கட்டுரைகள்

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கமும் – கட்டுரைச் சுருக்கத்தின் பகுதி – 2

பொருளாதார அமைப்புமுறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல் கட்டுமானம் கட்டப்படுகிறது என்ற அடிப்படையிலிருந்து, மார்க்ஸ் தமது ஆய்வினை இந்தப் பொருளாதார அமைப்புமுறையின் மீது செலுத்தினார்.

முதலாளித்துவ வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்தில்தான் அரசியல் பொருளாதாரம் முதன்முதலாக உருப்பெற்றது. ஆடம் ஸ்மித்தும், டேவிட் ரிக்கார்டோவும் பொருளாதார அமைப்புமுறையை ஆராய்ந்து,  மதிப்பு பற்றிய உழைப்பு தத்துவத்துக்கு பங்காற்றினர். அவர்களுடைய பணியை மார்க்ஸ் தொடர்ந்து நடத்தினார். “ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது” என்று விளக்கினார்.
முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள், பொருட்கள் இடையிலான (பண்டமாற்று) உறவு என்பதாக விவரித்ததை,  மனிதர்கள் இடையிலான உறவு என்று  மார்க்ஸ் காண செய்தார்.

பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது.

பணம் என்பது, இந்தப் பிணைப்பு தனி உற்பத்தியாளர்களின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் பிரிக்க முடியாதபடி இணைத்து மேலும் மேலும் நெருக்கமாவதைக் குறிக்கிறது.

மூலதனம் என்பது இந்தப் பிணைப்பு மேலும் வளர்ச்சியுறுவதைக் குறிக்கிறது: அதாவது, மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகிவிடுவதைக் குறிக்கிறது.

உழைப்பாளியானவன்  நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகியவற்றின் உரிமையாளர்களிடம் தனது உழைப்புச் சக்தியை கூலிக்காக விற்கிறான்.
தொழிலாளி வேலைநாளின் ஒரு பகுதியைத் தன்னையும், தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக  (கூலிக்காக) உழைப்பதில் கழிக்கிறான். மறுபகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறான். இந்த உபரி மதிப்புதான் இலாபத்துக்குத் தோற்றுவாய்; அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்.  இதுவே  மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்துக்கு அடிப்படை அம்சமாகும்.

தொழிலாளியினால் உண்டாக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை அழித்து வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்குவதின் மூலமாக அது தொழிலாளியை நசுக்குகிறது. தொழில் துறையில், பெருவீத உற்பத்தியின் முன்னோக்கிய நகர்வை விவசாயத் துறையிலும் காண முடிகின்றது. விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகிப்பதும் அதிகரிக்கிறது; பண மூலதனத்தின் நெருக்கடியில் விவசாயப் பொருளாதாரம் சிக்கிக் கொள்கிறது; அது தனது பிற்பட்ட தொழில்நுட்பத்தின் சுமையால் அழுத்தப்பட்டு அழிகிறது.

மூலதனமானது சிறு அளவிலான உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும், பெரிய முதலாளிகள் ஏகபோக நிலையைப் அடைவதற்கும் வகை  செய்கிறது.

உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத் தன்மை பெறுகிறது: ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பில் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிணைக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால், அந்தக் கூட்டு உழைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள்.

இந்த “உற்பத்தியில் அராஜகம் வளர்கிறது; அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன; சந்தைகளைப் பிடித்துக் கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது: பெருந்திரளான மக்களின் வாழ்க்கையை  பாதுகாப்பற்றதாக்கி விடுகின்றது”.

தொழிலாளர்கள் மூலதனத்தை அண்டிப்பிழைக்க வேண்டிய நிலையை முதலாளித்துவ முறை தீவிரப்படுத்தும் அதே சமயத்தில், தொழிலாளர் வர்க்கம் எனும் மாபெரும் பலத்தையும் பிறப்பித்து விடுகிறது. இவ்வாறாக, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டினார்.

உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப்போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.

குறிப்பு : மாமேதை லெனினின் “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கமும்” என்ற கட்டுரையிலிருந்து…

தொடர்புக்கு : சரவணன் வீரையா, 9488752879

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button