மின்சாரத் திருத்த சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள், குடியிருப்போர் சங்கங்கள் இணைந்து எதிர்ப்பியக்கம் – அனைத்து தொழிற்சங்க கூட்டம் முடிவு
தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம் 18.8.2022 மாலை 4:30 மணிக்கு சென்னை எழும்பூரில் எச்எம்எஸ் அலுவலகத்தில், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொதுச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. மு.சண்முகம் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் எச்எம்எஸ் அகில இந்திய தலைவர் க.அ. ராஜா ஸ்ரீதர், எம்.சுப்பிரமணிய பிள்ளை, தொமுச பொருளாளர் கி நடராஜன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, எம்.ராதாகிருஷ்ணன், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி சுகுமாரன், ஐஎன்டியுசி மாநில செயலாளர் டி வி சேவியர், ஏஐயூடியுசி வி.சிவக்குமார், உழைக்கும் மக்கள் மாமன்றம் இரா.சம்பத், ஏஐசிசிடியு திருநாவுக்கரசு, எல்எல்எஃப் பேரறிவாளன், எம்எல்எஃப் அந்தரி தாஸ், எல்டியுசி ஏ.எஸ்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொமுச பேரவை இணைப் பொது செயலாளர் மா.பேச்சிமுத்து, தமிழ்க் கடல் நெல்லை எஸ்.கண்ணன் ஆகியோர் மறைவுக்கு கூட்டம் அஞ்சலி செலுத்தியது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
மின்சார திருத்த சட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு கடுமையாக முயல்கிறது. தற்போது அந்தச் சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஓராண்டு நீடித்த விவசாயிகள் போராட்டத்தில் இறுதியில் மின்சார திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு வாக்குத் தவறுகிறது.
இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கியுள்ள மின் உற்பத்தி நிலையங்கள், லட்சக்கணக்கான மின் கோபுரங்கள், விநியோக உட்கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்றிய அரசு இச்சட்டத்தின் மூலம் தாரை வார்க்கிறது. இதனால் மின் நுகர்வோர் கடும் பாதிப்பு அடைவார்கள். மின் கட்டணம் பல மடங்கு உயரும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி கைத்தறி உள்ளிட்டவற்றுக்கு கிடைத்த கட்டண சலுகை, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அனைத்தும் பறிக்கப்படும்.
இந்த மின்சார திருத்தச் சட்டத்தை உடனடியாக நிபந்தனை இன்றி திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டம் வலியுறுத்துகிறது.
இந்தத் திருத்தச் சட்டத்தினால் மக்கள் சமூகப் பிரிவுகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்பட இருக்கும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொல்ல, விரிந்த பரப்புரை மேற்கொள்வதன இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
விவசாய சங்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள், வணிகர்கள், நெசவாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அமைப்புகளை ஒன்று சேர்த்து தமிழ்நாடு முழுமையிலும் விரிவான எதிர்ப்பியக்கம் நடத்த முடிவு செய்கிறது. இதற்கான நூல் வெளியீடுகளை ஆயத்தப்படுத்தி, இயக்கத் திட்டத்தை இறுதிப்படுத்த, மீண்டும் 8.9.2022 அன்று கூடுவது என முடிவு செய்யப்படுகிறது.