தமிழகம்

மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலையின்மை பல விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

குடும்ப உறுப்பினர்களின் உயிர் வாழ்வுக்கும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்கும் வேலை தேடி அலைந்து திரிவோர் அவல நிலை எழுத முடியாத துயரமாகும். இந்தப் பரிதாபகரமான நிலையைப் பயன்படுத்தி பணம் குவிக்கும் சட்டவிரோத செயலில் சில கும்பல்கள் ” வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகமைகளாக” செயல்பட்டு வருகின்றன. இதில் பணம் கொடுத்து ஏமாந்து விட்ட, ஆயிரக்கணக்கானோர் சட்டப்படி புகார் கொடுத்துள்ளனர். ஆனால், குற்றச் செயல்கள் குறைந்தபாடில்லை.

அண்மையில் தாய்லாந்தில் வேலையில் அமர்த்துவதாகக் கூறி, அழைத்துச் சென்றவர்கள், மியான்மார் நாட்டின் மியாவாடி நகருக்கு கொண்டு சென்று, கொத்தடிமைப் பணிக்கு நிர்பந்தித்து, சித்தரவதை செய்வதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி மியாவாடியில் சிக்கியுள்ளவர்கள், தாய்லாந்தில் தவிக்கவிடப்பட்டவர்கள் குடும்பங்களில் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என உறுதியளித்த பாஜக ஒன்றிய அரசு, நடைமுறையில் ஏமாற்றி விட்டதால், தொழிலாளர்கள் அயல்நாடுகளில் அவதிப்படும் கொடுமை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மியான்மாரில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்டு, அவரவர் வீடுகளில் ஒப்படைத்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க ஒன்றிய அரசும், அயலுறவுத்துறையும் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, நாட்டின் பிரதமரையும், அயலுறவுத்துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button