கட்டுரைகள்

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும் – 1

மார்க்சின் போதனையானது உலகெங்கிலுமிருந்தும் முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும் பெற்று வருகின்றது. மார்க்சியம் “நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்” என்று முதலாளிய விஞ்ஞான முறையானது பரப்பியும் வருகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த போக்கையும் நாம் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், “வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் “ஒருசார்பற்ற” சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது”.

அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், ஏதாவதொரு விதத்தில் கூலி அடிமை முறையை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப் பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் இலாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமை முறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.

இது மட்டுமல்ல, தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் ‘குறுங்குழுவாதம்’’ போன்று எதுவும்  கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஒரு இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல; உலக நாகரிக வளர்ச்சியின் வழியே வராமல் அதிலிருந்து விலகி  முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில்தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது.

தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத் தான் மார்க்சின் போதனை எழுந்தது.

மார்க்சின் போதனை மெய்யானது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கான அம்சங்களோ, முதலாளித்துவத்திற்கு ஆதரவான ஒடுக்குமுறைகளோ எந்த வடிவத்தில் இருந்தாலும் இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது.

“ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19ம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம். இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும். மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும்”. இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.

தத்துவஞானம்: பொருள்முதல்வாதம்

பொருள்முதல்வாதம் தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் உள்முரணற்ற தத்துவஞானமாகும், இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும்.

மூட நம்பிக்கை, பகட்டு, பசப்பு இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும் என்பது ஐரோப்பாவின் நவீன கால வரலாறு முழுவதிலும், இன்னும் குறிப்பாக மத்திய காலக் குப்பைக் கூளங்களை எதிர்த்தும், நிறுவனங்களிலும், கருத்துக்களிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தை எதிர்த்தும் நடைபெற்ற முடிவான கடும் போராட்டத்தில் ஆயுதமாயிருந்தது என்பதை பிரெஞ்சு நாட்டில் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டது.

ஆகவே, “பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்துமுதல்வாதத்தின் பல வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ, ஆதரிக்கவோதான் செய்கிறது”.

மார்க்சும், ஏங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல் வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்து முன்னெடுத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள்.

ஏங்கெல்ஸ் எழுதிய லுட்விக் ஃபாயர் பாஹ், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கையேடுகளாகும்.

18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்துவஞானத்தை முன்னேறச் செய்தார். மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம் திரட்டிய செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவ முறையிலிருந்து இயக்கவியல் மற்றும்   ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் ஆகியவற்றிலிருந்து திரட்டிய செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினார்.

இந்தச் செல்வங்களில் பிரதானமாக விளங்குவது இயக்கவியல்தான், இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும்; நிரந்தரமாக வளர்ச்சியுற்றவாறுவுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும்.

ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது – இவைபோன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்று வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன. அழுகிப்போன பழைய கருத்துமுதல்வாதத்தைப் பற்றிய “புதிய” மறு   வியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவத் தத்துவஞானிகள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை.

தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலை மனித சமுதாய பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார்.

மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும், அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன?

“உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது” என்பதை – உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை – அது காட்டுகிறது.

“இயற்கை என்பது- அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது-மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு பொருளாதார கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது.

அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல்கட்டுமானமேயாகும்”.  உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கத்தைப் பலப்படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.

மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவஞான பொருள்முதல்வாதம் ஆகும். இந்த பொருள் முதல்வாதம்  மனித குலத்திற்கு, குறிப்பாக தொழிலாளி வர்க்கத்திற்கு, மகத்தான அறிவு சாதனங்களை வழங்கியிருக்கிறது.

தொடர்புக்கு : சரவணன் வீரையா, 9488752879

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button