முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகள்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின், 69 வயதை கடந்து, 70-வது பிறந்த நாள் காணும் இனிய நாளில் (மார்ச் 1), அவர் மேலும் பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன், வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகிறது.
பதினான்காவது வயதில் “இளைஞர் அணி” அமைத்து, கோபாலபுரத்தில் தொடங்கிய அரசியல் பணி 56 ஆண்டுகளைக் கடந்து தொடர்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிட்டா மிராசுகளும், செல்வச் சீமான்களும், பெரும் நிலக்கிழார்களும், புரோகிதப் புல்லுருவி சக்திகளின் துணையோடு ஆதிக்கம் செலுத்தி வந்த காலத்தில், உருவான தென்னிந்திய நல உரிமை இயக்கத்தின் முன்னோடிகளும், சிந்தனைச் சிற்பி சிங்ககாரவேலர், பகுத்தறிவு இயக்கத் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா முன்னெடுத்த சமதர்ம – சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக, அறிஞர் அண்ணா கட்டமைத்த ஜனநாயக புரட்சிக்கு சாமானிய மக்களை அணி திரட்டிய நாவலர், பேராசிரியர் வரிசையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தனிச்சிறப்பு பெற்றவர்.
கலைஞர் – தயாளு அம்மையார் தம்பதியருக்கு மூன்றாவது மகவாக பிறந்த மு.க.ஸ்டாலின், தந்தையின் சிந்தனை தாக்கத்தில், அவர் நடந்த அரசியல் பாதையைத் தேர்வு செய்து பயணம் தொடர்ந்தவர்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கமும், கம்யூனிஸ்டுகளும் இணைந்து பயணிக்கும் “தோழமை உறவு” கொள்கை நிலையில் இயல்பானது. மாறுபட்ட காலத்திலும் அறுந்து விடாமல் தொடரும் பண்பு கொண்டது. நிலக் குவியல் முறையை உடைத்து, நிலவுடைமைக்கு உச்சவரம்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என கம்யூனிஸ்டுகள் போராட்டக் களம் இறங்கிய காலத்தில் ஆதரித்து குரல் கொடுத்தது முன்னேற்றக் கழகம்.
குறைந்தபட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு, ஓய்வுகாலப் பலன்களுக்காக, தொழிற்சங்கம் அமைத்துப் போராடிய தொழிலாளர்கள் அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்ட காலத்தில் “கூலி கேட்டான் அத்தான் குண்டடி பட்டு செத்தான்” எனக் கூக்குரல் எழுப்பி தமிழ்நாட்டு மக்களை கிளர்ந்தெழச் செய்தது. போராட்டப் பாரம்பரியம் கொண்ட தி.மு.கழகத்தின் தலைவர் பொறுப்பேற்ற திரு.மு.க.ஸ்டாலின், சமூக நீதி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தமிழ் நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் உறுதியுடன் செயலாற்றும் கொள்கை வீரராக முன்னேறி வருகிறார்.
மதவெறி, சாதிய சக்திகளைத் தனிமைப்படுத்தி, சுயநல கும்பலை முறியடிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து, அதனை வழி நடத்தும் தலைமை ஏற்றதும், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஆட்சியில் அமர்ந்ததும் பெருமை அளிப்பதாகும்.
அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாகக் கூறும், மாநிலங்கள் இணைந்த “ஒன்றியம்” என்பதைப் பட்டி, தொட்டி முதல் டெல்லி செங்கோட்டை வரை போர்க்குரலாக எதிரொலிக்கச் செய்ததை யாரும் மறுத்திட இயலாது.
ஆட்சி நடத்துவதிலும், பிரச்சினைகளை எதிர்கொள்வதிலும், அவரது ஜனநாயக அணுகுமுறை கொள்கைக்கு வலுசேர்த்து வருகிறது.
சனாதன சக்திகள், பழமைவாத கருத்துக்களை விதைத்து வெறுப்பு அரசியல் உருவாக்கும் சூழலில், வழக்கொழிந்து வரும் மொழிகளைத் திணித்து, உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்கு கேடு செய்வோர், மாநில நிதி வளத்தை வரியின் பெயரால் வாரிச் சுருட்டிக் கொள்ளும் சர்வாதிகார முறையை ஆதரிப்போர், ஆளுநர் மாளிகை வழியாக அத்துமீறல் புரிவோர் என கூட்டாட்சி கோட்பாடுகளைத் தகர்த்து வரும், வகுப்புவாத, ஜனநாயக விரோத சக்திகளை ஒன்றிய அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பது திரு.மு.க.ஸ்டாலினுக்கு வரலாறு வழங்கும் கடமையாகும். இந்த வரலாற்று கடமையில் நூறு சதவீதம் வெற்றி பெற்று, பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு 70-வது பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறது.