சக மனிதன் மீது, அவன் சாதியின் காரணமாக கீழே அமர வைத்து, நெஞ்சு பதறாமல் சிறுநீர் கழிக்கும் ஆணவம் நிலைத்துள்ள இந்நாட்டில் மாமன்னன் போன்ற அரசியல் படம் வருவது வரவேற்கத்தக்கது.
மாமன்னன் திரைப்பட விமர்சனம்
-
எம்.ஆர். ஆதவன்
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் மூன்றாவது படமான ‘மாமன்னன்’, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் போன்ற திரை ஆளுமைகள் நடித்து இசையாளுமையான ஏ ஆர் ரகுமானின் இசையில் , தேனீஸ்வர் ஒளிப்பதிவில் வெளிவந்த முதல் நாளே வசூல் சாதனை படைத்தது.
ஒடுக்கப்பட்ட வகுப்பை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் மாமன்னன்(வடிவேலு). அவரது மகன் அதிவீரன்(உதயநிதி ஸ்டாலின்). இவர்களுக்கும், தமது கட்சியிலேயே இருக்கின்ற ஒரு இடைநிலை சாதியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ரத்தினவேலுக்கும்(பகத் பாசில்) இடையே, சாதிய ரீதியாகவும் கட்சிய ரீதியாகவும் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் ஒடுக்கு முறை பற்றி பேசும் படம் தான் மாமன்னன்.
திரைப்படத்தின் முதல் காட்சியிலிருந்தே இயக்குநரின் கைவண்ணம் இழையோடுகிறது. பன்றித் தொழுவம், நாய் ஓட்டப்பந்தயம், புத்தர் சிலை போன்ற பல காட்சிகள், கதையின் ஓட்டத்துக்கு வலிமை சேர்க்கின்றன.
இதுவரை பெரும்பான்மையான படங்களில் நகைச்சுவை வேடங்களில் வந்த வடிவேலு, இந்தப் படத்தின் மூலமாக தனது அழகான குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு செயற்கையான, சினிமாத்தனமான அப்பாவாக இல்லாமல், இயல்பாக அந்தப் பாத்திரத்தை உள்ளார்ந்து வெளிப்படுத்தியதற்காகவே வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டும்.
ஆங்காங்கே கொஞ்சம் மலையாள வாடை வந்தாலும், ஒரு ‘ஆண்ட பரம்பரை’யாளனான ரத்தினவேல் கதாபாத்திரத்தை திறம்பட பகத் பாசில், அற்புதமாக நடித்துள்ளார். உதயநிதி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாகக் கையாண்டு உள்ளனர்.
மாரி செல்வராஜ் தனது திரைக்கதையை, எப்போதும் உண்மைச் சம்பவங்களின் மேல் கட்டமைப்பார். அதன்படி இந்தப் படத்தில் நான்கு சிறுவர்கள் கோவில் கிணற்றில் குளித்ததற்காக கற்களால் அடித்தே கொல்லப்படுவது, நமக்கு கொளப்பாடி சம்பவத்தை நினைவூட்டுகிறது
தேனீஸ்வரர் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. பன்றித் தொழுவத்தில் நடக்கும் காட்சிகள், நாய் பந்தயக் காட்சிகள் மற்றும் முக்கியமான இடங்களில், படம் கருப்பு வெள்ளையாக மாறுவது மிக அழகான உருவகமாகிறது.
தனது அப்பா, ஒரு மனிதனுக்கான மரியாதையைப் பெற வேண்டும் என்று மகனுக்கு எழும் கொதிப்பு, இதனால் தன் மகனுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாதே என்று பதறுகிற தந்தையின் போராட்டம், தனது சாதிப் பெருமையை இழந்துவிடக் கூடாது எனக்கு துடிக்கும் ரத்தினசாமியின் வன்மம் என மூன்றும் ஒரு புள்ளியில் சந்திக்கும் இடத்தில் இடைவேளை வந்து, திரையரங்கத்தில் கைதட்டல்களை அள்ளுகிறது.
படத்தின் முதுகெலும்பாய் இருப்பதே திரைப்படத்தின் வசனங்கள் தான்.
“நாலு பேரோட கொலவெறி எப்படிய்யா நானூறு பேரோட மானப் பிரச்சனையாகும்” என்று மாமன்னன் கேட்பது- “உன்னோட அப்பன நிக்க வெச்சது, என்னோட அடையாளம். உன்ன உட்கார சொல்றது என்னோட அரசியல்” என்று ரத்னசாமி ஆவேசத்துடன் பேசுவது-
“நான் முதல்ல சேவக சுந்தரத்தின் பையன். அப்புறம் தான் உங்க கட்சியின் மாவட்டச் செயலாளர். எங்க அப்பாவோட கௌரவத்தை தப்புன்னு ஒத்துக்க முடியாது” என்று ரத்தினவேல் முதலமைச்சரிடம் கூறுவது-
“உனக்கு மேல இருக்கவன் கிட்ட தோத்தாலும் பரவால்ல; உன் கூட இருக்கிறவன் கிட்ட தோத்தாலும் பரவாயில்லை; ஆனா உனக்கு கீழ இருக்கறவன் கிட்ட மட்டும் தோத்திராத! அது நீ செத்ததுக்கு சமானம்” என்று ரத்தினவேலிடம் அவரது தந்தை கூறுவது-
“இங்க பணம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, அதிகாரம் அடிக்குதான்னு யோசிச்சா நமக்கு பைத்தியமே பிடித்துவிடும், எல்லாம் ஒன்னுசேர்ந்து தான் அடிக்குது” என்று கீர்த்தி சுரேஷ் சொல்வது-
இது போன்ற வசனங்கள், திரைப்படத்தை இன்னும் தீவிரமாய் ஆக்குகின்றன.
திரைப்படம் முதல் பாதி வரை மிகவும் நேர்த்தியாக நம்மை கட்டி வைத்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியோ, தொய்வாக ஒரு சராசரியான அரசியல் டிராமாவாக திரும்பிவிட்டது வருத்தம்.
படத்தின் பாடல்கள் கேட்க மிகவும் அற்புதமாக இருக்கின்றன. அதிலும் வடிவேலு பாடும் ‘தந்தானத் தானா’ உயிரையே சுண்டுகிறது. ஆனாலும், கதையின் போக்கோடு வெறும் இரண்டு பாடல்களே பொருந்திப் போகின்றன.
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் குரலில், ‘நெஞ்சமே நெஞ்சமே’ மற்றும் ‘உச்சந்தல’ வெகு பொருத்தம்.. ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை மிகவும் அழகாக அமைந்துள்ளது. ஆனால் இதற்கு முந்தைய படங்களில், மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகியோரிடம் நாம் பார்த்த ஒத்திசைவு, இதிலும் தொடர்ந்திருந்தால் வேறு மாதிரி வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கதைக்களங்கள் வேறு வேறு தான் என்றாலும், மாரி செல்வராஜின் முந்தைய இரண்டு படங்களும் ஏதோ ஒரு வகையில் நம்மை அந்த கதாபாத்திரத்துடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளத் தூண்டின. ஆனால் மாமன்னனிலோ கதாபாத்திரங்கள் கொஞ்சம் தள்ளியே இருக்கின்றன.
சிவப்புக் கொடியை ஏந்தியும், சேகுவேரா, லெனின் படங்களை சட்டையில் அணிந்தும் வருகிற கீர்த்தி சுரேஷுக்கு கதையில் கொஞ்சம் அதிக பங்கு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி, ஆதிக்க சக்திகளை களத்தில் எதிர்கொண்டு சமரங்களை துவக்கியதே சிவப்பு இயக்கம் தான். இப்போதும் அதன் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் இது போன்ற படங்களில், சிவப்பின் சுவடு கூட இல்லாமல் இருந்த நிலையை மாற்றி, இந்த அளவுக்காவது இடம் தந்து இருப்பதை பாராட்டலாம்.
சமூகத்திற்கு தேவையான திரைப்படத்தை எடுத்த மாரி செல்வராஜ், தனக்குக் கிடைத்த வெளியை மிகவும் நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார். ஆனால் முந்தைய இரண்டு படங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. இந்த மூன்றாவது படத்தில் கொஞ்சம் அழுத்தம் குறைவாகவே உள்ளது.
தனித் தொகுதிகளில் ஊராட்சித் தலைவராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டால், ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்து விட்டு, மற்றவர்கள் நாற்காலிகளில் மேசை முன் அமர்ந்து கூட்டம் நடத்தும் அவலம் இன்னும் தமிழகத்தை விட்டு போய்விடவில்லை. அதற்கு உடன்பட மறுத்து தேர்வு செய்யப்பட்டவர் எதிர்த்து நின்றால், ஓட ஓட விரட்டி சென்று வெட்டுவதும் நின்றபாடில்லை.
இப்போதும் சக மனிதன் மீது, அவன் சாதியின் காரணமாக கீழே அமர வைத்து, நெஞ்சு பதறாமல் சிறுநீர் கழிக்கும் ஆணவம் நிலைத்துள்ள இந்நாட்டில் இப்படிப்பட்ட ஒரு அரசியல் படம் வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.
சாதிப் படம் என்று சிலரால் வர்ணிக்கப்பட்ட மாமன்னன் திரைப்படத்தைப் பற்றிய சரியான விமர்சனம்