தமிழகம்

மாற்றுத்திறனாளி லேப் டெக்னீசியன்களுக்கு பணிநிரந்தரம் வழங்க வேண்டும்! – தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு நேற்று (11/06/2022) வெளியிட்ட ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பு பின்வருமாறு:

மாற்று திறனாளிகள் உள்ளிட்ட 33 பேர் லேப் டெக்னீசியன்களாக (Lab technician) தற்காலிக அடிப்படையில், மாதம் ரூபாய் 8000 தொகுப்பூதியத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, பணி நிரந்தரம் செய்யப்படாமல் ,தற்காலிகமாகவே பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

மாற்று திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் தனிபாதை அமைத்ததற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாற்று திறனாளிகளுக்கு என்று தனியாக அருங்காட்சியகம் (museum) “அனைத்தும் சாத்தியம்” அமைத்து கொடுத்தமைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் உள்ள 4 சதவிகிதம் இட ஒதுக்கீடு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என கண்காணிக்க ஒரு குழு அமைத்ததிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, மாற்று திறனாளிகள் மீது அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்:

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும், பதிவு மூப்பு அடிப்படையிலும் பணி நியமனம் பெற்ற 22 மாற்று திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் உள்ளிட்ட மொத்தம் 33 பேர் தொழில்நுட்ப ஆய்வகர்களாக (Lab technician) பணியாற்றுகிறார்கள்.

2010 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் பணி ஆணை வழங்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர். இவர்கள் MRB என்ற அமைப்பு உருவாகும் முன்பே பணி அமர்த்தப்பட்டவர்கள். பத்தாண்டுகளாக தொடர்ந்து, எவ்வித இடைநிற்றலும் இல்லாமல், பணியாற்றுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை மாதந்தோறும் வெறும் ரூ.8000 மட்டுமே தொகுப்பூதியமாக பெற்றுக் கொண்டு பணிபுரிகிறார்கள்.

கொரானா காலத்தில் ,மாற்று திறனாளிகள் பணிக்கு வரத் தேவையில்லை என அரசு அளித்த சலுகையைக் கூட பயன்படுத்திக் கொள்ளாமல், எல்லோரும் பணி புரிந்தனர். அவர்களில் சிலருக்கு கொரானா ஊக்கத்தொகை கூட இது வரை வழங்கப்படவில்லை.

தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி லேப் டெக்னீசியன்களுக்கு பணிநிரந்தரம் வழங்க வேண்டும்.

மாற்று திறனாளிகள் இரண்டு ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற 16.10.2008 தேதி யிட்ட (GO 151) அரசாணை உள்ளது. அந்த அரசாணையை நடைமுறைபடுத்தி பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.

GO (4D)13 date 30.3.2013 என்ற அரசாணைபடி இரண்டாண்டு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப ஆய்வகர்களை காலமுறை ஊதியதிற்கு கீழ் அரசு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல், இந்த மாற்றுத் திறனாளி ஆய்வக நுட்புனர்களுக்கும், பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளான அவர்களை நீண்ட தொலைவிற்கு இடமாறுதல் செய்து 30.05.2022 அன்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பெரும்பாலும் பெண்களாகவும், திருமணமானவர்களாகவும், குழந்தைகள் உள்ளவர்களாகவும் உள்ள இந்த பணியாளர்களுக்கு சமூக நீதி வழங்கிட வேண்டும்.

இவண்,
டாக்டர் ஏ.ஆர். சாந்தி,
பொதுச் செயலாளர் ,
தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு.
9444181955
9940664343

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button