மே தின வாழ்த்துக்கள்!
சமூக வளர்ச்சியின் விசை உழைப்பு சக்தி தான் என்பதை கண்டறிந்த பின்னர், உழைப்பு சக்தியின் உயிர் வடிவமாக உள்ள உழைக்கும் மக்கள் உரிமைகள் பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1886 மே முதல் நாளில், உழைக்கும் மக்கள் முதன் முறையாக அமைப்பாய் திரண்டு வேலை நேரத்தை முறைப்படுத்தும், கோரிக்கைகளை முன் வைத்து, தெருக்களில் அணிவகுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்று தொழிலாளர் அணிவகுப்பு அன்று நடந்த இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. முன்னணி தலைவர்கள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர். இதனால் எழுச்சி பெற்ற உழைக்கும் மக்கள் சாதி, மத, மொழி மற்றும் நாடுகளின் எல்லைகளை கடந்து, உலகம் முழுவதும் மே மாத முதல் நாளை உழைக்கும் மக்கள் உரிமைகள் பெறும் போராட்ட உறுதி ஏற்பு நாளாக ஆண்டுதோறும் மே தினமாக கடைபிடித்து வருகின்றனர்.
ஆதிப் பொதுவுடைமை சமூகம் மறைந்து, உழைப்பால் உருவாகும் சமூக செல்வத்தை மூலதன சக்திகள் அபகரித்து வரும் ஆதிக்கம் தொடங்கிய, அந்த அடி நாள் தொடங்கி, மூலதன சக்திகள் ஆதிக்கத்தை முறியடிக்கவும், நீடித்த அமைதியும், நிலைத்த வளர்ச்சியும் காணும் சமூக சமத்துவம் கட்டமைக்க உழைக்கும் மக்கள் போராடி வருகின்றனர். உலகின் பல நாடுகளில் நிதி மூலதன சக்திகள், மனிதர்களை பிளவுபடுத்தும் வலதுசாரி சக்திகளுடன் சேர்ந்து, கடுமையான சவாலாக வளர்ந்துள்ளது. உக்ரைன் நாட்டின் சுயசார்பை தகர்த்து, நேட்டோ கூட்டணியில் சேர்க்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்பந்தமும், நவதாராளமயக் கொள்கையால் திவாலாகி, கொந்தளித்து நிற்கும் இலங்கை தீவின் சூழலும் மே தினத்தில் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்குவோம், அனைவருக்கும் நல்ல நாட்கள் வருகின்றன” மற்றும் “விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம்” என்ற வாய்ச்சவடால் முழங்கி, ஒன்றிய அரசின் அதிகாரத்தில் அமர்ந்த ஆர்.எஸ்.எஸ். பாஜக ஆட்சி அதானி, அம்பானி வகையறா குழும நிறுவனங்களின் நிர்வாக முகமையாக செயல்பட்டு வருகின்றது. செல்வ உற்பத்தின் உயிர் அடையாளமான தொழிலாளர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றது. பாஜக ஒன்றிய அரசு சாதி, மத, சனாதானக் கற்பிதக் கருத்துக்களை சமூக வாழ்க்கை முறையாக்கும் முயற்சியில், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை சிதைத்து, சீர்குலைத்து வருகிறது. மாநிலங்களின் ஒன்றியம் நாடு என்பதை மறுத்து, மாநில உரிமைகளை தொடர்ந்து பறித்து, கூட்டாட்சி கட்டமைப்பை தகர்த்து வருகிறது.
பாஜக ஒன்றிய அரசின் மதவாத, வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களும், விவசாயிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்திய நாட்டில் முதல் முறையாக மேதினத்தை கொண்டாடிய சிந்தனை சிற்பி மா. சிங்காரவேலு பிறந்த மண்ணில், அதன் நூற்றாண்டு தொடங்கும் தருணத்தில், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் மகத்தான வெற்றி பெற்று, நாட்டின் மதச் சார்பற்ற, ஜனநாயக சத்திகளை அணி திரட்டி வருவது நம்பிக்கை ஒளிச் சுடராக வெளிச்சம் தருகிறது.
அறிவியல் கருத்தாயுதம் தாங்கி, பகுத்தறிவுப் பாதையில் பயணித்து, கற்பித சாதி, மத, சனாதானக் கருத்துக்களை முறியடித்து, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற தொன்மை மரபை முன்னெடுத்து, சமூக சமத்துவம் காண மேதின நாளில் உறுதி ஏற்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைத்துப் பகுதி மக்களுக்கும் மேதின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.