மீனவர்கள் மீது கப்பற்படை துப்பாக்கி சூடு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
காரைக்கால் பகுதியிலிருந்து மீனவர்கள் கடந்த பத்தாம் தேதி ஆழ்கடல் மீன்பிடி படகு மூலம் வங்கக் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் உள்புற கடலில் மீன் பிடித்துவிட்டு, கடுமையான மழை பெய்த நேரத்தில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கப்பற்படையின் ஐஎன்எஸ் பங்காரம் ரோந்து கப்பல் மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கி சூட்டில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல் (32) படுகாயம் அடைந்து, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியக் கப்பற்படை கப்பலில் ரோந்து செல்லும் வீரர்களுக்கு, நாட்டின் படகுகள் அடையாளம் தெரியாமல் இருப்பது வியப்பளிக்கிறது.
மேலும் மீன்பிடி படகை நெருங்கி, அதன் நகர்வை தடுத்து, அடையாளம் கண்டு, சோதனையிடுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல், சந்தேகத்தின் பேரில் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கதக்க செயலாகும்.
பாதுகாப்பு முகமை கடல் எல்லை ரோந்துப் பணிக்கு பொருத்தமான வழிகாட்டல் நெறிமுறைகள் உருவாக்க வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதலும், அது மீனவர்களைக் கைது செய்வதுடன் உடைமைகளைச் சேதப்படுத்துவதும் தொடரும் சூழலில், இந்தியக் கப்பற்படை சொந்த நாட்டின் குடிமகனின் உயிருக்கு ஊறு செய்திருப்பது வேதனையளிக்கிறது.
துப்பாக்கி சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மரைன் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும், இதன் விசாரணை எந்த வித குறுக்கீடும் இல்லாது நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர் குடும்பத்துக்கு ஒன்றிய அரசு ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கடலோர காவல் பணியால் மீனவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.