மேகேதாது அணை பிரச்சனை: கர்நாடகத்தின் அத்துமீறல் – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

மேகேதாது அணை பிரச்சனையில் கர்நாடக அரசின் அத்துமீறலைக் கண்டித்து காவிரிப் பாசன மாவட்டங்கள் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நாளை (22.06.2022) நடைபெற இருப்பதாக தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நா. பெரியசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது பின்வருமாறு:
- கருப்புக் கொடிகள் உயர்த்திடுவோம்!
- கண்டன முழக்கம் எழுப்பிடுவோம்!
அன்புமிக்க தோழர்களே, வணக்கம்.
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாது அணை கட்டும் திட்டத்தில் பிடிவாதம் காட்டி வருகிறது.
கர்நாடாக அரசின் கோரிக்கையில் “எள்” முனையளவும் நியாயமில்லை. சட்டத்திற்கும், சர்வதேச சமூகம் வரையறுத்து, ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாடுகளுக்கும், இயற்கை நியதிகளுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர், சென்னை மாகாணம், மைசூர் அரசு என இரு பகுதிகளாக காலனி ஆட்சி நிர்வாகத்தில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் காவிரி நதி நீர் பகிர்வு தொடர்பாக மைசூர் அரசுக்கும் (கர்நாடக) அரக்கும், சென்னை மாகாண (தமிழ்நாடு) அரசுக்கும் இடையில் 1924 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாட்டு எல்லைக்குள் மேட்டூர் அணையும் மைசூர் மாகாண எல்லைக்குள் கிருஷ்ணராக சாகா அணையும் கட்டப்பட்டன. மேலும் , காவிரி நதிநீரை ஆதாரப்படுத்தி எந்தவொரு திட்டம் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படும் போது இருமாநிலங்களும் பரஸ்பரம் கலந்து பேசி, ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதனை தொடர்ந்து செயலுக்கு எடுத்துக் கொள்வது, எந்தவொரு மாநிலம் மறுத்தாலும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில்லை என உணர்வுபூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால், காவிரி ஆறு துவங்கும் இடமாகவும், ஒரு நூறு கிலோமீட்டர் தூரத்துக்கும் மேல் கர்நாடக எல்லைக்குள் பாய்ந்து, தமிழ்நாட்டில் நுழைவதாலும் இதில் கர்நாடகம் தன் விருப்பப்படி செயல்படும் அத்துமீறல தொடர்ந்து செய்து வருகிறது.
காவிரி ஆற்றின் நீராதார உபநதிகளில் அணைகளை கட்டியது. இதனால் தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் பாசனப்பரப்பு 28 லட்சம் ஏக்கரில் இருந்து 17 லட்சம் ஏக்கராக வீழ்ச்சி அடைந்து விட்டது
காலனி ஆட்சி காலத்தில் 1924 ஆம் செய்து கொண்ட காவிரி நீர் பகிர்வு ஒப்பந்தம் ஐம்பது ஆண்டு கால அனுபவத்தையும், வளர்ச்சி நிலைகளையும் கருத்தில் கொண்டு 1974 ஆம் ஆண்டில் காவிரி நீர் பகிர்வு குறித்த ஒப்பந்தம் புதுப்பிக்கப் பட்டிருக்க வேண்டும். இது கர்நாடக அரசின் பிடிவாதத்தாலும், அப்போதை ஒன்றிய அரசின் அணுகுமுறையாலும் நிறைவேறவில்லை.
இதனைத் தொடர்ந்து இரு மாநிலங்களுக்கும் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான வாதப் பிரதி வாதங்களும், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
கர்நாடகத்தின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசின் அணுகுமுறையும் தீர்வுக்கு உதவாத திசைவழி என்பதை உணர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மதிப்பிற்குரிய தோழர் மா. காத்தமுத்து 1972 ஆம் ஆண்டில் ” காவிரி நதிநீர் பகிர்வுக்கு நடுவர் மன்றம்” அமைத்து, சட்டப்பூர்வ தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் என்பது வரலாறு.
ஆனாலும் ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறுவழியின்றி, தமிழ்நாடு போராட்டப் பாதையில் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அரசின் சார்பில் சட்டப் போராட்டமும், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் மக்கள் தளத்திலும் போராட்டங்கள் தொடர்ந்தன.
1989 ஜூன் 12. தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலையில் இருந்து, வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வரை லட்சக்கணக்கில் மக்கள் கரம் கோர்த்து, மனித சங்கலியாக காட்சியளித்தது. உலகத்தின் கவனத்தை ஈர்த்த போராட்டத்தாலும் சமூக நீதி ஜனநாயத்தில் நம்பிக்கை நிறைந்தோர் கரங்களில் அதிகாரமும் இருந்ததால் 1990 ஆம் ஆண்டு ” காவிரி நதிநீர் தாவா தீர்வுக்காக மூன்று நீதிபதிகள் கொண்ட நடுவர் மன்றம் ” அமைக்கப்பட்டது.
காவிரி நதிநீர் தாவா நடுவர் மன்றத்தின் விசாரணை நடவடிக்கை தொடர்ந்தது. விசாரணை நீடித்த நிலையில் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழ்நாட்டிற்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இறுதி தீர்ப்பு கோரி போராட்டங்கள் தொடர்ந்தன. அதுவும் 2007 ஆம் ஆண்டு கிடைத்தது. இதில் இடைக்கால தீர்ப்பில் வழங்கப்பட்ட 205 டிஎம்சி தண்ணீர் 192 டிஎம்சி என குறைந்தது போனது. ஆம் 13 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாடு இழந்து விட்டது.
நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்திற்கு சமமான அதிகாரம் கொண்டது என்று தான் ஆரம்பத்தில் அறிவித்தனர் ஆனால் நடுவர் மன்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்பட்டது
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் மீதான மேல் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2018 ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தண்ணீர் மாதவாரிய என்ன அளவில் வழங்க வேண்டும் என்பதையும் விபரமாக அட்டவணை போட்டு உத்தரவில் உறுதி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் முறையாக நடைமுறைப்படுத்த “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்தது. இந்த ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் தொடர்ந்தது.
இதற்கிடையில் கர்நாடக அரசு ரூ 9000 (ஒன்பதாயிரம்) கோடி செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது என்ற இடத்தில் சுமார் 67 டிஎம்சி தண்ணீர தேக்கும் அணை கட்டும் திட்டத்தை அறிவித்தது.
கர்நாடக அரசின் அப்பட்டமான சட்ட அத்துமீறல் தொடர்கிறது. இதில் தலையிட்டு தடுக்க வேண்டிய ஒன்றிய அரசு மௌன சாட்சியாக இருந்து வருகிறது. கர்நாடக அரசின் சட்டமீறலையும், ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் கண்டித்து தமிழ்நாடு ஒன்றுபட்டு கொந்தளித்தது வருகிறது.
அண்மையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர், மேகேதாது அணை பிரச்சினை குறித்து 23.06.2022 ஆம் தேதி நடைபெறும் ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதாக அறிவித்துள்ளார். இது அவரது அதிகார எல்லை மீறும் செயலாகும்.
கடந்த ஆண்டு(2021) ஜூனல 12 ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் ஒன்றிய அரசின் நீர்வள ஆற்றல் துறை (ஜல் சக்தி) அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவாத் அவர்களை சந்தித்து, மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
அப்போது அவர், காவிரி நீர் ஆதாரத்தில் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் ஒன்றிய அரசு அனுமதி வழங்காது” என்று உறுதியளித்தார். ஆனால், ஒன்றிய அரசின் நீர் வள ஆற்றல் துறை அமைச்சர் உறுதிமொழி காற்றில் பறக்கிறது. கர்நாடகத்தின் அத்துமீறல் தீவிரமாகிறது.
இனியும் பொறுப்பது இழப்பில் முடிந்து விடும்…. பொங்கி எழுவோம் …..
நாளை (22.06.2022) காவிரிப் பாசன மாவட்டங்கள் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்……
கருப்புக் கொடி உயர்த்திடுவோம் …..
கண்டன முழக்கம் டெல்லி கோட்டையில் எதிரொலிக்க முழங்கிடுவோம்….
களம் காணும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
தோழமையுள்ள,
நா பெரியசாமி
பொதுச் செயலாளர்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்
21.06.2022
Hi would you mind letting me know which webhost you’re using?
I’ve loaded your blog in 3 different browsers and I must say this blog loads a lot faster then most.
Can you suggest a good web hosting provider at a honest price?
Thanks, I appreciate it!