மனு சாத்திரம் கூறும் சூத்திரன்!
த.லெனின்
சமீபத்தில் சூத்திரர்கள் குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குறித்து பா.ஜ.க.வும் சங்கப் பரிவாரங்களும் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகின்றன. மக்களவைத் தலைவருக்கு புகார் மனு அனுப்பி இனி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.
பா.ஜ-.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆ.ராசா மீது பல காவல் நிலையங்களில் புகார் அளித்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
ஆ.ராசா கூறிய கருத்துக்கள் உண்மைக்கு மாறானதா? இந்துக்களை அவர் தாசியின் மகன்கள் என்று கூறினாரா? என்பதை ஆய்வு செய்தால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக இதை முன்வைப்பவர்களின் வாதங்களை தவிடுபொடியாக்கும் உண்மைகள் வெளிவரத்தான் செய்யும்.
மனுதர்ம சாஸ்திரம் என்ற நூல் ஒருவரால் எழுதப்பட்டது அல்ல. ஆனால், பல காலங்களில் பலரால் இயற்றப்பட்டு நமது ஸ்மிருதிகள், இதிகாசங்கள், காப்பியங்களில் தொடர்ந்து பேசப்பட்டு, அது ஒரு சமூகச் சட்டமாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
மனு வைவாஸ்தவா, மனு அப்ஸாவா, மனு சம்வரனா என்ற மூவரும் வேத காலத்தில் பேசப்பட்ட மனுக்கள் ஆவர். ரிக்வேதம் மனுவை மற்ற ரிஷிகளில் ஒருவராகத்தான் குறிப்பிடுகிறது. யஜூர் வேதத்தில் மனு பிரஜாபதி என்று குறிப்பிடப்படுகிறார். அதர்வண வேதத்தில் இவர் சரண்யுவுக்கும் – வாஸ்த்துவுக்கும் பிறந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் மேலும் ஒரு ஆறு மனுக்கள் பேசப்படுகின்றனர். அவர்கள் சுயம்புவான மனுவில் புத்திரர்களாம்!
அறிஞர் ஜெய்ஸ்வாலின் கருத்துப்படி மனுஸ்மிருதி கி-.மு. 150க்கும் கி.பி.100க்கும் இடையில் உருவானதாக கூறுகிறார். புத்த மதத்தை அழித்து சூத்திர மவுரிய சாம்ராஜ்யத்தை உடைத்து, அரசியல் செல்வாக்கு பெற்ற பிராமணியமும், வைதீகமும் தனது வெற்றியைக் குறிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டதுதான் மனுதர்மம்.
ஏற்கனவே, இந்தியாவில் நடைமுறையில் இருந்த பொதுவான நீதி குறித்த கிரிமினல், சிவில் சட்டங்களை அழித்து இந்த மனுதர்ம சட்டம் அமலாக்கப்பட்டது. அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மதச்சார்பற்ற சட்டங்களை எடுத்துவிட்டு அந்த இடத்தில் மனு சட்டங்களை வைத்துவிட்டனர். எனவே, பாரம்பரியமாக இருந்த மதச்சார்பற்ற சட்டங்களை அழித்துதான் சாதிக்கு ஒரு நீதி சொன்ன மனு நீதி சட்டங்கள் நடைமுறைக்கு வந்தது என்பது தெளிவாகிறது.
‘சதுர்வர்ணம் மாயா ஸ்ருஷ்டம்‘ நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று கிருஷ்ணர் கூறும் கூற்று இந்த மனுதர்மத்தை உள்வாங்கிதான் வந்திருக்கிறது.
புருஷோத்தமரான அந்த பகவான் முகத்தில் இருந்து பிராமணர்களும், அவரது தோளிலிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிலிருந்து சூத்திரர்களும் உருவானார்கள் என்கிறது பாகவதம்.
அரசன் பிரமணனிடம் அறிவுரை கேட்பது நன்று. அது ஆக்கம் தரும். அவர்களின் முடிவிற்கு புறம்பாக நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர் என்கிறார் மனு. பத்து வயதுள்ள பிராமணனையும் நூறு வயதுடைய சத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது. பிராமணன் தகப்பன் மரியாதையையும், சத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது கடமை என்று மனு நீதியில் அத்தியாயம் 2:135ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆ.ராசா பேசியது ஏதோ, இந்துப் பெண்களை கேவலப்படுத்திவிட்டதாக குதிக்கும் சங்கப் பரிவாரங்கள் மனு நீதியைப் படித்தார்களா? இதோ பாருங்கள்…
கணவர் தூராசாரம் உள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரிலோலனாய் இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், பதிவிரதையான ஸ்திரியானவள் அவரை தெய்வத்தைப் போல் போற்றி பூஜிக்க வேண்டும். மனு 5:154.
பாலியத்தில் தகப்பனின் ஆஞ்சையிலும், யவ்வனத்தில் கணவரின் ஆஞ்சையிலும் கணவன் இறந்த பிறகு பிள்ளைகளின் ஆஞ்சையிலும் இருக்க வேண்டியதே அல்லாது ஸ்திரிகள் தன் சுவாதினமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. மனு 5:148
மாதர்களின் ஸ்பாவமே மனிதர்களுக்கு சிருங்கார சேஷ்ட்டைகளினால் தோஷத்தை உண்டுபண்ணும். மனு 2:213
தாய், தங்கை, பெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாகக் உட்காரக் கூடாது. மனு 2:215
மாதர்கள் கற்பு நிலைமையும் நிலையா மனமும் நம்பிக்கையும் இயற்கையாக உடையவர்கள். மனு 9:15
மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று அனேக ஸ்ருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. மனு 9:19
பெண்களை பாவ யோனியில் ஜனித்தவர்கள் என்று இழிவுபடுத்தியதும் பிராமண பெண்களாக இருந்தாலும் சூத்திரப் பெண்கள்தான் என்று பிரித்தாளும் சதியை எப்படி நீதி என்று சொல்வது?
மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான உழைப்பாளி மக்களை காலிலிருந்து பிறந்த சூத்திரனாக இழிவுபடுத்தியது ஏன்? பிராமணர்களின் மிச்சப்பட்ட உணவை, பழைய உடைகளை, நொய் முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்கு கொடுக்க வேண்டும் என்று மனுதர்மத்தின் அத்தியாயம் 10 சுலோகம் 125 கூறுகிறது.
சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படுவர்.
1. யுத்தத்தில் புறம்காட்டி ஓடுபவன். 2. யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன். 3. பிராமணனிடத்தில் பத்தியால் ஊழியம் செய்கிறவன். 4. விபச்சாரியின் மகன். 5. விலைக்கு வாங்கப்பட்டவன். 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன். 7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் என்று அத்தியாயம் 8 சுலோகம் 415ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூத்திரன் சொர்க்கத்திற்காகவாவது, ஜீவனத்திற்காகவது அல்லது இரண்டிற்காவது பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று பெயர் வந்தால் அதே அவனுக்கு பாக்கியம் என்று அத்தியாயம் 10 சுலோம் 122ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி மனு தர்மத்தில் சூத்திரனை அற்பப் பிறவியாக எழுதியவர் மீது கோபப்படாமல் அதை எடுத்துச் சொன்ன ஆ.ராசா மீது ஏன் வருகிறது கோபம்?
இப்போது சொல்லுங்கள், இந்த சூத்திர இழிப்பட்டங்களை ஒழிக்கத்தானே சாத்திரக் குப்பைகளை ஒழிக்கக் பாடுபட்டார் தந்தைப் பெரியார். சூத்திரன் யார்? என்று ஒரு பெரிய ஆய்வையே செய்து சூத்திரர்களையும், ஆதி சூத்திரர்களான பஞ்சமர்களையும் இணைத்து அந்த உழைப்பாளி மக்களின் உயர்வுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் அவர்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக பாடுபட்டவர்தானே அண்ணல் அம்பேத்கர்!
ஏன், சுவாமி விவேகானந்தர் இதுவரை இந்தியாவில் சத்ரிய ஆட்சியைப் பார்த்தாகிவிட்டது, பிராமண ஆட்சியையும் பார்த்தாகி விட்டது, இனிமேல் உழைக்கும் மக்களான சூத்திரர் ஆட்சிதான் இந்தியாவில் ஏற்பட வேண்டும் என்று முழங்கியது இவர்களுக்கு எட்டவில்லை போலும்!
ஒரு விதவையின் கண்ணீரை துடைக்க முடியாத ஒரு அனாதையும், வயிற்றில் ஒரு கவலம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ சமயத்திலோ எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது என பேசியவர் சுவாமி விவேகானந்தர்.
தோட்டிகளையும், பறையர்களையும் இன்றைய இழிநிலைக்கு கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்கு பொறுப்பாளிகள் யார்? நிச்சயமாக ஆங்கிலேயர்கள் பொறுப்பாளிகள் அல்லர். அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப்பாளிகள் ஆவோம்! என்று விவேகானந்தர் பேசியதும் மதத்தின் உட்கருத்தை வலியுறுத்தாமல் வெளி ஆச்சாரங்களை பிரதானப்படுத்தி இந்த நிலையை உருவாக்கியது நாட்டின் உயர்தட்டு வர்க்கம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், செத்த மொழியான சமஸ்கிருதத்தை விவேகானந்தர் விட்டு வைக்கவில்லை. ஏனெனில் இவற்றில் தானே வேதங்களும், சாதியை போதிக்கும் மனு நீதியும், உப நிடதங்களும், ஸ்மிருதிகளும் உள்ளன.
“மதச் சண்டைகளும், சாதி வேற்றுமை கலகங்களும் பல்குவதற்கும் பெரும் கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருதமே! சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமேயானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
குற்றங்களுக்கான தண்டனை மட்டுமல்ல, வேலைக்கான கூலியையும், சாதி படிநிலைப் பார்த்துதான் கொடுக்க வேண்டும் என்று இச்சட்டங்கள் எச்சரிக்கின்றன. ஒருவருடைய செல்வத்தை பிராமணர்கள் திருடிச் சென்றால் அது அடுத்த பிறவியில் நன்மையாக முடியும். சூத்திரனுக்கு செல்வம் அளித்தால் நரகத்திற்குள் விழ அது காரணமாகி விடும் என்கிறது சுக்கிர நீதி.
சாதிகளுக்கு இடையே கலப்பு திருமணமும், சமபந்தியும் வேறு விதமான கூட்டணிகளும் கூடாது என முன்பை விட கடுமையாக்கப்பட்ட சாதி சட்டங்களை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றும் இந்த சாத்திரங்கள் கட்டாயப்படுத்துகின்றன. சிலரை தீண்டத்தகாதவர்கள் என்றும், மிலேச்சர்கள் என்றும் தங்க வேலை செய்வோர், இரும்பு வேலை செய்வோர், துணி வெளுப்பவர்கள், மர வேலை செய்வோர், அன்றாட உபயோகப் பொருட்களை விற்போர் போன்றவர்களை தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும் அவை தீர்ப்பளித்தன.
கடற் பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது. அப்படி மேற்கொள்ளுபவர்களை சாதியிலிருந்து வெளியேற்ற வேண்டும். அல்லது அதற்கு கடுமையான பிராயச்சித்தத்திற்கு ஆட்படுத்த வேண்டும் என்று கூறுகின்றன. இறந்து விட்ட கணவனை எரிக்கும்போது மனைவும் சிதையில் உயிரை மாய்த்துக் கொண்டால் புண்ணியம் கிடைக்கும் என்றும் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும், விதவைகள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றன.
அக்பர் காலத்தில் வழக்கத்தில் இருந்த சாத்திரங்களின் சில நிபந்தனைகள் கீழ் வருமாறு உள்ளது.
1. இருமல் பிராமணனைக் கொன்றதற்கான தண்டனையாகும். அதற்கான பிராயச்சித்தம் நான்கு தோலா தங்கத்தால் ஒரு தாமரைப் பூவைச் செய்து மந்திரம் செய்து பிறகு அதை பிராமணனுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
2. காய்ச்சல் நிரபராதியான பிராமணனை கொன்றதற்கான தண்டனையாகும். பிராயச்சித்தம் மகாதேவ மத்திரத்தை 300 முறை உருவிட்டு மகாதேவ சிலைக்கு அர்ச்சனை செய்து 13 பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
3. ஒரு பெண்ணின் கணவன் அவளுக்கு முன்னரே இறப்பது முற்பிறவியில் நற்குடும்பத்தில் பிறந்த அவள் வீட்டைத் துறந்து அந்நிய நபர் ஒருவருடன் குடும்பம் நடத்தி அவனுடைய சிதையில் உயிரை மாய்த்துக் கொண்டதன் விளைவுதான். பிராயச்சித்தம் அவள் தன்னைத்தானே பனிக்கட்டியில் புதைத்துக் கொண்டு உயிர்விட வேண்டும் அல்லது வாழ்நாள் முழுவதும் விரதம் இருந்து காலம் தள்ள வேண்டும்.
4. ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவது அவள் முற்பிறவியில் நடத்தை கெட்ட வாழ்வை மேற்கொண்டபோது, அவளுடைய வீட்டிற்கு விளையாடச் சென்ற குழந்தைகளை விரட்டியதற்கான தண்டனையாகும். பிராயச்சித்தம் அவள் ஒரு மண் பாத்திரத்தில் நூறு கிணறிலிருந்து தண்ணீர் சேமித்து அதில் ஒரு முழு பாங்கையும் ஒரு தோலா தங்கத்தையும் போட்டு பிறகு பிராமணனுக்கு அதை தானமாக கொடுத்து விட வேண்டும்.
5. ஒரு பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் பிறந்தால் முற்பிறவியில் அவள் மிகுந்த திமிர்பிடித்தவளும், கணவனை மதிக்காதவளுமாக இருந்ததற்கான தண்டனையாகும். பிராயச்சித்தம் அவள் ஒரு வெள்ளைக் காளையின் கொம்புகளை நான்கு தோலா தங்கத்தாலும், குளம்புகளை நான்கு தோலா வெள்ளியாலும் ஒன்றரை தோலா செம்பினாலும் பொதித்து ஒன்றரை சேர் பித்தளையால் தயாரித்து ஒரு பாத்திரத்துடன் அவற்றை பிராமணனுக்கு தானமாக கொடுப்பதுடன் நூறு பிராமணனுக்கு வயிறார உணவும் அளிக்க வேண்டும் என்ற வினோதங்களே இந்து மதச் சட்டங்களாகவும், வேதகங்களாகவும் இருக்கிறது என்றால் இதை மாற்றுவதற்குப் பதிலாக மாற்ற வேண்டும் என்பவர்களை தாக்குவது என்ன நீதி?
இங்குதான் பகுத்தறிவு தேவைப்படுகிறது.
பிராமணர்கள் செய்யக் கூடாத தொழில்களில் தோல் தொழில் என்று சுட்டப்படுகிறது. இப்படிப்பட்ட பிராமணர்கள் இன்று பேட்டா காலணி விற்கும் கடைகளில் வேலை செய்கிறார்கள் என்று தோழர் டாங்கே குறிப்பிட்டதுபோல, பலவற்றின் மாற்றம் கண்டுள்ளனர். நீண்ட குடுமியை அகற்றி முடிவெட்டிக் கொள்கின்றனர். நவீன உள்ளாடைகள் அணிந்து பேன்ட் சட்டை அணிந்து கொள்கின்றனர். இவையெல்லாம் வரவேற்கத்தக்க பகுத்தறிவு பரிமாணங்களே! ஆனால், மற்றவர்கள் செய்தால் சாத்திர குற்றம் என்பதுதான் இமாலய தவறாகும். எனவே, மனு தர்மம் அல்ல அதர்மத்தின் சட்டம் அநியாயத்தை நிகழ்த்தும் நாட்டம் அது என்பதே உண்மை.
தொடர்புக்கு: 94444 81703