மழை – வெள்ள பாதிப்பு.. நிவாரணம் அறிவிப்பு.. தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை : தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவ மழை தீவரம் அடைந்ததன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. சென்னை, கன்னியாகுமரி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், திருச்சி, திருவாரூர் என பல்வேறு மாவட்டங்களில் வெள்ளத்தால் பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ள நீர் பல இடங்களில் படிப்படியாக வடிந்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழையால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட, 23 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. பொன்னேரி பகுதியில் மட்டும், 11 ஆயிரத்து, 100 ஏக்கர் நெல் பயிர்கள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 566 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது தெரியவந்துள்ளது.
1750 ஏக்கர் நிலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் செங்கல்சூளைத் தொழில், உப்பளத் தொழில், மீன்பிடி தொழில், விவசாயத் தொழில், கட்டிட கட்டுமானத் தொழில், ரப்பர் பால் வெட்டும் தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையின் காரணமாக இறச்சகுளம், தாழக்குடி, நாவல்காடு, ஈசாந்திமங்கலம் மேலூர், ஈசாந்தி மங்கலம் கீழூர், திருப்பதிசாரம், தேரூர், தேரேகால்புதூர், சுசீந்திரம், மருங்கூர், நல்லூர், குலசேகரபுரம், வடக்கு தாமரைக்குளம், இரவிபுதூர், லீபுரம், கொட்டாரம் கிழக்கு, புத்தேரி, கணியாகுளம், வடசேரி நீண்டகரை ஏ கிராமம், பாகோடு, பத்மநாபபுரம், கல்குளம், வேளிமலை, சடையமங்கலம், வில்லுக்குறி, வெள்ளிமலை, தெரிசனங்கோப்பு, திடல், வீரமார்த்தாண்டன்புதூர், அழகியபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,750 ஏக்கர் நெல், வாழை, ரப்பர், உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
பயிர்கள் மூழ்கின டெல்டா மாவட்டங்களிலும் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் மீண்டும் பெய்த தொடர் மழையால் கோணக்கடுங்கலாறு கரை உடைந்து ஏறத்தாழ 1,500 ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. சம்பா பருவ நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்க் காப்பீடு பாதி பேர் செய்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வு நடத்தியது இது தொடர்பாக ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றனர்.
பார்வையிட்டது இந்த குழுவினர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் எவ்வளவு ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்தது? அதில் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்ற விவரங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் விவாதித்தனர். அதன் பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி சேத விவரங்களை கேட்டனர். பின்னர் அவர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதங்களை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தனர். நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டது. இதே போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் வெள்ள சேதத்தை பார்வையிட்டார்.
2 நாளில் தயார் அமைச்சர்கள் குழு நடத்திய ஆய்வில் டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்து 68 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஆய்வுக்கு பிறகு அமைச்சர்கள் குழுவினர் கடந்த 2 நாட்களாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சேத மதிப்பு பற்றிய அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்தது.
அமைச்சர்கள் இதற்கிடையே கன்னியாகுமரி பகுதியில் சேத விவரங்களை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னை திரும்பினார். இதையடுத்து இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் டெல்டா பகுதி பயிர் சேதம் குறித்த அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தனர்.
நிவாரண உதவி
மொத்தமாக டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 68ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் , நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
எவ்வளவு நிவாரணம்
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்களை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்து சேதம் அடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் சாகுபடி செய்து மூழ்கிய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.6038 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரம் விதை
இதில், மறு சாகுபடி செய்திட ஏதுவாக 1485 ரூபாய்க்கு 45 கிலோ குறுகிய கால விதை நெல்லும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களில் ஏற்படும் மஞ்சள் நோயை தடுத்திட 1235 ரூபாய்க்கு 25 கிலோ நுண்ணூட்ட உரமும், 354 ரூபாய்க்கு 60 கிலோ யூரியாவும் 2,964 ரூபாய்க்கு 125 கிலோ டி.ஏ.பி. உரமும் இடுபொருட்களாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.