தமிழகம்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். ஜி.ஆர். இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி, அதிக பாதிப்புகளை உருவாக்கியது.
இதனால், ஜனவரி மாதம் 10 ஆம் தேதி நடக்கவிருந்த, முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET PG) நுழைவுத் தேர்வு ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனா மேலும், தீவிரமாக பரவியதன் காரணமாக, ஏப்ரல் 18 ஆம் தேதியும் நடத்தப்படவில்லை.
மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு, பல மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 11 ஆம் தேதி தான் நடத்தப்பட்டது.
இத்தேர்வின் முடிவுகளும் வெளிவந்து விட்டன. ஆயினும், இதுவரை கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.
இந்த முதுநிலை மாணவர் சேர்க்கைக்காக 1.75 லட்சம் மருத்துவ மாணவர்கள், கடந்த ஒன்றரை வருடங்களாக காத்திருக்கின்றனர்.
அவர்கள் மேற்படிப்புக்கும் போக முடியாமல், எந்த வேலையிலும் சேர முடியாமல், கிளினிக்கும் வைக்கமுடியாமல் நிச்சயமற்ற சூழ்நிலையில் காத்திருக்கின்றனர்.
முன்னேறிய வகுப்பிலுள்ள, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு காலதாமதமானதால் மாணவர் சேர்க்கை மேலும் காலதாமதமாகிறது.
இதனால், முதுநிலை நீட் தேர்வை எழுதியவர்கள் விரக்தியில் உள்ளனர். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
முதலாம் ஆண்டு மாணவர்கள் இதுவரை படிப்பில் சேராததால், ஏற்கனவே, முதுநிலை மருத்துவம் பயிலும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கடும் பணிச் சுமைக்கு உள்ளாகியுள்ளனர். உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை, கொரோனா தடுப்பூசி போடும் பணி, மழை வெள்ளம், டெங்கு போன்ற தொடர் பிரச்னைகளால் தொடர்ந்து கடுமையாக பணியாற்றி வருகின்றனர். அதன் காரணமாக அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தீர்ப்பை விரைவு படுத்தி மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திட வேண்டும்.
முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் இல்லாத கல்வியாண்டாக (zero academic year), இந்த ஆண்டு மாறக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையிலும் இதே நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த காலதாமதத்தை போக்கிட மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முது நிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திடக் கோரி, அகில இந்திய அளவில், முது நிலை மருத்துவ மாணவர்கள் நடத்தவுள்ள பலகட்டப் போராட்டங்களுக்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button