அறிக்கைகள்

மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வாயிற்கதவில் மனிதக் கழிவு பூசப்பட்டதற்கு கண்டனம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை

திருத்தணி – மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வாயிற்கதவில் மனிதக் கழிவு பூசப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாயிற்கதவில் மனித கழிவு பூசப்பட்ட செய்தி அதிர்ச்சியோடு அறுவெறுப்பு ஊட்டுகிறது. நாகரிகமற்ற இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட அதிர்வுச் சூழலில், மத்தூர் பள்ளியில் மனித கழிவு பூசப்பட்டது மேலும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்த போது பல இடங்களில் மனித கழிவு சிதறி கிடப்பதும், மது பாட்டில்கள் பரவிக் கிடப்பதும் தெரியவருகிறது. அத்துடன் உரிய சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது.

ஒரு பள்ளிக்கூடத்திற்கு தேவையான குறைந்தபட்ச உட்கட்டமைப்புகள் இல்லாதது குறித்து ஏற்கனவே மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் மீது உரிய கவனம் இல்லாதது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு பள்ளிக்கல்விக்காக, பள்ளிக்கூடங்களுக்காக பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் திட்டம், ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (சிஎஸ்ஐடிஎஸ்) என திட்டங்களை செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு, வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தல் குறித்த அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் (எஸ்எம்சி) பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டு அதில் உள்கட்டமைப்புக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் இவர்களோடு ஊராட்சிமன்ற உறுப்பினர் இணைந்து பள்ளி உள்கட்டமைப்புக்கு செயலாற்ற வழிவகுக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் இருப்பினும், எத்தகைய முயற்சிகளும் மத்தூர் பள்ளியில் ஏற்படுத்தாதது ஏற்புடையதல்ல.

திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலகம், மாநில கல்வி அலுவலகம் உடனடி தலையீடு செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டிலேயே கல்வித்துறையில் சிறந்தோங்கும் தமிழ்நாட்டின் “கல்வி நற்கூறுகளை” மேலும் முன்னெடுக்க வேண்டுகிறோம் என கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button