முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம் உபயத்துல்லா மறைவுக்கு இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயத்துல்லா (81) இன்று (19.02.2023) காலையில் தஞ்சை மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையுற்றோம்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட முன்னோடிகளில் ஒருவர். தஞ்சை நகரச் செயலாளர் பொறுப்பில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றியவர். கட்சி எல்லை கடந்து அனைத்து கருத்துக் கொண்டோர்களிடமும் சகோதர பாசத்துடன் பழகும் பண்பாளர். இலக்கிய நூல்களை விற்பதிலும், வாசிப்பு வட்டத்தை விரிவுபடுத்தியதிலும் கவனம் செலுத்தியவர்.
இந்திய சோவியத் நட்புறவுக் கழகம் போன்ற பொது அமைப்புகளில் கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தவர். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை அமைச்சர் என உயர் பொறுப்புகளிலும் செயல்பட்டு, தஞ்சைக்கு பெருமை தேடித் தந்தவர்.
மன்னை ப.நாராயணசாமி, கோ.சி மணி, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், டி.ஆர்.பாலு போன்றோர்களின் நெஞ்சுக்கு நெருக்கமான உடன்பிறப்பாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு தி.மு.கழகத்திற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. தஞ்சை நகரம் வளர்ச்சிக்கு உதவி செய்த பெருந்தகையை இழந்து விட்டது.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில குழு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவதுடன் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.