தமிழகம்

மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி சக்திகள் ஒன்றுபடுவோம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவை ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவோம்!தமிழகத்தை விழிப்புடன் காப்போம்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு அறைகூவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு திருப்பூர்,
தா.பாண்டியன் நகரில், சேதுராமன் டாக்டர் வே துரை மாணிக்கம் அரங்கில்
ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி 9 ம் தேதி வரை நடைபெற்றது.
மாநாடு 92 தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது.

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இந்திய
விடுதலைப் போராட்டம் 90 ஆண்டுகள் நடைபெற்றது. ஆயிரம் ஆயிரம்
வீரர்களின் ரத்தத்தால் விடுதலை பெற்றது மட்டுமல்ல; 565
சமஸ்தானங்களாக வெள்ளையன் விட்டு சென்ற பின்பு அதை இந்தியா என்ற
பன்மைப் பண்பாடுகள் கொண்ட நாடாக இந்திய விடுதலை இயக்கம் தான்
உருவாக்கியது. இந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதது மட்டுமின்றி,
பிரிட்டிஷ்காரனுக்கு துதி பாடி போராட்டத்தை காட்டி கொடுத்த ஆர்எஸ்எஸ்-
பாஜக கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி நடத்திக்
கொண்டிருக்கிறது.

வீட்டுக்கு 15 லட்ச ரூபாய் தருவேன், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை
தருவேன், கருப்பு பணத்தை முற்றாக ஒழிப்பேன், டாலருக்கு நிகரான இந்திய
ரூபாய் மதிப்பை உயர்த்தி காட்டுவேன் என்றெல்லாம் ஏராளமாக
வாய்ச்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்த மோடி இவற்றில் எதையும்
நிறைவேற்றவில்லை. மாறாக இந்திய மக்கள் கடந்த 75 ஆண்டுகளாக முதலீடு செய்து உருவாக்கி வைத்திருந்த அரும்பெரும் பொதுத் துறை
நிறுவனங்கள் எல்லாம், அவருடைய கார்ப்பரேட் எஜமானர்களுக்கு, ஏறத்தாழ
இலவசமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

உலகமே பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த நேரத்தில்,
இந்தியாவைக் காப்பாற்றிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையும், காப்பீடு
நிறுவனங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் பாஜக ஆட்சி விற்றுக்
கொண்டிருக்கிறது. காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் என்ற கூற்றுக்கு
மாறாக இந்தியாவின் செல்வங்களை கார்ப்பரேட்டுகள் தான்
உருவாக்கினார்கள் என்று வெட்கமில்லாமல் இந்தியப் பிரதமர் பேசுகிறார்.
இந்திய ராணுவத்திற்கு டாங்குகள் பீரங்கிகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட
ஆயுதங்களையும், கருவிகளையும், உடைகளையும் செய்து தரும் 41
பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை 100% அந்நிய முதலீட்டுக்கு திறந்து
விட்டிருக்கிறார். நிலக்கரி கனிமவளச் சுரங்கங்கள், ரயில்கள், ரயில்
நிலையங்கள், விமான நிலையங்கள், ஏர் இந்தியா விமானங்கள்,
துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் என்று இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு
தேவையான, பொதுமக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட,அத்தனை
பொதுச் சொத்துகளும் அநியாயமாக கார்ப்பரேட்டுகளிடம் விற்கப்படுகின்றன.
அவர்களது பகாசுர நிறுவனங்களின் லாப வேட்டைக் காடாக இந்தியாவை
மாற்றுவதற்கு வசதியாக சிறு குறு நடுத்தர தொழில்கள் அனைத்தையும்
பாஜக அரசு ஒழித்து கட்டிக் கொண்டிருக்கிறது.

பலமுனை வரியை நீக்கி, ஒரு முனை வரியாக்கிக் குறைக்கிறோம் என்ற
பெயரில் ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்டது. உலக நாடுகளில் எங்கும்
இல்லாத அளவுக்கு 28% சத வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை
அனேகமாக தினந்தோறும் ஏற்றப்படுகிறது. இது அத்தியாவசிய பொருட்கள்
உட்பட அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாக
அமைகிறது. செலவுகள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் பெரும்பாலான
குடும்பங்களில் வருவாய் குறைகிறது. உலகம் முழுவதும் கொரனோ தொற்று பரவிக் கொண்டிருக்கும் போது, அமெரிக்க ஜனாதிபதிக்கு விழா எடுப்பதில்
மும்முரமாக இருந்த மோடி அரசு, காலத்தில் நடவடிக்கை எடுக்கத்
தவறியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்தோம்., கால அவகாசம்
தராமல், சிந்தனையே இன்றி அறிவித்த திடீர் பொது முடக்கம், சாதாரண
குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துப் போட்டிருக்கிறது. புலம்
பெயர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்த
தமது இருப்பிடங்களை நோக்கி, உணவின்றி கால் பாதம் வெடிக்க, நடந்து
கொண்டிருக்க, அவர்கள் மீது தடியடி நடத்தியது வெட்கித் தலை குனியச்
செய்யும் செயலாகும்.

விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, கார்ப்பரேட் மயமாக்கும்
வகையில் மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது.
விவசாயிகள் ஓராண்டு காலம் போராடி, 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலி
கொடுத்த பின்பு, சட்டத்தை திரும்ப பெற்றது. அச்சட்டங்களின் சாரத்தை
அழிக்காமலே நடைமுறைப்படுத்தும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய வேளாண் துறையில் விதை தயாரிப்பு, இடுபொருள்களான உரம்
பூச்சிச்கொல்லி மருந்து உற்பத்தி ஆகியவை ஏற்கனவே பெரிய கார்ப்பரேட்
கம்பெனிகளின் கைகளுக்கு சென்று விட்டது. தற்போது வேளாண் பொருள்
சந்தை, கார்ப்பரேட்டுகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கான மானியங்கள் ஒழிக்கப்படுகின்றன. சுவாமிநாதன் குழு
பரிந்துரை அமலாக்குவது பற்றி அரசு சிந்திக்கவில்லை. உற்பத்தி
பொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல், கடன் வலையில்
சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இன்னும்
தொடர்கிறது.

இந்தியாவில் நிரந்தர தொழிலாளர் என்ற முறைமையையே அழிக்கும்
வகையில், தொழிலாளர்களின் வேலைக்கும் ஊதியத்துக்குமான
உத்தரவாதத்தை மோடி அரசு பறிக்கிறது. 150 ஆண்டு காலம் போராடி பெற்ற
தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில், 44 தொழிலாளர் சட்டங்களை
4 சட்டங்களாக சுருக்கி இருக்கிறது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு
நிதி, ஓய்வூதியம், இஎஸ்ஐ மருத்துவ வசதி ஆகியவையும் சிக்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எந்தச் சட்டத்தின் பயனையும் நுகர முடியாத
வகையில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கப்படுகிறது. ராணுவத்திலேயே நான்கு ஆண்டுகள் காண்ட்ராக்ட்டில்
பணிபுரியும் அக்கினி பாத் திட்டத்தை கொண்டு வந்து விட்டனர். அதைப்
பெருமைப்படுத்தி, தேச பக்தி என்பதை போன்ற மாயையை கட்டமைத்து
வருகிறார்கள். இதனை எதிர்த்த இந்திய நாட்டின் இளைஞர்கள் மீது
கொடூரமான தடியடி, துப்பாக்கிச் சூடு மற்றும் சிறை தண்டனைகள்
விதிக்கப்பட்டன.

கட்டிட மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ஓரளவு
சமூக பாதுகாப்பு தருவதற்கு துவக்கப்பட்ட மாநில நல வாரியங்களை
ஒன்றிய அரசு சீர்குலைக்கிறது. வாரியங்களுக்காக வசூலிக்கப்படும் நல
வரியையும் ஒன்றிய அரசே எடுத்துச் செல்லும் வகையில் சட்டம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமுறையை உருவாக்கும் கல்வி, வணிக மயமாக்கப்பட்டு
விட்டது. பணம் இருந்தால் தான் படிப்பு என்ற நிலை படிப்படியாக
நுழைக்கப்படுகிறது. இதையும் தாண்டிப் படித்தும் வரும் சாதாரண குடும்பத்து
மாணவர்களை உயர்கல்விக்கு செல்ல விடாமல் வடிகட்ட, நீட் தேர்வு
கொண்டு வரப்பட்டுள்ளது.

வரலாற்றை திரித்தும், அறிவியல் உணர்வை மழுங்கடிக்கவும்
பாடப்புத்தகங்களை ஆர்எஸ்எஸ்-பிஜேபி அரசு திருத்துகிறது. பள்ளிப் பாடம்
பயிலும் இளம் குருத்துகளின் மனதில் நஞ்சை விதைத்து வருகிறார்கள்.
மருத்துவம் சாதாரணமானவர்களின் கைகளுக்கு எட்டாத செலவாக
மாறிவிட்டது. அரசு மருத்துவமனைகளைத் தாழ்த்தி, கார்ப்பரேட்
மருத்துவமனைகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. அரசின்
கைகளில் மருத்துவம் இல்லாவிட்டால் எத்தகைய கொடுமைகள் அரங்கேறும்
என்பதை கொரோனா தொற்று நிரூபித்து விட்டது. ஆனாலும் மருத்துவத்தை
மக்களுக்கு வழங்கும் கடமையை மோடி அரசு கைகழுவிக் கொண்டே
இருக்கிறது.

மாநில அரசுகளை பொம்மைகள் ஆக்கி, அதிகாரங்கள் அனைத்தையும்
ஒன்றிய அரசிடம் குவித்து கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகள்
தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. நாட்டின் பன்முக கலாச்சாரம் பெரும்
ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்தி மொழியை திணிக்க கடும் அழுத்தம்
செலுத்தப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு, நகர்ப்புற, மேல்சாதி, குட்டி முதலாளித்துவ
வர்க்கம், வணிகர்கள்,வர்த்தகர்கள் போன்றோர் மத்தியில் இருந்தது. ஆனால்,
அவர்கள் கிட்டத்தட்ட சமூகத்தில் அனைத்து பிரிவுகளிலும் கால
நேரத்தையும், காசு பணத்தையும் பயன்படுத்தி ஊடுருவியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் சார்புடைய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாணவர்
அமைப்புகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தையும்
செயல் திட்டத்தையும் வேகமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ராணுவம்
மற்றும் நீதித்துறையிலும் ஆர்எஸ்எஸ் செல்வாக்கைக் காண முடியும்.
கிராமப்புறங்களிலும் கூட, ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் பல்வேறு சமூக மற்றும்
அரசியல் அமைப்புகள் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும்
தமக்குப் பின்னால் அணி திரட்ட வேலை செய்கின்றன.

பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஆர்எஸ்எஸ் ஆட்கள் சமூகத்தின்
அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதற்கு அரசு திட்டங்கள் அவர்களுக்கு
பயன்படும் வழியாகவும் மாறியுள்ளன. அவர்களது வேலையை
சட்டபூர்வமாகவே அதிக வீச்சோடு செய்வதற்கு, திட்டப் பணிகள் துணை
புரிகின்றன. ஆர்.எஸ்.எஸ் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த
மாறுபட்ட குழுக்களை ஒன்றிணைப்பதற்கு இந்துத்துவா கருத்தியலையும்
ஒரு கருவி ஆக்குகிறது.பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரை,
இந்து ஒற்றுமை என்ற பெரிய அடையாளத்துக்குள்ளாக ஒன்று சேர்த்து விட
அவர்கள் நினைக்கிறார்கள். அதே நேரத்தில் சாதியப் படிநிலை, சாதியின்
பெயரால் பாரபட்சம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமலும் பார்த்து
இருக்கிறார்கள்.

வெவ்வேறு மதத்தினர்களுக்கிடையிலான திருமணத்தைத் தடை செய்தல்,
மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருதல், மத நம்பிக்கையின்
அடிப்படையில் மனிதர்கிடையே பாரபட்சம் காட்டுதல் போன்ற பழமைவாத
சமூக செயல் திட்டத்தை ஒன்றிய அரசும் பாஜக ஆளும் மாநிலங்களில்
அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்த வேலைகளில் எல்லாம்,
ஆர்எஸ்எஸின் மேல் சாதி, ஆணாதிக்க மனநிலை வெளிப்படையாக
தெரிகிறது.

இவற்றையெல்லாம் எதிர்த்து ஆட்சேபனைக் குரல் எழுப்பினால் அவர்கள்
மீது தேச விரோதிகள், அர்பன் நக்சல்கள், தேசத் துரோகிகள் என்றெல்லாம்
முத்திரை குத்தப்படுகிறது. யாரையும் கைது செய்து விசாரணை இன்றி
சிறையில் வைத்திருக்கும் வகையில் ஊபா சட்டம் செயலில் இருக்கிறது.
எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் அறிவுஜீவிகள்
உள்ளிட்ட மேலோர்கள் வெஞ்சிறையில் வாட்டப்பட்டு வருகின்றனர்.
அரசின் செயல்பாட்டை கண்காணித்து திருத்த வேண்டிய நீதிமன்றங்கள்
உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களை பிஜேபி அரசு முடக்கிவிட்டது. காட்சி
மற்றும் அச்சு ஊடகங்களில் பெரும்பாலானவை பெரும் கார்ப்பரேட்டுகளின்
கைகளில் இருக்கின்றன. மாற்றுக் குரல் கொடுக்கும் எஞ்சிய ஊடகங்களை
பிஜேபி அரசு அச்சுறுத்தி அடிபணியச் செய்கிறது.

நாடு ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டு சர்வாதிகாரத்தை
நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக இரண்டாவது முறையாக
ஆட்சிக்கு வந்த பின்பு ஆர் எஸ் எஸ் பாஜகவின் பாசிச நடவடிக்கைகள்
பெருமளவு கூடிக் கொண்டுள்ளன.

இதனை எதிர்கொள்ள அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி
கட்சிகளின் பரந்த கூட்டணி உருவாக்குவதும், நிலை நிறுத்துவதும் அவசர
அவசிய தேவையாகிறது. அதன் மூலம் தான், பிஜேபி ஆர்எஸ்எஸ்ஸின்
ஆட்சிக்கு எதிராக ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக மாற்றை உருவாக்க இயலும்.

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கம்
வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற
ஜனநாயக முற்போக்கு கூட்டணி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்
தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியையும் அதன் கூட்டணியையும்
தமிழகத்தில் தோற்கடித்து மாபெரும் வெற்றியை பெற்றது. 2021 ஆம் ஆண்டு
சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெற்றது. தற்போது
ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சியின்
கொள்கைகளையும் ஒன்றிய அரசின் பல்வேறு மத சார்பு கொள்கைகளையும்,
எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த கூட்டணியை பலப்படுத்துவதற்கும் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணியை தமிழ்நாட்டில் தோற்கடிக்கவும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதி மக்களின் நலன்களை
காப்பதற்கு முன்னின்று போராடுவதற்கும் அனைத்து பகுதி மக்களையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button