தலையங்கம்

முகத்திரை கிழிந்தது

நியூஏஜ் தலையங்கம் (ஜன. 16 – 22)

பாட்னா உயர்நீதிமன்ற மேளாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ், மூத்த பத்திரிக்கையாளர் குர்பான் அலி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. அந்த மனு சென்ற ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 19ல் ஹரித்துவார் தர்ம சன்சத் (மதத்தின் பாராளுமன்றம்) என்று ஏற்பாடு செய்யப்பட்ட யதி நரசிங்கானந்த் நடத்திய ஒன்றும், ‘இந்து யுவ வாகினி’ நடத்திய மற்றொன்றுமாக இரண்டு தனித்தனிக் கூட்டங்களில் பேசப்பட்ட வெறுப்புணர்வு தூண்டும் பேச்சுக்கு எதிரானது. மேலும் வரும் நாட்களில் இது போன்று திட்டமிடப்படும் நிகழ்வுகளுக்கு எதிராகவும் புகார்களை மனுதாரர்கள் தாக்கல் செய்யலாமென நீதிமன்றம் அனுமதியளித்தது.
அக்கூட்டங்களில் பேசியவர்கள், 20கோடி இந்திய முஸ்லீம் குடிமக்களைக் கூண்டோடு இனப்படுகொலை செய்யத் தூண்டிய வன்முறை அறைகூவல்களைப் பொதுவெளியில் காணக் கிடைக்கும் சன்சத் வீடியோகளில் பார்த்து நாட்டு மக்கள் உறைந்து போயினர். இனப்படுகொலை பேச்சுக்கள் நம் அரசியலமைப்பிற்கு விரோதமானது மட்டுமல்ல, நம் தேசத்தின் ஒட்டுமொத்த பண்பாட்டு விழுமியங்களின் உணர்வுக்கும் எதிரானது. அத்தகைய கூட்டம் கூடுவதற்கு அனுமதி அளித்ததே, மாநில அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாக அமைப்பின் கையாலாதத் தோல்வியாகும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்பாடான இந்துத்துவா சக்திகள் பெயராலேயே தர்ம சன்சத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அது இந்துத்துவா போர்வையில் ஹிட்லரிசம், அவ்வளவுதான். முழுமையான அரசு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அது கவனத்தைக் குவிக்கிறது. அதன் மூலம் அரசியல் ரீதியாகவும், கோட்பாடு மற்றும் வரலாற்று ரீதியியிலும் இந்தியாவை முழுமையாக மாற்றி அமைப்பதே நோக்கமாகும். சன்தத் அதன் ஓர் உதாரணமே.
அது பன்மைத்துவத்தை மறுக்கிறது, அடிப்படை வாதத்தில் திளைக்கிறது. ஒற்றை இந்துத்துவாவை நம்புவதால், சிறுபான்மையினரை அடிமைப்படுத்துவது மட்டுமே அதன் பிரச்சனை அல்ல; மாறாக, தேசமக்களின் முழுமையான உணர்வுநிலை மீது அதிகாரம் செலுத்த அது முயல்கிறது. அதன் அணிகள் வகுப்புவாதம் எனும் விஷத்தை ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் ஊதுகுழலான “ஆர்க்கனைசர்” இதழின் ஆசிரியராகக் குறைந்தது 50 ஆண்டுகள் இருந்த கேஆர் மல்கானி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பண்பு நலனை வரையறுத்து விவரிக்கும்போது ஒருமுறை கூறினார்: “உண்மையாதெனில், ஆர்எஸ்எஸ் அரசியல் அமைப்பு அல்ல. பின்வரும் வார்த்தையைப் பயன்படுத்தலாம் எனில், அதனை நான் (வாழ்வின் உண்மைப் பொருளை உரைக்கும்) மீமெய்யியல் அல்லது ஆன்மிகம் (Metaphysical) சார்ந்த அமைப்பு என்பேன். அரசியல் அதிகாரத்தில் நாட்டம் இருப்பதை அது தெரிவிக்கவில்லை; ஆனால் எவ்விஷயங்கள் எல்லாம் தேசத்தின் அரசியலை உருவாக்குமோ அந்த அம்சங்கள் மற்றும் சக்திகள் மீது அது மிகவும் விருப்பம் கொண்டுள்ளது”. அப்படி (Meta politics) எனச் சொல்வது ஏமாற்றித் தப்பிக்கும் ஒரு பாதை. அப்பட்டமாகச் சொல்வதெனில், அதன் பொருள் அதிகாரத்தைச் செலுத்துவது, ஆனால் பொறுப்பேற்காமல் அதிகாரம் செலுத்துவதேயாகும். (கிரீஸ் சிந்தனையாளரான ஃபயி, ‘மெட்டா பாலிடிக்ஸ் என்பது ஒரு தேசத்தின் பண்பாடு, கலாச்சாரத்தைக் கைப்பற்றுவது’ என்கிறார். மற்றொரு சிந்தனையாளர் அலைன் டி பினோய்ஸ்ட், ‘ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றும் அரசியல் போல அல்லாது, மெட்டா அரசியலின் உத்தி ஒட்டுமொத்த சமுதாய பண்பாட்டு கூட்டு உணர்வை அடியோடு மாற்ற முயலும்’ என்று வரையறுக்கிறார். )
எனவேதான் இரத்தம் குடிக்க அலைந்து இஸ்லாமியர்களை இனப்படுகொலைச் செய்யத் தூண்டும் ஹரித்துவார் வெறுப்புப் பேச்சுகளைக் கண்டிக்க மறுக்கும் உத்தரகாண்ட், உபி மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தர்ம சன்சத் பிரச்சனை மீது கள்ள மௌனம் சாதிக்கின்றன. இவை அனைத்தும் அரசியல் மற்றும் மதம் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ளும், மரபுகள் புதிய முகத்தைப் பெறும், புதிய அரசியல் கட்டத்தின் தொடக்கத்தைக் காட்டுகின்றன. ஜனநாயகத்தை, சுதந்திரத்தை இழிவுபடுத்துவதோடு இறுதியில் உயிர் வாழும் உரிமையையே அவமதிக்கத் துணியும் பாசிசத்தின் தேவைக்கான தர்க்க நியாய (விஷத்தை) மக்கள் கூட்டத்திற்கு ஊட்ட அது முயல்கிறது. அதன் அப்பட்டமான உதாரணங்களே தர்ம சன்சத் கூட்டங்களின் அறைகூவல்கள்.
அதற்காக எல்லாம் முடிந்து போனது எனச் சோர்ந்து நாம் நம்பிக்கை இழக்க வேண்டாம். வேளாண் பெருங்குடி மக்களின் 13மாத கால தர்ணா போராட்டம் நம்பிக்கை தரும் ஓர் உதாரணம். போலீஸ் தடியடி, கண்ணீர் புகை, தண்ணீர் பீரங்கி தாக்குதல், முள் வேலி, அகழிப் படுகுழிகள், கடும் குளிர், கோடை அத்தனையும் தாண்டி, எழு நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளைக் களபலி தந்து வெற்றி பெற்றிருக்கிறது. அவர்கள்தாம் இயற்கையான தலைவர்கள்; கொண்ட குறிக்கோள், கொள்கைகளில் சமரசம் செய்ய மறுப்பவர்கள்; பாசிச சக்திகளுக்கு எதிராக, உண்மையான அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்!
சமூகத்தின் கூட்டு உணர்வை மெல்ல தேயச் செய்து பாழ்படுத்தி கபளீகரம் செய்வோரை எதிர்க்கும் போரில், உறுதியாக நிற்பவர்களுக்கு ’இயற்கையான தலைவர்கள்’ (organic leaders) என்ற பெயரை (இத்தாலிய மார்க்சிய தத்துவ இயலாளரும் பன்முக ஆற்றலுடையவருமான அன்டோனியோ ஃபிரான்சிஸ்கோ) கிராம்சி வழங்கினார். அவரை இத்தாலிய அரசு தங்கள் மேலாண்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதியதால் சிறையில் அடைத்தது. சிறைப்பட்ட எட்டு ஆண்டுகளும் மக்கள் கூட்டத்திற்காகப் பாடுபடுவதை, அவர்களுக்காகப் பெருமளவில் எழுதிக் குவிப்பதை அவர் நிறுத்தவில்லை. (கிராம்சியின் மிகச் சிறந்த கோட்பாட்டுப் படைப்பு, ‘பண்பாட்டு மேலாதிக்கத் தியரி’ என்பதாகும். அதில் அரசும் ஆளும் முதலாளித்துவ பூர்ஷ்வா வர்க்கமும் எப்படி முதலாளித்துவச் சமூகங்களின் பண்பாட்டு அமைப்புக்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி செலுத்துகின்றன என்பதை வரையறுத்துக் கூறுவார்.)
இந்துத்துவா கொள்கைக்கான வரைவுக் கோட்பாட்டை வி டி சவார்க்கர் எழுதியபோது, பாசிசத்திற்குச் சேவை செய்த அதே பேய்களான வலதுசாரி அணியினரின் ஆதரவைக் கோரினார். பாசிசவாதிகளின் யூதர்களுக்கு எதிரான அணுகுமுறை கொள்கையை ஆதரித்துடன், (இரண்டாம் உலகப் போரின்போது சுமார் 60லட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்களை விஷவாயு கேஸ் சேம்பரில் தள்ளி திட்டமிட்ட முறையில்) ஒட்டுமொத்த யூதஇனத்தையும் பழிவாங்கிய அவர்களின் வல்லாண்மை மற்றும் கொடூரத்தையும் சவார்க்கர் பெரிதும் பாராட்டினார். அதை அவர்கள் ‘பேரழிவு’ (‘Holocaust’ அல்லது ஹீப்ரு மொழியில் ஒட்டுமொத்தமாக தீயிட்டு பலியிடும் பேரழிவின் சொல்லாகிய ஷோவா) என்று அழைக்கிறார்கள்.
சவார்க்கர் பொதுவாக, சர்வதேச நிலைமை மற்றும் இந்து-முஸ்லீம் உறவுகள் என்னும் இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்கிறார். 1930களின் பிற்பகுதியில் பூனாவில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது சவார்க்கர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி பேசினார். அவர் கூறினார்: “நாடுகளின் அரசியல் ஆட்சி முறை என்பது அந்தந்த நாடுகளின் மக்களுடைய மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பது; அந்த வகையில் ஜெர்மனியின் நாசிசமும் இத்தாலியின் பாசிசமும் வந்ததற்குக் காரணம் அந்த மக்கள் அவர்களை விரும்பியதே ஆகும்.” உண்மையில், அவர் முழு உலகையும் மெல்ல ஆக்கிரமிக்கும் நிதிமூலதனத்தின் ஆட்சிக்கு ஆதரவாகவே பேசினார். செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் ஜெர்மானிய சிறுபான்மையினர் மற்றும் நமது நாட்டின் சிறுபான்மையினரையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார். வலதுசாரியினர் மத்தியில் அவருடைய சொற்பொழிவுக்குப் பெரும் வரவேற்பும் புகழும் இருந்ததுடன், அந்தச் சொற்பொழிவு ஜெர்மானிய வலதுசாரி ‘தி பேப்பர்’ (Th paper) நாளிதழிலும் வெளியிடப்பட்டது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மரியாதைக்குரிய தலைவரான எம் எஸ் கோல்வால்கர், யூதர்கள் இனம் முழுவதையும் அழித்தொழித்து தூய்மைப்படுத்திய ஜெர்மனியைப் பெரிதும் புகழ்ந்தார். காரணம், அவரது நிலைபாடும் இந்நாட்டின் முஸ்லீம்கள் ‘வெளிநாட்டவர்களாக கருதப்படாமல்’ வாழ அவர்கள் எதையும் கோராதவர்களாக, சலுகைகளைக் கேட்காதவர்களாக – அவ்வளவு ஏன், இந்தியக் குடியுரிமையும் கேட்காதவர்களாக – இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்படிந்து வாழலாம் என்பதே ஆகும்.
வழிந்தோடும் அதே வெறுப்பு வெள்ளம் சுதந்திரம் அடைந்த பிறகு இன்றும் ஜீவிதமாய் தர்ம சன்சத் பேச்சாளர்கள் உரைகளில் எதிரொலிக்கிறது: (இந்தியாவிலும் நாஜிகள்போல) இனப்படுகொலை நடத்த வெளிப்படையாக அறைகூவல் விடுகின்றனர்; இந்தியாவின் 20 கோடி முஸ்லீம் இனத்தவரை ஒழித்து கிராமங்களைத் ‘தூய்மைப்படுத்த’ உள்ளதாக பயமுறுத்துகிறார்கள்.
ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள் பலர் ஒன்றிய அரசிற்குக் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்; அதில் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய கூட்ட நிகழ்வுகளை அனுமதிப்பது நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்புக்குப் பெரும் அச்சுறுத்தல், அக்கூட்டங்களுக்கு அனுமதி அளித்தது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நிர்வாகத்தின் மாபெரும் தோல்வி எனப் பொறுப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச அளவில் சீற்றமான எதிர்வினைகள் வந்த பிறகு மூன்று பேர் மீது ஒரு பிரிவின் கீழ் மட்டும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
(கடைசி தகவல்: தொடக்கத்தில் கூறிய பொதுநல மனு விசாரணை ஏற்புக்குப் பிறகு இப்போதுதான் யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நீதி நிலைத்திட நல்லோர்கள் போராட்டம் தொடரும் – நீதி வெல்லும் என நம்புவோம்!)
–தமிழில்: நீலகண்டன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button