மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை அருகில் பார்த்து ரசிக்கும் திட்டம் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
தலைமுறை தலைமுறையாக மாற்றுத் திறனாளிகளாக பிறந்தவர்கள் சிலவற்றின் மீது ஆர்வம் காட்டினாலும் வாழ்நாள் முழுவதும் அதனை அடைய முடியாமல் போவதை மனித குலம் கண்டு வருகிறது.
“அரிதரிது மானிடராய் ஆதல் – அரிது
மானிடர் ஆயினும் கூன், குருடு, செவிடு, பேரு நீங்கிப் பிறந்தல் அரிது’’ – என்கிறது ஒளவையின் அரிது குறித்த பாடல்.
பிறப்பால் குறைபாடு கொண்டவர்களையும், வாழும் காலத்தில் அங்கம் இழந்தவர்களையும் சமூகம் இழிவுபடுத்தி வந்தது.
வேதனைகளை மனதில் சுமந்து வந்த இவர்களும் திறமையுள்ளவர்கள்தான், எவருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்ற முறையில் “ஊனமுற்றோர்” என்ற சொல்வதை விட்டொழித்து “மாற்றுத்திறானாளிகள்” என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்ற பெயர் வழங்கினார்.
தொலைதூரத்தில் நின்று இது தான் கடல் என பார்த்து வந்த “மாற்றுத்திறானிகள்” கடல் தண்ணீரில் கால் நனைக்கும் அளவில் ஏற்பாடுகள் செய்திருப்பது காலம் முழுவதும் சுடர் விட்டு நிற்கும் சிறப்புத் திட்டமாகும். இதனை செயல்படுத்த முனைப்புக் காட்டிய மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி, திட்டத்தை வரவேற்கிறது.
இவ்வாறு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.