ராகுல் காந்தி – தகுதிநீக்கம் – தீவிரமான பாசிச தாக்குதல்: ஜனநாயக அழித்தொழிலை தடுத்து நிறுத்த ஒருங்கிணைவோம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
திரு நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக சூரத் நீதிமன்றம் விசாரித்து வந்த அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி, பிணையும் தந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் தண்டனை செயலுக்கு வராது என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒன்றிய அரசின் செகரட்டரி ஜெனரல் திரு ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் தகுதி இழந்ததாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையைப் பறித்து உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முன்னணி பங்கு வகித்ததும், முதல் மூத்த அரசியல் கட்சியும், நாடாளுமன்றத்தின் முதன்மை எண்ணிக்கை பெற்றுள்ள எதிர்கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரைத் தகுதி நீக்கம் செய்திருப்பது அசாதாரண நடவடிக்கையாகும்.
பாசிச வகைப்பட்ட தாக்குதலின் தீவிர வடிவமாகும். இனி நாட்டில் எவரும் பிரதமரின் நடவடிக்கையை விமர்சித்து பேச முடியாது என்ற சர்வாதிகார அடக்குமுறையின் அறிவிப்பாகும்.
குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இன அழிப்பு தாக்குதல் பற்றி பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் கூறும் உண்மைகளையும், நாட்டின் செல்வாதாரங்களை கணக்கியல் மோசடி செய்து கௌதம் அதானியின் சட்டவிரோத கொள்ளை பற்றி ஹிண்டன் பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கை வெளிப்படுத்தும் செய்திகளையும் நாட்டு மக்களின் கவனத்தில் இருந்து திசைதிருப்பும் நோக்கம் கொண்ட நடவடிக்கையுமாகும்; அரசியல் அமைப்பு சட்டத்தை சிதைக்கும் மரண அடியாகும்.
நாட்டை அறிவிக்கப்படாத அவசரநிலை நெருக்கடிக்குள் நெட்டித் தள்ளி, ஜனநாயக உரிமைகளை மறுத்து வரும் பாஜக ஒன்றிய அரசின் இரக்கமற்ற ஜனநாயகப் படுகொலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் ஜனநாயக சக்திகளும், தேசபக்தர்களும், மதச்சார்பற்ற மாண்பு காக்கும் நல்லெண்ணம் கொண்டோர், பகுத்தறிவாளர்கள், அறிவியல் சிந்தனை கொண்டோர் மனிதாபிமான உணர்வு கொண்டோர் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.