முதலாளித்துவமும் அதன் புதிய கட்டமும்
நியூஏஜ் தலையங்கம் (ஜன. 9 – 15)
ஊரைச் சுற்றும் பேராசையில் மக்கள் இடம்விட்டு இடம் செல்வதில்லை, மாறாக இப்போது அந்த ஆசையின் இடத்தை தவிர்க்க முடியாத பசி தட்டிப் பறித்துள்ளது -ஒளவையார் சொல்லிய ‘வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’ என்ற –தவிர்க்க முடியாத வயிற்றின் பசித்தீ காரணமாக மக்கள் அலைகின்றனர். சில காலம் முன்பு புலம்பெயர் தொழிலாளர்கள், வேலையிலிருந்து நிறுத்தப்பட்டவர்கள், வெளியே விரட்டப்பட்டவர்கள் என ஏராளமானோர் நம் வீதிகளில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் முதியவர்களுமாக மூட்டை முடிச்சுடன் கரடு முரடான சாலைகளில் வயிற்றில் பசியைச் சுமந்து கொண்டு பரிதாபமாகச் சென்றதைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்தது. அவர்கள் அப்படி எதை நோக்கிச் சென்றார்கள், பசுமையான காட்சிகள் நிறைந்த இடத்திற்கா? இல்லை, இல்லை அவர்கள் உணவிருக்கும் இடம் தேடி மைல் கணக்கில் நடையாய் நடந்தார்கள். வள்ளுவர் கூறிய (குறள்1048) ”இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு” (வறுமை) என்ற பசித்தீ பூதத்திற்குப் பயந்து நடந்தார்கள். அப்பூதம் வழியில் பலரையும் பலி வாங்கியது. நாளுக்கு நாள் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பானது. வாய்ப்புகள் குறைந்தன, அவரவர் திறமைக்கு வேலையைத் தேர்ந்தெடுப்பது அரிதாயிற்று. வேலைஇல்லா நிலையில் வணிகவியல், ஆராய்ச்சி முனைவர் பட்டம் என அதிகம் படித்தவர்களும் தோட்ட வேலைக்கும், பள்ளியில் பியூன் வேலைக்கும் போட்டிப் போடும் சூழல் உருவானது. நல்லதோர் வீணையாகத் திகழும் மனிதர்களின் திறமைக்கும் தகுதிக்கும் தக்கபடி அவற்றைப் பயன்படுத்தாத நாட்டின் அமைப்பு முறைமை அவற்றை நலம்கெட புழுதியில் வீசி எறிந்தது.
முந்தைய நான்கு மாதங்களின் உச்சபட்டமாக வேலையில்லா திண்டாட்ட விகிதம் 7.91 ஆகச் சென்ற டிசம்பரில் அதிகரித்தது என ‘இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்’ (சிவிமிணி) கூறுகிறது. உலகின் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியின்போது இருந்ததைவிட இது அதிகம். முன்பு பொருளாதாரப் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டபோது அதிகரித்த வேலை இல்லாத திண்டாட்டம் போலவே பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும் அதற்கேற்ப குறைந்தது. மாறாகத் தற்போது, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் பணக்காரர்கள் லாபமும் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது; அவர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவது நின்றபாடில்லை. ஒரு சிலர் கையில் லாபம் குவிகிறது.
1890ல் அமெரிக்கச் செனட் உறுப்பினர் ஜான் ஷெர்மன் (வர்த்தக மோசடி நடவடிக்கைகள் தடுப்பதற்காக) ‘நம்பிக்கைக்கு எதிரான சட்ட’த்தை (கிஸீtவீtக்ஷீust கிநீt) நிறைவேற்றச் செய்தார். அந்தச் சட்டத்தின்படி வணிக நிறுவனங்கள், பிற நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தடுத்து முடக்கி, தொழிலில் ஏகபோகமாவது தடுக்கப்பட்டது; சந்தையில் உண்மையான போட்டியை உறுதி செய்து பாதுகாத்தது; ஒரு நிறுவனத்தை மற்ற நிறுவனங்களிலிருந்து பாதுகாத்தது; மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை வழக்கங்களால் நுகர்வோர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாத்தது. ஷெர்மன் அப்போது தனது உரையில், “இன்று ஓர் அரசர் அதிகாரத்திற்கு வராமல் நீங்கள் தடுத்து விட்டால் நாளை உற்பத்திக்கு ஒரு அரசர் இருக்க முடியாது, போக்குவரத்திற்கு ஓர் அரசர் மற்றும் இறுதியாகச் சந்தை என்ற ஒன்றிற்கு ஒரே அரசர் இருக்க முடியாது” என்று கூறினார். அதாவது ஒரே நிறுவனம் கோலச்ச முடியாது தடுக்கப்பட்டது.
வணிக நிறுவனத்தின் பொதுவான இந்த ஏகபோகப் பேராசை உணர்வே சில நேரம் நாடுகளைத் தங்கள் அதிகாரத்திற்குச் சவால் விடுபவர்களை முடக்கி அவர்களைப் பணியச் செய்யத் தூண்டுகிறது. சீனாவில் அலிபா நிறுவனத்தின் வீழ்ச்சி, ஏகபோகக் கட்டுப்படுத்தல் முயற்சிக்கு நல்ல உதாரணம். அமெரிக்காவில் ஸ்டாண்டர்டு ஆயில் மற்றும் ஏடி அண்டு டி நிகழ்வுகள். சமீபத்தில் அமெரிக்காவில் ஷெர்மன் நம்பிக்கை எதிர்ப்புச் சட்டத்தை மீறி நடந்ததற்காக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மைக்ரோ சாப்ட் மற்றும் க்வல்காம் நிறுவனங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்னும் சில உதாரணங்கள்.
நாட்டின் பொருளாதாரத்தின் மீது முழுமையான அதிகாரத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறாது தடுப்பதற்காகத்தான் அந்நாடுகள் இந்நடவடிக்கைகளை எடுத்தன. ஏனெனில் அவை முதலீட்டிற்கு எதிரானவை, உற்பத்திக்கு எதிரானவை; மேலும் அதன் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் நிற்கின்றன. (அதாவது, தாங்கள் மட்டுமே ஏகபோகமாவதற்காக நிற்கின்றன.) நமது நாட்டிலும்கூட 1969ல் ‘வணிக நடைமுறைகள் ஏகபோகம் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம்’, பொதுவாக MRTP ஆக்ட் (Monopolistic and Restrictive Trade Practices Act) என்றறியப்படும் சட்டம், கொண்டுவரப்பட்டது; அதன் மூலம் பொருளாதாரச் செயல்பாடுகளால் நாட்டின் பொருளாதார அதிகாரம் ஒரு சிலர் கைகளில் குவிவது நிகழாது பாதுகாப்பை வழங்குகிறது. பின்னர் அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு அந்த இடத்தில் (வர்த்தக நடவடிக்கைகளில்) போட்டி சட்டம், 2002 (Competition Act) வந்தது.
ஏகபோக வர்த்தகக் கட்டுப்பாடு சட்டம் நீர்க்கச் செய்யப்பட்டதன் விளைவாய் அம்பானிகள் அதானிகள் போன்ற கார்ப்பரேட்டுகள் வளர்ந்தார்கள். ஆனால் நமது நாட்டில் முதன் முதலாகக் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம்தான் ஏகபோக, நியாயமற்ற வர்த்தகச் செயல்பாடுகளைத் தடுத்துக் கட்டுப்படுத்தியது.
இன்று அதற்கு மாறாக, நமது ஜனநாயகத்தில் நாம் ஒரு அரசரைப் போஷித்து வளர்க்கிறோம். அரசர் என்பதாலேயே அரசியல் அதிகாரம் மட்டுமின்றி அதன் அடிப்படைகளில் இயல்பாகவே அதனுட் பொதிந்த பொருளாதார அதிகாரங்களையும் பெறுகிறார். கண்ணுக்குத் தெரியாது ஆட்சி செய்வோர் இனி யாரும் இல்லை, ஒட்டுமொத்தமாக அனைத்திலும் அவர்களுக்கு வாய்ப்புகள் திறந்திருக்கும் – இனி அவர்கள் மக்களிலிருந்து, மக்களுக்காக மற்றும் மக்கள் மூலம் (பொருளாதாரத்தின் மீது அதிகாரம் செலுத்த) வருபவர்கள் இல்லை. (அவர்கள் ஏகபோகச் சக்ரவர்த்திகள்)
அவர்கள் முழுமையாகத் தன்னளவில் ஒரு புதிய வர்க்கத்தைச் சேர்ந்தவராகி நமது அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையும், சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி பிரிவுகளையும் கபளீகரம் செய்து விழுங்கி வங்கிகளைக் கைப்பற்றி விட்டார்கள்; அதனால் கொழுத்துச் சுவை கண்டவர்கள் இப்போது இன்னும் பெரிய பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் மீது கண் வைக்கிறார்கள். இப்படியாக ஒரு புதிய அமைப்பைச் சிருஷ்டிக்கிறார்கள் – முதலாளித்துவத்தின் தூய வடிவம் அல்ல அது! ஏனெனில் அது முதலீட்டை நாடிச் செல்வதில்லை, அதற்குப் பன்மைத்துவம், அதுதான் ஜனநாயக அமைப்பு, ஒரு போதும் தேவையில்லை.
அனைத்து முக்கிய முடிவுகளும் தன்னிச்சையாக எடுக்கப்படுகின்றன, உதாரணங்கள் ஏராளம். மூன்று வேளாண் சட்டங்கள் அம்முறையிலேயே நிறைவேற்றப்பட்டன; அச்சட்டங்கள் 13 மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டதும் அதே வழிமுறையில்தான் – அனைத்தும் தன்னிச்சையாக. ஆனால் குறைந்தபட்ச ஆதாரவிலை (எம்எஸ்பி) மற்றும் நடைமுறையில் இருந்த பல வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களுடைய ஆழமான கவலைகள் தேர்தல்கள் பற்றிதான்; எனவேதான் (வேளாண் சட்டங்களை ரத்து செய்வதில்) இவ்வளவு அவசரம் – மாறாக மக்களின் உச்சபட்ச அதிகார அமைப்பான நாடாளுமன்றத்தை ஒருபோதும் ஒருபொருட்டாகவே அவர்கள் கருதுவதில்லை. அவர்களிடம் எப்போதும் ஓடுவது அவர்களது சொந்த வர்க்க நலன் மட்டுமே. அதுதான் இப்போது தனித்த வகையில் நிதிமயமாக்கல் (ஃபினான்ஸியலைசேஷன்)
இன்றைய அரசின் சமீபத்திய பணமாக்கல் திட்டத்தை நோக்கிய நடவடிக்கைகள் அதையே நிரூபிக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களை நீர்க்கச் செய்யும் அந்த நடவடிக்கைகள் ஏறத்தாழ முடிந்து விட்டது. ஒவ்வொரு நிறுவன அலகுகளும் அந்நிலையையே சந்திக்கின்றன. கடந்த 70 ஆண்டுகளில் கட்டியெழுப்பப்பட்ட இரும்பு ஆலைகள், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் பிற முக்கிய தொழிற்சாலைகள் போன்ற பல கனரகத் தொழிற்சாலைகள் தேசத் தேவைகளை நிறைவேற்றின. போக்குவரத்திற்காகச் சாலைகள் கட்டப்பட்டன, எரிபொருளுக்காக எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டன.
நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகள் அனைத்தும் தேசப் பொருளாதார உருவாக்கத்தின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்தது. பொதுப் பணத்தைக் கொண்டு தொழிலக மேம்பாடுகளின் அடிப்படைகள் கட்டப்பட்டன. பெருவாரியான மக்கள் கூட்டம் அளித்த வரிப்பணம், சாலைகள், மின்சாரம், எரிபொருள் துறை, மருத்துவச் சேவைகள் கல்வி மற்றும் அதுபோன்ற பல்வேறு முன்முயற்சித் திட்டங்களுக்குச் செலவழிக்கப்பட்டது. இந்த அடிப்படை செல்வாதாரங்களை விற்பது பொருளாதாரத்தையே துண்டு துண்டாகச் சிதைப்பதற்குச் சமம். இத்தோடு அது நிற்கப்போவதில்லை. இப்படி ஒவ்வொரு விற்பனையோடும் (அந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஈட்ட உள்ள) முழு வருவாயையும்கூட அரசு பறிக்க எத்தனித்துள்ளது.
ஏகாதிபத்தியம் தன்னை உருவாக்கி நிலைநிறுத்திய, சமூகத்தையும்கூட நிலைநிறுத்திய உற்பத்தித் திறன்களுக்கு (புரொடெக்டிவ் கெப்பாசிட்டிஸ்) எதிராக மிகப் பெரிய அளவில் இன்று நகர்ந்துள்ளது. இதுவரை முதலாளித்துவம் முக்கியமாகத் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சுரண்டியது. இருபதாம் நூற்றாண்டில் முதன் முறையாக, குறிப்பாக 21ம் நூற்றாண்டில், நிதி மூலதனம் (ஃபினான்ஸியல் கேப்டலிசம்) பெரிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன முனைவோர்களையும், மிகப்பெருமளவில், அவர்களை உச்சபட்சமாகச் சுரண்டுகிறது.
நிதி மூலதனம் தன்னை உருவாக்கிய அதே உற்பத்தி முறைக்கு எதிராக இன்று செல்கிறது.
உற்பத்தி மற்றும் நிதி மூலதனம் இடையே ஏற்பட்ட வரலாற்றுப் பிளவு, நிகழ்கால முதலாளித்துவத்தின் குணநலப் பண்பாகி ஏகாதிபத்தியத்தின் தற்கால நெருக்கடியின் மையமாக உள்ளது; அது சமூகத்தில் ஜனநாயகப் புடை பெயர்வுத் திட்டங்களுக்கான புதிய அடிப்படைகளை ஏற்படுத்துகிறது. (பாரம்பரிய முதலாளித்துவம் நிகழ்காலத்தில் நிதிமயமாக்கப்பட்டு சமூகத்தில் ஜனநாயக அமைப்பு முறைகளையும் புரட்டிப் போடுகிறது)
–தமிழில்: நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்