ரஷ்யா-உக்ரைன் மோதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜாவின் பிரத்யேக கட்டுரை
போரை நிறுத்திடுக! பேச்சுவார்த்தையைத் தொடங்கிடுக!
டி. ராஜா
உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் இராணுவத் தாக்குதல் உலக அரங்கின் மையப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வரும் ரஷ்ய இராணுவத் தாக்குதல் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வரும் கடுமையான வாக்குவாதங்கள், அந்நாட்டின் போர் சூழ்ந்த பகுதிகளுக்கு அப்பால் நெடுந்தொலைவில் உள்ள, பகைமையுணர்வு மற்றும் போர்வெறி கொண்டவர்களும் பங்கேற்கும் முழு அளவிலான போராக இந்தத் தாக்குதல்களை மாற்றிவிடக் கூடும் என்பதை உணர்த்துகின்றன.
இந்தியாவிலும் கூட, மக்கள் இந்த மோதல் தொடர்பான அச்சவுணர்வை வெளியிட்டு வருகிறார்கள். நாடுகள் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ள இன்றைய உலக அமைப்பில், புவிசார் அரசியல் சக்திகளுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலில் இருந்து நாம் ஒதுங்கிக் கொள்வது என்பது சாத்தியமன்று. எனவே, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெறும் மோதலுக்கான காரணங்களைக் கண்டறிந்து நாம் உரிய நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
போல்ஷிவிக் புரட்சிக்குப் பின்னர், பல்வேறு பண்பாடுகள் மற்றும் இனங்களைக் கொண்ட சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய (National Self-determination) உரிமைக்காக லெனின் வலுவான ஆதரவுக் குரலெழுப்பினார். சோவியத் ஒன்றியத்தின் அரசமைப்பு இந்தப் பன்மைத்துவதை அங்கீகரித்தது. சோவியத் ஒன்றியத்தில் பல்வேறு இனங்களும் இணக்கமான வாழ்வை மேற்கொள்வதற்கான சரத்துகள் மட்டுமின்றி ஒன்றிய அமைப்பில் இருந்து பிரிந்து செல்வதற்கான உரிமையும் (Right to Secede) அரசமைப்பில் இடம்பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரில் சோவியத் அரசு நாஜிக்களை வெற்றி கொண்டதும், உலகம் முழுமைக்குமான சோஷலிசத்தின் அறைகூவலும், வாஷிங்டன் மற்றும் லண்டனில் இருந்த முதலாளித்துவ சக்திகளைக் கலக்கமுறச் செய்தன. மானுட விடுதலைக்கான சோஷலிசத்தின் வீறுநடையைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் கவலையானது, பனிப்போர் சூழலில் ஒரு இராணுவ கூட்டணிக்கு வித்திட்டது; 1949 ஆம் ஆண்டில் நேட்டோ (North Atlantic Treaty Organisation) அமைப்பு உருவானது. தொடக்க காலத்தில் இருந்தே, ஐரோப்பாவில் ஒரு வலுவான இராணுவ கட்டமைப்பை நிலைப்படுத்துவதே நேட்டோ அமைப்பின் பாத்திரமாக இருந்து வருகிறது. சோவியத் ஒன்றியம் மற்றும் அதனுடன் நட்புறவு கொண்டிருந்த சோஷலிச நாடுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற முதன்மையான குறிக்கோளுடன் அமெரிக்காவின் அயலுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாகவே நேட்டோ அமைப்பு செயல்பட்டு வருகிறது.
சோவியத் ஒன்றியம் சிதைவுற்ற பிறகு நேட்டோ அமைப்பு நீடித்திருக்க வேண்டியதில்லை. ஆனால், நேட்டோ அமைப்பு தொடர்ந்து இயங்கி வருவதுடன், விரிவடைந்தும் வருகிறது. இந்தப் போக்கு, 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நேட்டோ அமைப்பு கிழக்குப் பகுதிகளில் இராணுவ விரிவாக்கத்தை மேற்கொள்ளாது என்றும், ரஷ்யப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்றும் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கு எதிரானது ஆகும்.
கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் நேட்டோ அமைப்பின் இராணுவ விரிவாக்கம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் நேட்டோவில் சேருவதற்கான வாய்ப்பு மற்றும் இராணுவ செலவின அதிகரிப்பு ஆகியவற்றால் அமெரிக்காவின் இராணுவ-தொழில் துறை பெரிதும் பயனீட்டியது.
நேட்டோ அமைப்பு உருவான போது, 12 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதோடு, அவற்றில் 28 உறுப்பு நாடுகள் ஐரோப்பா கண்டத்தில் உள்ளன. ரஷ்யாவைத் தவிர்த்து, முன்பு வார்சா ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாக இருந்த நாடுகளும் நேட்டோ அமைப்பில் உறுப்பு நாடுகளாகச் சேருவதற்கான வாய்ப்பு 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ரஷ்ய எல்லைகளில் நேட்டோவின் விரிவாக்கம், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை போலந்து நாட்டில் நிறுத்தி வைத்திருப்பது உள்ளிட்ட நேட்டோவின் நடவடிக்கைகள், ரஷ்யாவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் மற்றும் ஐரோப்பாவில் அமெரிக்க மேலாதிக்கத்தின் ஏஜெண்டாக நேட்டோ செயல்பட வேண்டும் என்ற அந்த அமைப்பின் புதிய நோக்கத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. நேட்டோ அமைப்பின் இராணுவ விரிவாக்கம் குறித்து கடந்த இருபது ஆண்டுகளாக ரஷ்யா தெரிவித்து வரும் கவலைகள் நியாயமானது ஆகும்.
உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மைச் சமூகத்தின் மீதான தாக்குதல்கள், அந்தப் பகுதியில் தொடரும் அமெரிக்க தலையீடு ஆகியவற்றில் இருந்து தான் தற்போதைய மோதல் வெடித்துக் கிளம்புகிறது. அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் அப்பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். உக்ரைன் இராணுவப் படையினருடன் கூட்டு இராணுவப் பயிற்சி மற்றும் அதிநுட்ப ஆயுதங்களை உக்ரைன் நாட்டுக்கு அனுப்பி வைப்பது போன்ற இராணுவ நடவடிக்கைகள் ரஷ்யாவைத் தூண்டுவதற்கு ஏதுவாக அமைந்தன. டான்பாஸ் பகுதி தொடர்பாக மின்ஸ்க் (Minsk) ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துகளை உக்ரைன் ஆட்சியாளர்கள் போதிய அளவிற்கு நடைமுறைப்படுத்தவில்லை. கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் நேட்டோவின் விரிவாக்கம் தொடரக் கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள உக்ரைன் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளுடன் நேட்டோ இராணுவ ரீதியாக மேலும் இணக்கமாகச் செயல்படுவதுடன், அதன் விரிவாக்கத்தையும் தொடர்ந்து வருகிறது. இவை அனைத்தும் ரஷ்யாவில் அச்சவுணர்வை உருவாக்கியதோடு, உக்ரைன் மீதான இராணுவத் தாக்குதலுக்கும் வித்திட்டது.
கடந்த காலங்களில், ஈராக் மற்றும் யூகோஸ்லாவியா மீது போர் தொடுக்கப்பட்ட போது ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளை நேட்டோ அமைப்பு சிறிதும் வெட்கமின்றி மேற்பார்வையிட்டு வந்தது. ரஷ்ய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புவதற்கான அதிகாரமோ, தார்மீக அடிப்படையோ அவர்களுக்கு இல்லை. அதே சமயம், நேட்டோவின் தூண்டுதலுக்கான ரஷ்யாவின் பதிலடியும் சரிநிகர் சமமற்றது ஆகும். ரஷ்யாவின் இந்த முழு வீச்சிலான தாக்குதல் உக்ரைன் நாட்டின் இறையாண்மையையும், பிரதேச ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்ததோடு சர்வதேச சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது ஆகும்.
சோவியத் ஒன்றியம் சிதைவுற்ற பின், முதலாளித்துவ தன்னலக் குழுக்கள் அரசைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டன; ரஷ்யா ஒரு எதேச்சதிகார நாடாகிப் போனது. பிராந்திய மட்டத்தில் தலைமையேற்க வேண்டும் என்ற ரஷ்ய அபிலாஷைக்கான குறியீடுகள் சில தென்படுகின்றன. ‘மாபெரும் ரஷ்யாவை’ மீட்டுருவாக்கம் செய்திட வேண்டும் என்று புதின் விரும்புகிறார். இது போன்ற விருப்பங்கள் அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை மேலும் சீர்குலைக்கும். ஆனால், நேட்டோ போன்ற அமைப்பு ஒருபோதும் இதற்குத் தீர்வாகாது. நேட்டோவும், ரஷ்ய தன்னலக் குழுக்களும் அந்தப் பகுதியை மோசமான சூழலுக்குள் ஆழ்த்தின. அதன் விளைவாக எண்ணற்ற மக்களின் உயிர் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்து வருவதை நாள்தோறும் நாம் கேள்விப்படுகிறோம். இரு தரப்பிலும், உழைக்கும் மக்கள் மடிந்து கொண்டிருக்கும் துயரமான நேரத்தில், ஆயுத தொழில்துறை அதன் கருவூலத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறது. எனவே, ரஷ்யா உக்ரைனில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்; பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஸ்தூலமான எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை என்ற போதும் இந்தப் பிரச்சனைக்கு, வேற்று நாடுகளின் தலையீடுகள் இன்றி, பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண இயலும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் போர் முடிவுக்கு வர வேண்டும்; அமைதி நிலவ வேண்டும்.
இந்தியாவில் உள்ள நம்மைப் பொறுத்தவரையில், தாக்குதல் நடைபெற்று வரும் பகுதிகளில் இருந்து இந்திய குடிமக்களை, குறிப்பாக மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதுதான் நமது முதன்மையான நோக்கம் ஆகும். இந்திய அரசாங்கம் உரிய தருணத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது, அங்கு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மேலும் பல இன்னல்களை உண்டாகியுள்ளது. அரசாங்கத் தரப்பில் அளிக்கப்பட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் தெளிவற்றவைகளாக, முரண்பட்டவைகளாக இருந்தன. முன்னோக்கு தன்மையற்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக நவீன் சேகரப்பா எனும் இந்திய மாணவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் மரணமடைந்தார். பிரதமரோ, தேர்தல் நடைபெற்று வரும் உத்தர பிரதேச மாநிலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக ரஷ்ய-உக்ரைன் மோதலைச், சிறிதும் வெட்கமின்றிப், பயன்படுத்திக் கொள்ள முயலுகிறார்.
ஈராக் போரின் போது, நமது தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘ஏர் இந்தியா’ 1,70,000 க்கும் மேற்பட்ட நமது மக்களை வெற்றிகரமாக அங்கிருந்து மீட்டது. தற்போது அந்நிறுவனம் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட நிலையில், விமானப் போக்குவரத்து துறை நெருக்கடியான இந்தச் சூழலிலும் லாபமீட்டவே முயலுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, மார்தட்டிக்கொள்வது பா.ஜ.க வின் வழக்கமான போதும், உலக அரங்கில் இந்தியா அதன் மதிப்பையும், சிறப்பு நிலையையும் மிகப் பெரிய அளவில் இழந்துள்ளது. அணிசேரா கோட்பாட்டின் அடிப்படையில் இதர நாடுகளுடன் நாம் கொண்டிருந்த அமைதியான நல்லுறவுகளை விலையாகக் கொடுத்து மோடி அரசாங்கம் அமெரிக்க நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது.
எந்தவொரு விஷயமும் பா.ஜ.க மற்றும் பிரதமருக்கு தேர்தல் ஆதாயத்திற்கான விஷயமாக இருந்தாலும் கூட, நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் நெடுந்தொலைவில் இருப்பதாகத் தென்பட்டாலும் கூட, பகைமையுணர்வு கொண்டிருக்கும் தரப்பினரிடம் சமரச முயற்சியின் மூலமாக இந்தப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண இந்தியா முயல வேண்டும்.
போர் ஒருபோதும் தீர்வை அளிக்கப்போவதில்லை என்பதால் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். போர் முடிவுற வேண்டும்; அமைதி நிலவ வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம். போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்றால், அணு ஆயுதப் பிரயோகம் கொண்ட உலகப் போர் மூளுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
தமிழில் – அருண் அசோகன்.