மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருது; திருக்குறள் ஒப்பித்தோருக்கு குறள் பரிசுத் தொகை
பாராட்டுச் சான்றிதழையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்பாரதியாரின் படைப்புகளை ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், திருக்குறளை முழுமையாக ஒப்பித்த மாணவர்களுக்கு குறள் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.10-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்தஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர்களான சீனி விஸ்வநாதன்,பேராசிரியர் ய.மணிகண்டனுக்கும் தலா ரூ.3 லட்சம், விருது,பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
அதன்படி, தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆய்வாளர்கள் சீனி விஸ்வநாதன், ய.மணிகண்டன் ஆகியோருக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருது, விருது தொகை தலாரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
பாரதியார் குறித்த மூத்தஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன்,இளசை மணியன் நினைவாக அவர்கள் குடும்பத்துக்கு ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் தலா ரூ.3 லட்சம் விருது தொகையையும் வழங்கினார்.
நவிமும்பை தமிழ்ச் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட, தமிழக அரசின் நிதியுதவியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை சங்கத்தின் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் முதல்வர் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறை மானியக்கோரிக்கையில் திருக்குறளை முழுமையாக ஒப்பிப்போருக்கு அறிவிக்கப்பட்டபடி, தேர்வு செய்யப்பட்ட 219 பேரில் சென்னையை சேர்ந்த 6 மாணவர்கள், காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் குறள் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் வழங்கினார். கரோனா காரணமாக அனைவரையும் சென்னைக்கு அழைப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு, தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் செ.சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.