மூத்த தொழிற்சங்க தலைவர் ஆர் ஏ கோவிந்தராஜன் காலமானார் – செவ்வணக்கம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னோடியும், மூத்த தொழிற்சங்க தலைவருமான தோழர் ஆர் ஏ. கோவிந்தராஜன் (79) இன்று (19.02.2022) அதிகாலை கோவை மாவட்டம், மதுக்கரை அருகில் உள்ள திருமலையாம் பாளையத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை மாவட்டம், மதுக்கரை அருகில் உள்ள திருமலையாம் பாளையத்தில் வசித்து வந்த தொழிலாளர் குடும்பம் ஒன்றில் 1943 ஆம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்து, தாய் மாமா ஆதரவில் ஒத்தக்கால் மண்டபத்தில் வளர்ந்தவர். சிறுவயதில் திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டு, அதில் நுழையும் முயற்சியில் ஈடுபட்டவர். குடும்ப வறுமை நிலை கருதி சின்னப்பா தேவர் முயற்சியில் பஞ்சாலையில் பணிக்கு சேர்ந்தார்.
1950 ஆம் ஆண்டுகளில் கோவை மாநகரிலும், அதன் சுற்று வட்டாங்களிலும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். தொழிற்சங்கம் அமைத்து, தொழிலாளர்களை திரட்டி போராடியவர். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பொது வாழ்வை மேற்கொண்டவர். தொழிலாளர்களை அணிதிரட்டுவதிலும், அவர்களை வழிநடத்துவதிலும் தனித்தேர்ச்சி பெற்றவர். தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது ஆலை முதலாளிகள் அல்லது அரசு அதிகாரிகளுடன் பேசும் போது, அவர்களது இறுக்கமான நிலையை தளர்த்தி இணக்கம் கண்டு, ஒப்பந்தம் போடுவதில் ஈடு இணையற்றவர்.
தொழிலாளர் இயக்க வரலாற்று தொடர்ச்சியும், பெருமையும் கொண்ட கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், கோவை மாவட்ட ஏஐடியூசி கவுன்சில் தலைவர் என பல பொறுப்புகளில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர். அரசு அமைத்த முத்தரப்புக் குழுக்களில் பங்கேற்று, ஏஐடியூசியின் கொள்கை நிலைகளை பதிய வைத்தவர்.
தொழிலாளர் சார்பாக வெளிநாடுகளில் நடைபெற்ற பல கருத்தரங்குகளில் பங்குபெற்றவர். கம்யூனிஸ்டு கட்சியின் தத்துவத்தில் தெளிவுள்ளவர். கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர், கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் என பல நிலைகளில் செயப்பட்டு, இறுதி மூச்சு வரை கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராக செயல்பட்டவர்.
தாய் மாமாவின் மகளை வாழ்க்கை இணையாக கொண்டவர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டார். இவர்களுக்கு சம்பத் என்ற மகனும் கல்பனா என்ற மகளும் இருக்கிறார்கள்.
தொழிலாளர் இயக்கத்திலும், கம்யூனிஸ்டு கட்சியிலும் தனது பங்களிப்பை செலுத்தி, தனி முத்திரை பதித்துள்ள தோழர் ஆர் ஏ கோவிந்தராஜன் மறைவு எளிதில் ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது.
அவரை பிரிந்து வாடும் அவரது மகளுக்கும், மகனுக்கும் , கோவை மாவட்ட தோழர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.