மாண்டஸ் புயல் – அரசின் நடவடிக்கைக்குப் பாராட்டு!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
வங்கக் கடலில் உருவான “மாண்டல்” புயல் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட அனுபவத்தில், மாண்டஸ் புயல் தாக்குதலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொண்டது. இதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் “பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, எந்த நிலையினையும் சந்திக்க அரசு தயார் நிலையில் உள்ளது” என அறிவித்தார். பேரிடர் மீட்புக் குழு, நிவாரண ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இந்தச் சூழலில் வெள்ளிக்கிழமை (09.12.2022) நள்ளிரவு தொடங்கி, சனிக்கிழமை (10.12.2022) அதிகாலை மூன்று மணி வரை செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகில் மாண்டஸ் புயல் கரை கடந்தது.
சென்னைப் பெருநகரின் வீதிகளில் மழை வெள்ளம் தேங்காமல், போக்குவரத்து தடையின்றி இயங்கியது. மின்சாரம் பெருமளவு தடையின்றி கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக புயல் காற்றின் தாக்குதலில் விழுந்த மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. மாண்டஸ் புயலில் மக்களின் இயப்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் சமாளித்த அரசின் நடவடிக்கை அனைவரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. குறிப்பாக, ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் கடுமையான புயல் காற்றும், தொடர் மழையும் இருந்த நேரத்தில், சாலைகளில் இறங்கி, களப்பணியாற்றியது, நாட்டின் எல்லைகளில் பணியாற்றும், இராணுவ வீரர்களை நினைவூட்டியது.
மக்கள் சமூகம் எதிர்கொள்ளும் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், அரசின் துறைத் தலைவர்கள், பெருநகர ஆணையர், மேயர் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, பாரட்டி வாழ்த்துகிறது.
மாண்டஸ் புயல் காற்றில் உயிரிழந்துள்ளோர் குடும்பங்களுக்கும், பயிர்களை இழந்து நிற்கும் விவசாயிகள், வாழ்விடம் உள்ளிட்ட வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கும் போதுமான நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.