மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து பிப்.13-ல் நாடு தழுவிய போராட்டம் – அதானி குழும தில்லுமுல்லுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்திடுக!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து 2023 பிப்ரவரி 13-ம் நாள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திட கட்சி அணிகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.
போராட்ட நாளன்று எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ அல்லது மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக கட்சி அணிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் இந்தப் போராட்டத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதானி குழுமத்தின் தில்லுமுல்லுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வலியுறுத்துகிறது.
அதானி மற்றும் ஒன்றிய அரசாங்கத்திற்கு இடையே இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்த ஒரு தொடர் போராட்டத்தை நடத்திட வேண்டும் என்றும் அந்தப் போராட்ட இயக்கத்தில் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் இடதுசாரி கட்சிகளும் இன்ன பிற அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.