மூத்த உறுப்பினர் கூடுமியான் மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் கட்சி அமைப்புகளை நிறுவிய தோழர்களில் ஒருவரான தோழர் கூடுமியான் (97) இன்று 17.10.2022 கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு, ஆழ்ந்த வேதனையுற்றோம்.
நாடு விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில், ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்பில் விவசாயிகள் அணிதிரட்டப்பட்டனர்.
தியாக சீலர் பி. சீனிவாசராவ் வழிகாட்டலில், டாக்டர் லலிதா அண்ணாஜி, தெய்வம், என். முத்து போன்ற முன்னணி தலைவர்களோடு தோழர் கூடுமியான் இணைந்து செயல்படத் தொடங்கியவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளைக் கட்டுவதிலும், ஊழியர்களை ஊக்கப்படுத்தி செயலில் ஈடுபடுத்துவதிலும் முனைப்புக் காட்டியவர்.
கட்சி அமைப்பில் தத்துவார்த்த விவாதங்கள், அமைப்புநிலை பிரச்சனைகள் தீவிரமாகி நெருக்கடி ஏற்பட்ட காலங்களிலும், அரசியல் தெளிவுடன், கட்சி விதிகளைப் பின்பற்றி, இறுதி மூச்சு வரை நெறி பிறழாது வாழ்ந்து காட்டியவர். காலனி ஆட்சி காலத்திலும், விடுதலை பெற்ற பிறகும் பல போராட்டங்களில் பங்கேற்று சிறை வாழ்க்கை அனுபவித்தவர். சில காலம் தலைமறைவாகச் செயல்பட்டவர். அன்னாரது வாழ்வும், பணியும் இளைய தலைமுறைக்கு ஊக்கமூட்டும் பாடமாக அமைந்திருக்கிறது.
தோழர் கூடுமியான் முதல் மனைவி இறந்த பின்னர், இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர். மனைவியும் இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் செலுத்தி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.