மின்துறை தனியார்மயம் – இந்தியாவே இருள்மயம்!

த.லெனின்
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின் துறையில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்தி தற்போது முதலமைச்சரோடு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தீபாவளி பண்டிகைவரை ஒத்திவைக்க உடன்பாடு கண்டுள்ளனர்.
மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனியார் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க முடியாது என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார். பொதுவாக நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளை தான் தனியார்மயமாக்க துடிதுடிக்கும் ஒன்றிய அரசு. லாபத்தில் இயங்கக் கூடிய புதுச்சேரி மின்துறையை ஏன் ஒன்றிய அரசு விற்க வேண்டும்?
தனது லாப வெறி பசியோடு இருக்கும் கார்ப்பரேட் எஜமானர்களுக்கு உண்ணும் உணவாக இதைக் கருதுகிறதோ?
கோவிட் கால நெருக்கடியைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசு, மின்துறையை தனியார்மயமாக்கும் சட்டமுன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்றியது. அதில் மின் பகிர்மானம், பெரும்பாலும் மாநில அரசுகளின் கையில் இருப்பது. கோவிட் தொற்றுக்கால ஒன்றிய அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கையின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மின் வினியோக முறையை மாநில, யூனியன் பிரதேசங்களின் கைகளில் இருந்தவற்றையெல்லாம் தனியார் மயமாக்கினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி புதுச்சேரி மாநில சட்டமன்றம், ஒன்றிய அரசின் இந்த தனியார்மயமாக்கல் முடிவுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியது. தனியார்மயமாக்கலை திரும்பப் பெற வேண்டும் என்ற அன்றைய முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்த அத்தீர்மானத்தை அவரும், அன்றைய மின்துறை அமைச்சரான கமலக்கண்ணணும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை சந்தித்து, அதனை அவரிடம் அளித்தனர். அவரும் உடனடியாக அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். அந்த மின்துறை தனியார்மாக்கலைதான் இன்றைய பா.ஜ-.க. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆதரித்ததுடன் அதை நிறைவேற்ற அடம் பிடித்து வருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக பெரும் கட்டண உயர்வை அறிவித்து பயனாளிகளின் தலையில் கைவைத்துள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அறிவித்த போது, அதைக் கண்டித்து வாய் சவடால் அடித்த பா.ஜ.க.வின் அண்ணாமலை தொடங்கி, சங்க பரிவார கும்பல் அனைவரும் இப்போது வாய்பொத்தி மவுனம் காப்பதன் காரணம் என்ன?
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு என்றால் போராட்டம், புதுச்சேரியில் மின்துறையைத் தனியார்மயமாக்கி, கட்டண உயர்வு என்றால் கொண்டாட்டம் என்ற மனநிலையில் அவர்கள் இருப்பது, அவர்களின் சீழ்பிடித்த மூளையின் தன்மையைக் காட்டுகிறது.
பா.ஜ-.க. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பல மாநிலங்களில் இதே போன்ற தனியார்மயமாக்கலை முன்னெடுத்து வருகிறது. பா.ஜ.க. யோகி ஆதித்தியநாத் ஆட்சி நடைபெறும் உ.பி.யில் 21 மாவட்டங்கள் அடங்கிய கிழக்கு உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி மின்துறை வினியோகத்தை தனியார்மயமாக்கி அறிவித்தது. அதைக் கண்டித்து மின்துறை பணியாளர்கள் கடும் எதிர்ப்பினைக் காட்டிப் போராடினர்.
ஆதித்யநாத் அரசை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்தையும் அறிவித்து மக்களைத் திரட்டினர். இந்த நிலையில், மக்கள் மத்தியில் வரும் கடும் எதிர்ப்பை கண்டு உ.பி.அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டது.
இழப்புகள் அதிகரிக்கிற போது அதைத் தனியார்மயமாக்கி கட்டண கொள்ளையில் ஈடுபடுவதுதான் அவர்களது நரித்தந்திரம். நமது கேள்வி – இப்படி தனியார் மயமாக்கப்பட்ட துறைகளில் இழப்புகள் கட்டுக்குள் வந்திருக்கிறதா? கட்டண உயர்வின்றி நிர்வாக சீர்திருத்தங்கள் எந்தத் துறையிலாவது மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா?
ஏற்கனவே தொலைத் தொடர்பில் பி.எஸ்.என்.எல். அரசால் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு 4ஜிக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்து, ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சிக்காக கொலை பட்டிணி போட்டு கொன்றொழித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கண் முன்னால் இந்த உதாரணம் இருக்க வெறும் உதார்விடும் பா.ஜ.க. வினர் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
ரபேல் போர் விமான ஒப்பந்தத்திலும் அவசர கதியில் உச்சநீதிமன்றத்தின் ஆதரவைப் பெற்றதைப் போல மின்துறையிலும் தனியார்மயாமாக்கத் துடிப்பது ஏன்? அதானி என்ற ஒற்றை நபருக்காக!
பிரதமரின் பிரதான தொழிலதிபரான அதானி, தான் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.5.50 பைசாவிற்கு மாநில அரசுகளுக்கு விற்பனை செய்கிறது. மாநில அரசுகள் அதனை ரூ.1.90 பைசாவிற்கு பயனாளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக மாநில மின்சார வாரியங்கள் கடும் நிதி நெருக்கடியிலும், கடனிலும் தத்தளிக்கின்றன.
மின்சார உற்பத்தியில் ஈடுபடும் அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களது லாபத்தை உறுதி செய்து விற்பனை செய்தபோதிலும், அவர்களது கடனை வங்கிகள் ரத்து செய்கின்றன. ஆனால், கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துறையின் கடன்களை எங்கும், எப்போதும் ரத்து செய்ததாக வரலாறு இங்கு இல்லை. இதன் மூலம், லாபமும் அவர்களுக்கு, அவர்களுடைய தவறான செயல்பாட்டால் வரும் நஷ்டங்களும் அவர்களை அண்டவிடாது, வங்கிகளே ஏற்றுக் கொள்ளும் ஒரு புதிய வழியைத்தான் வளர்ச்சி நாயகன் மோடியின் ஆட்சி வளைந்து, நெளிந்து தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
மாநில, யூனியன் பிரதேச மின்துறை பணியாளர்கள் அரசின் நிறுவனம் என்ற அடிப்படையில்தான் பணி வாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நால்கோ நிறுவன பணியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, உச்சநீதிமன்றம் எந்த ஒரு பணியாளரின் விருப்பமும் இன்றி அந்த நிறுவனத்தின் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றக் கூடாது. அது அரசாக இருந்தாலும் அல்லது அதன் நிர்வாகத்துறையின் மூலமோ பணி விதிமுறைகளை மாற்றக் கூடாது என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது.
இங்கே, புதுச்சேரியில் அந்தப் பணியாளர்கள் விருப்பம் இல்லாமல், தனியார்மயமாக்க பா.ஜ.க. என்.ஆர்.காங்கிரஸ் ஏன் துடிக்கிறது?
2003ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மின்சாரச் சட்டம், 131(2) ன்படி வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் நில மதிப்பு ஆகியவற்றை குறைந்த விலைக்கு அளிப்பது கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தனியார்மயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு அடிமாட்டு விலைக்கு இவற்றையெல்லாம் அள்ளிக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
உதய் மின் திட்டம் என்கிற பெயரால் மக்களுக்கு உதவாக்கரை திட்டமாகவும், கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவு நீளும் கரமாகவும் மாறி இருப்பதன் மர்மம் என்ன?
ஒட்டுமொத்த யூனியன் பிரதேசங்களையும் தனியார் மயமாக்கிய ஒன்றிய அரசு முதலில் டெல்லியில்தான் அமல்படுத்தியது. அதன்பிறகு ஒரிசா மாநிலத்தின் மின்துறையை டாடாவிற்கு கையளித்தது. அந்த ஒப்பந்தப்படி, இனி வரும் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் வர்த்தக இழப்பினால் வரும் இழப்புகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கட்டண நிர்ணயிப்புக்கான ஒன்றாகக் கொள்ளலாம் என்று சொல்கிறது. இதில் தவறுகள் நடந்தால் அதாவது மின் இழப்பை குறைக்கத் தவறினால் அந்த நிறுவனம் ஒரு சதத்திற்கு ரூ.50 கோடியை தண்டமாகக் கொடுக்க வேண்டும்.
ஆனால், டாடா நிறுவனம் கோவிட் பெருந்தொற்றை காரணம் காட்டி தப்பித்துக் கொண்டு வருகிறது. ஆனால், அதே கோவிட் தொற்றை காரணம் காட்ட முடியாமல் மக்கள் கட்டண சுமையை அனுபவதித்து வருகிறார்கள்.
இப்படித்தான் முதல்முறையாக 13 நாள் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் காலத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனா & பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின்போதுதான் அவசர அவசரமாக அமெரிக்க மின்துறை நிறுவனமான என்ரான் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு தனியார் மயமாக்கினர். அதற்காக ஸ்டேட் பேங்க் பலகோடி ரூபாய் அந்நிறுவனத்திற்கு கடனாக அளித்தது. அதற்குப்பின் மும்பை உள்ளிட்ட அதன் பெரும் நகரங்கள் அனைத்திலும் அரசு நிர்ணயித்த கட்டணங்களைவிட பல மடங்கு மின்கட்டண உயர்வை அறிவித்தது என்ரான் நிறுவனம்.
இந்த நிலையில் அமெரிக்காவில் என்ரான் நிறுவனம் நொடித்துப் போய்விட்டது. தனது கணக்குகளை மிகச் சாதுரியமாக இழப்புகளை மறைத்து காட்டிதான் இந்திய ஒப்பந்தத்தை அது பெற்றிருந்தது தெரிய வந்தது. அரசின் துறையில் உள்ள பலருக்கு லஞ்சம் கொடுத்துதான் இந்த ஒப்பந்தத்தை பெற்றதாகவும் செய்திகள் கசிந்தன-.
இத்தனியார்மயமாக்கலால் மகாராஷ்டிரா அரசு மட்டுமல்ல, ஸ்டேட் வங்கியும் சேர்ந்தே தண்டம் அழுதது. இதுதான் இந்தியாவின் மின்சாரத்துறையின் தனியார்மயமாக்கலின் வரலாறு!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் லாபத்தில் இயங்கி வரும் அரசின் மின்துறையை ஏன் தனியார் மயமாக்க வேண்டும்? அந்த அழிவு வேலையை ஒன்றிய அரசு ஏற்கனவே தொடங்கி விட்டது. இதைக் கண்டித்துதான் புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்புப் போராட்டக் குழுவை உருவாக்கினர். அதன் சார்பில்தான் காலவரையற்ற இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். போராட்டம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதைக் கண்டு அஞ்சிய பா.ஜ.க. என்.ஆர்.காங்கிரஸ் அரசு போராடும் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி வரை ஒத்திவைத்திருக்கிறது. இப்பேச்சுவார்த்தையில் 51 சத பங்குகளை புதுச்சேரி அரசின் வசம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதோடு தனியார் மயத்தை முற்றாக எதிர்ப்போம் என்றும் அறிவித்துள்ளனர். இதில் அரசு பின்வாங்கினால் மீண்டும் போராட்டம் தொடரும் என்பதையும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
தனியார் மயம் ஒருபோதும் மக்களுக்கு நன்மை செய்யும் தாரக மந்திரம் அல்ல. மாறாக, அதிகம் லாபம் என்பதே அதன் இலக்கு. யாருக்கு மின்சாரம் வேண்டும், வேண்டாம் என்பதெல்லாம் அதற்கு தேவையில்லாத ஒன்று. மின்துறை பொதுத்துறையில் இருந்தால் தெருக்களில் மின்ஒளி இருக்கும். தனியார்மயமானால் தெருக்கள் இருளில்தான் மிதக்கும். தேவையா இந்தத் தனியார்மயம் ?
தொடர்புக்கு: 94444 81703