போதும் கூறிக் கொள்ளும். ஆனால், மக்களைக் கூறுபோட்டு, மோதவிட்டு அதிகாரத்திற்கு வரும் என்பதை அதன் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தெளிவாக்கி வருகிறது. இது கலவரங்கள் மூலம் தேர்தல் நிலவரங்களை தன்னைச் சார்ந்து கட்டியெழுப்பும் வகுப்புவாத விஷ அரசியலை அடித்தளமாகக் கொண்டதாகும்.

வாஜ்பாய், அத்வானி காலம் வரை ஒழுக்கம் சார்ந்து இயங்குவதாக ஒரு பிம்பம் காட்டப்பட்டது. ஆனால் இப்போது அது நொறுக்கப்பட்டு அதிகாரக் கோர பற்களை காண்கிறோம். மோடியும் – அமித்ஷாவும் கடந்து வந்த பாதை அவர்களது சொந்தக் கட்சியிலும் பல திடீர் திருப்பங்களையும், திகிலும் நிறைந்த காட்சிகளாக விரிகிறது.
குஜராத்தில் பா.ஜ.க.வை வளர்த்த மூத்த தலைவர் கேசுபாய் பட்டேல் இரண்டு முறை அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். இவரை எதிர்த்துதான் வகேலா அங்கு கட்சிக்குள்ளேயே கலகம் செய்தார். பா.ஜ-.க.வை உடைத்து சட்டமன்ற உறுப்பினர்களோடு வெளியேறி காங்கிரசுக்கு உதவியவர். வயது மூப்பின் காரணமாக கேசுபாய் பட்டேலின் அரசு செயல்பாடு குன்றி ஊழலில் திளைத்த போது, பூஜ் பகுதியில் ஒரு பெரும் பூகம்பத்தையும் அது எதிர்கொண்டது. இந்த நிலையில்தான் அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஒரு புதிய முகம் தேவை என்று மோடியை தேர்ந்தெடுக்கிறார்.

கேசுபாய் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த ஹெரன் பாண்டியா ஆர்.எஸ்.எஸ்.சின் தீவிர உறுப்பினராவார். அவர் அகமதாபாத்தில் கடந்த 2003ஆம் ஆண்டில் ஒரு காலை நேர நடைபயிற்சிக்கு பிறகு அவரது காரில் ஓய்வாக அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றுவரை அந்தக் கொலையாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவரது மனைவி ஜக்குருதி பாண்டியா கூறுகிறார். என்ன செய்தி என்றால், இவர் மோடியை கடைசி வரை எதிர்த்தவர். அதனால் தான் இவர் கொல்லப்பட்டார் என்று சங்கப் பரிவாரங்களுக்குள்ளேயே ஒரு பேச்சும் உண்டு.

மோடி முதலமைச்சாரன பிறகு அவரது அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆனந்தி பென் பட்டேல் மீது மோடி செல்வாக்கு செலுத்துகிறார் என்று அவரது கணவர் மபட்லால் பட்டேல் அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதியது பிரசித்தமானது. ஆனால், பின்னர் ஆனந்தி பென் பட்டேல் முதல்வராகவும் ஆக்கப்பட்டார். அமித்ஷா மோடிக்கு அனைத்து வகைகளிலும் உதவி புரிந்தும், கட்சிக்குள் இருந்த எதிர்ப்பாளர்களை அப்புறப்படுத்தியும் மோடியின் பிம்பத்தை நிலைநிறுத்தியவர் ஆவார்.

மிகவும் பணம் கொழிக்கும் கிரிக்கெட் வாரியமான குஜராத் கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பை அமித்ஷா கைப்பற்றினார். அன்றைய தலைவரும் காங்கிரஸ் அனுதாபியுமான நாகிரி அமின் கடந்த 2012ஆம் ஆண்டு பா.ஜ.க.வுக்குத் தாவினார். மீண்டும் அவருக்கு சூரத் மாவட்ட கிரிக்கெட் வாரிய பதவி அளிக்கப்பட்டது. அவர் தான் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவை அந்த அமைப்பிற்கு துணைச் செயலாளராக தேர்ந்தெடுத்தவர்.
அரசியலில் மட்டும் ஆள் பிடிக்கவில்லை. பணம் கொழிக்கும் கிரிக்கெட் வாரியத்திலும், ஆள்பிடிப்பதை ஒரு அரசியல் கலையாகவே மேற்கொண்டதை இதன் மூலம் அறிய முடியும்.

மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ-.க. கடந்த எட்டு ஆண்டுகளில் எண்ணற்ற கட்சிகளைப் பிளந்து பல மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தது. இப்படி கட்சியை உடைத்து ஆட்சிகளைக் கவிழ்த்ததன் மூலம் பத்து மாநிலங்களில் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. மற்றவர்களுக்கு எந்த வகையில் வேறுபட்ட கட்சி?

மகாராஷ்டிர அரசியல் களத்தில் தனது முந்தைய கூட்டணிக் கட்சியான சிவசேனாவில் ஏக்நாத் சிண்டேவை ஊக்கப்படுத்தி 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்களை கவர்ந்திழுத்து உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்து புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 15 இடங்களில் காங்கிரஸ் வென்றது. தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. நான்கு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் அந்த ஆட்சி நீடித்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. பாச வலை விரித்து இழுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது. இதற்காக மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தெரியாமல் கவர்னரே விதிகளுக்குப் புறம்பாக நியமித்து அந்த ஆட்சியை கடந்த 2021 ஆம் ஆண்டு கவிழ்த்தது இவர்களது அரசியல் பண்பாட்டை உலகிற்கே பறைசாற்றியது.

கடந்த 2018ல் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 114 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பா.ஜ-.க. 109 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளின் ஆதரவின் மூலம் 121 பேரின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. கமல்நாத் முதல்வரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே மன்னர் குடும்ப வாரிசான ஜோதிராய் சிந்தியாவின் ஆதரவோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேரை பா.ஜ-.க. தங்கள் வசம் கொண்டு வந்தது. அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லி பின்பு தன் கட்சியில் இணைத்தது பா.ஜ.க. பெரும்பான்மை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்பு பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.

கடந்த 2018ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 இடங்களில் 104 இடங்களில் பா.ஜ-.க. வெற்றி பெற்றது. குதிரை பேரம் நடத்தியும், பண ஆசை காட்டியும், எவரையும் இழுக்க முடியாத காரணத்தால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார் எடியூரப்பா. 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். ஆனால், ஓரு ஆண்டிலே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேரையும், ம.ஜ.த. சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தது. 16 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியை ராஜினாமா செய்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை இழந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க.வின் எடியூரப்பா புறவாசல் வழியே ஆட்சிக்கு வந்தார்.

சிக்கிம் கதையோ வேறு விதமானது. கடந்த 2019ல் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17ல் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களில் சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வெற்றி பெற்றது. ஒரு இடம் கூட வெற்றி பெறாத பா.ஜ.க. சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏ.க்களை குதிரைபேரம் பேசி வளைத்து சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. எஞ்சிய சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த இரண்டு பேரும் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைந்தனர்.

மேகாலயாவில் கடந்த 2018ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அங்கு மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21ல் காங்கிரசும், 19ல் மக்கள் தேசிய கட்சியும் வென்றது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ.க. தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிறு கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது.
கடந்த 2015ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 இடங்களிலும், இதனோடு கூட்டணி அமைத்த ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ்குமார் 71 இடங்களிலும் வென்று கூட்டணி ஆட்சி அமைத்தனர். ஆனால், இரண்டே ஆண்டுகளில் 2017ல் கூட்டணியை உடைத்து பா.ஜ.க. ஆதரவோடு நிதிஷ்குமார் முதல்வராகவும், பா.ஜ-.க.வின் சுஷில்குமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இப்படிச் செய்தவர்கள்தான் மகாராஷ்டிராவில் தன்னோடு கூட்டணி அமைத்த சிவசேனா துரோகம் இழைத்துவிட்டதாகக் கூச்சலிட்டனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மீதமுள்ள 13ல் பா.ஜ.க. வென்றது. ஆனால், திடீரென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து 12 எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசம் இழுத்து அவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவியும் தந்து ஆட்சி அமைத்தது. அத்தோடு மாநில கட்சியான எம்.ஜி.பி. கட்சியின் மூன்று எம்.எல்.ஏ.க்களில் இரண்டு பேரை தங்களோடு இணைத்துக் கொண்டது. தற்போது 2022ல் 20 இடங்களில் வெற்றிருக்கும் சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 28 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பா.ஜ.க. 21 இடங்களை வென்றது. காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாகா மக்கள் முன்னணி, சுயேட்சைகளின் ஆதரவோடு பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஷ்யாம் குமார் சிங்கை தங்கள் பக்கம் இழுத்து பா.ஜ-.க.வின் சார்பில் பிரேன் சிங்கை முதல்வராக்கினர். மேலும் 7 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் பா.ஜ-.க.வில் ஐக்கியமாகினர்.

அதுபோலவே 2014ல் நடைபெற்ற அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 42 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ். வெறும் 11 இடங்களைப் பெற்ற பா.ஜ.க. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கலிகோ புல் தலைமையில் காங்கிரசை உடைத்து கலிபோ புல்லை முதல்வராக்கினர். இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் நபாம் உச்சநீதிமன்றம் சென்றார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநர் ராஜ்பவாரை கண்டித்ததுடன் ஆட்சிக் கவிழ்ப்பு செல்லாது என்றும் கடந்த 2015 டிசம்பர் 15ல் இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து 2016 ஜூலை 16ம் தேதி காங்கிரசின் நபாம் தூகி மீண்டும் முதல்வரானார். சில நாட்களில் அவர் பதவி விலக காங்கிரஸ் சார்பில் பீமா காண்டு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மன வருத்தத்தில் இருந்த கலிகோ புல் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அரசு இல்லத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சிக்கலான சூழ்நிலையில் காங்கிரசின் புதிய முதல்வரான பீமா காண்டு 40 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அருணாச்சல் மக்கள் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்த அவர் மீண்டும் அருணாச்சல் மக்கள் கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார். மீண்டும் 2019ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவரே வென்று தற்போது அருணாச்சல பிரதேச முதல்வராகத் தொடர்கிறார்.

இத்தனை சித்து வேலைகளையும் நடத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்கள் ராமனின் ஒழுக்கம் குறித்து ஆட்சித் திறன் குறித்து ஆர்ப்பாட்டமாக பேசி வருகின்றனர். ராம ராஜ்யம் என்கிற முழக்கம் நடைமுறையில் பண ஆதிக்க ரவுடிகள் ஆதிக்கம் தான் என்பதை நிரூபித்துள்ளது. குதிரைபேரத்தில் ஈடுபடுவது, ஒன்றிய அரசின் கவர்னர்கள், சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை போன்றவற்றை பயன்படுத்தியும் பதவி ஆசை காட்டியும், பணத்தை இறைத்தும், கட்சிகளை உடைத்து ஆட்சி அமைக்கும் கலையைத்தான் அமித்ஷாவின் சாணக்கியம் என்று ஊடகங்கள் பேசுகின்றன. இது சகுணி வேலை என்பதுதான் உண்மை.

தொடர்புக்கு: 94444 81703

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button