மூத்த குடிமக்கள் இரயில் கட்டணச் சலுகை ரத்து: முடிவைத் திரும்பப் பெற ஒன்றிய அரசு மறுப்பு!
ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஷிவினி வைஷ்ணவ், ஜூலை 20-ஆம் தேதி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வே டிக்கெட்டுகளில் சலுகைகளை மீண்டும் வழங்குவது ‘விரும்பத்தக்கது அல்ல’ என்று கூறி உள்ளார்.
இதன் மூலம், ஒன்றிய அரசாங்கம் மேற்கூறிய சலுகைகளை மீண்டும் வழங்குவதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஒன்றிய அரசு, பல தசாப்தங்களாக வழங்கப்பட்டு வந்த, அச்சலுகைகளைத் திரும்பப் பெற்றதால் கோடிக்கணக்கான மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை மீண்டும் வழங்க ரயில்வே அமைச்சரிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம் வலியுறுத்தி இருந்தார்.
உண்மையில், இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மிகக் குறைவு. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% தள்ளுபடியும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்பட்ட ரயில் கட்டண சலுகை இவற்றுள் ஒன்றாக இருந்தது.
ரயில்வே அமைச்சர் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, மூத்த குடிமக்களுக்கு பயணிகள் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படுவதால் 2017-18-ல் ₹1,491 கோடியும், 2018-19-ல் ₹1,638 கோடியும், 2019-ல் ₹1,667 கோடியும், ரயில் துறைக்கு செலவினங்களாக அமைந்தது.
2021-22 ஆம் ஆண்டில் முன்பதிவு செய்யப்பட்ட வகுப்புகளில் பயணம் செய்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 5.55 கோடியாக இருந்தது.
எனவே, இந்தச் சலுகையை கோடிக்கணக்கான மூத்த குடிமக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிய முடியும்.
மேலும், 2019-20 ஆம் ஆண்டில் மட்டும், 22.62 லட்சம் மூத்த குடிமக்கள், ரயில் கட்டணச் சலுகைகளை விட்டுக் கொடுத்துள்ளனர்.
கடும் விலைவாசி ஏற்றம், மருத்துவ செலவு அதிகரிப்பு, சேமிப்பின் மீதான வட்டி விகிதம் குறைப்பு போன்றவற்றால் ஏற்கனவே அல்லலுறும், இத்தகைய பொறுப்புணர்வு மிக்க மூத்த குடிமக்களின் போக்குவரத்து செலவையும் அதிகரித்துள்ளது இந்த ரயில் கட்டண சலுகை ரத்து.
செய்திக்குறிப்பு – ஆனந்த் பாசு