முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை
திருப்பூருக்கு இன்று வருகை முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலமாக திங்கள்கிழமை காலை 11.15 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். இதன் பிறகு கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் கார் மூலமாக பிற்பகல் 2.20 மணி அளவில் திருப்பூர் வந்தடைகிறார்.
இதைத்தொடர்ந்து, மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பின்பு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் பிற்பகல் 5 மணி அளவில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதில், நகராட்சி நிர்வாகத்துறை, கால்நடை பராமரிப்பு, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைப்பதுடன், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், மாநகர காவல் ஆணையர் வே.வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சஷாங்க்சாய், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
டிரோன் கேமராக்கள் பறக்கத் தடை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி மாநகரில் டிரோன் கேமராக்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நடைபெரும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். எனவே, பாதுகாப்பு ஏற்பாட்டின்பேரில் திருப்பூர் மாநகரில் அவிநாசி சாலை, பி.என்.சாலை, குமரன் சாலை, கல்லூரி சாலை ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் டிரோன் கேமராக்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.