மோடி ‘போட்ட’ ரூ. 15 லட்சத்தில் வீடு கட்டிய விவசாயி…
அவுரங்காபாத், பிப். 11 – கடந்த 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணம் அனைத்தும் மீட்கப்பட்டு, இந்தியர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் பிரதமராகி 7 ஆண்டுகள் ஆகியும், ரூ. 15 லட்சம் இப்போதுவரை யாருக்கும் வந்ததாக இல்லை. இந்நிலையில்தான், மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி, வங்கிக் கணக்கில் ‘போட்ட’ ரூ. 15 லட்சத்தில் புதிய வீடு கட்டியதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம், பைதான் பகுதியைச் சேர்ந்தவர் ஞானேஷ்வர் ஓட்டே. விவசாயி ஆவார். இவரது ஜன்தன் வங்கிக் கணக்கில் கடந்த 2021 ஆகஸ்டில் ரூ. 15 லட்சத்து 34 ஆயிரத்து 624 திடீரென டெபாசிட் ஆகியுள்ளது. முதலில் எப்படி தனக்கு இந்தளவு பணம் வந்தது என்பது அந்த விவசாயிக்கே புரியவில்லை. இருப்பினும், பிரதமர் மோடிதான் 2014-இல் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாக எண்ணி மகிழ்ச்சி அடைந்த அவர், இதற்காக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். பின்னர் வங்கியில் வந்த பணத்தில் ரூ. 9 லட்சத்தை எடுத்து, சொந்த வீடுகட்ட வேண்டும் என்ற தனது நீண்டகாலக் கனவை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். இந்நிலையில்தான், ஓட்டேவின் கணக்கில் விழுந்த பணம் மோடி போட்டதில்லை என்றும், பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகவும், 6 மாதங்கள் கழித்து, ஒட்டேவுக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதாவது, ரூ. 15 லட்சம் பணம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், அது தவறுதலாக விவசாயி ஞானேஷ்வர் ஓட்டே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் விவசாயி ஞானேஷ்வர் ஓட்டே கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதே சுமார் 4 மாதங்களுக்குப் பிறகுதான் கிராம பஞ்சாயத்துக்கு தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து பணத்தைத் திருப்பித் தருமாறு, வங்கி நிர்வாகம் தற்போது நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது விவசாயி ஞானேஷ்வர் ஓட்டேவைக் கவலை அடையச் செய்துள்ளது. “பிரதமர் மோடியால் இந்த தொகை அனுப்பப்பட்டது என்று நினைத்துத்தான் பணத்தைச் செலவிட்டேன். தற்போது வீடு கட்ட செலவழித்த ரூ. 9 லட்சத்தை எப்படி தரப்போகிறேன் என தெரியவில்லை” என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். வங்கியிலிருந்து எடுக்கப்படாமல் இருந்த ரூ. 6 லட்சத்தை மட்டும் நேர்மையாக ஓட்டே திருப்பி அளித்துவிட்டார். இதற்கு முன்பு, பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்ற விவசாயியும், தனது வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ. 5.5 லட்சத்தை, மோடி தருவதாகச் சொன்ன ரூ. 15 லட்சத்தில் முதல் தவணை எனக் கருதி, மினிமம் பேலன்ஸ் கூட வைக்காமல் செலவழித்து விட்டது முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.