மக்கள் போராட்டமே இரத்தவெறி கொண்ட போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும்! – கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டிமிட்ரி குத்சும்பாஸ் முழக்கம்
கிரீஸ் நாட்டின் கம்யூனிஸ்டு இளைஞர்களின் 48வது திருவிழா பல்வேறுபட்ட அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளுடன் சிறப்புற நடைபெற்றது. தெசலோனிக்கியில் நடைபெற்ற அத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டிமிட்ரி குத்சும்பாஸ் உரையாற்றினார். சர்வதேச சமூக அரசியல் வளர்ச்சிப் போக்குகள், அவை பற்றிய கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடுகள் ஆகியவை குறித்து அவர் விரிவாகப் பேசினார். அதன் சுருக்கம் பின்வருமாறு:
நமது கட்சி, குறிப்பாக, கடந்த ஆறு மாத காலமாக, ஏகாதிபத்திய போருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போருக்கான ஆயுதங்களை நமது நாட்டின் மூலமாக அனுப்புவது, நமது நாட்டைப் போருக்கான ஓர் இராணுவ தளமாக மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்சி மேற்கொண்டு வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
நமது இந்தச் செயல்பாட்டிற்கு, யூகோஸ்லாவியா மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய நேட்டோ அமைப்புக்கு எதிராக 23 ஆண்டுகளுக்கு முன் இதே தெசலோனிக்கியில் நாம் மேற்கொண்ட போராட்டங்களே, இன்று நமக்கு உத்வேகம் அளித்துள்ளன. எனவே தான், உக்ரைனில் நடைபெற்று வரும் போருக்கான உண்மையான காரணங்களை நமது கட்சி முன்னிலைப்படுத்துகிறது.
அமெரிக்கா-நேட்டோ-ஐரோப்பிய ஒன்றியம் கூறுவதைப் போல, இந்தப் போர் ஜனநாயகம் அல்லது சுதந்திரத்துக்காகத் தொடுக்கப்பட்ட போர் அல்ல; இன்றைய முதலாளித்துவ ரஷ்ய தலைமை கூறுவது போல், டான்பாஸ் பிரதேசத்தில் நீண்ட காலமாகத் துன்புற்று வரும் மக்களுக்காகவோ அல்லது பாசிசத்துக்கு எதிரான போராட்டம் என்ற நோக்கில் தொடுக்கப்பட்ட போர் அல்ல.
ஜனநாயகம், பாசிச எதிர்ப்பு எனும் புரட்டுகளுக்குப் பின்னால் மூலப்பொருட்கள், மின்சக்தி உள்ளிட்ட ஆற்றல், பொருட்களின் வர்த்தகத்துக்கான வழித்தடங்கள் மற்றும் சந்தைகள் மீதான ஏகபோக சக்திகளின் வர்க்க நலன்களே உள்ளன.
ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த இந்தப் போர் நியாயமற்றது; கொள்ளையர்களுக்கு இடையேயான போர், இலாபத்திற்காக மனிதர்களை விழுங்கும் முதலாளிகளுக்கு இடையிலான போர்!
1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைவுற்று, சோஷலிசம் தகர்க்கப்பட்டது தான், தற்போது மக்கள் இரத்தம் சிந்துவதற்கு அடித்தளமான காரணிகளைக் கட்டமைத்தது. ரஷ்யா, அதன் செல்வாக்குமிக்க பகுதிகள் என்று கருதிய பிரதேசங்களில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளன. சோஷலிசம் கோலோச்சிய காலத்தில் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வந்த உக்ரைன் மற்றும் ரஷ்ய மக்கள், தற்போது ஒருவரை ஒருவர் மாய்த்து வருகிறார்கள்.
கடந்த 30 ஆண்டுகளில், யூகோஸ்லேவியா, ஆப்கனிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற போர்கள் மற்றும் ஏகாதிபத்திய தலையீடுகளுடன் ஒப்பிடுகையில், உக்ரைனில் நடைபெற்று வரும் இந்தப் போர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. அணுமின் நிலையங்கள் மற்றும் கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதேசத்தில் இந்தப் போர் நடைபெற்று வருகிறது. அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் படவில்லை என்றாலும் கூட, பேரிடர் ஏற்படக்கூடும்.
மேலும், இப்போரானது, ஒருபுறத்தில் அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியம் – நேட்டோ அணி மற்றொரு புறத்தில் சீனா தலைமையில் உருவாகி வரும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் அணி ஆகிய இரண்டிற்கும் இடையிலான ஒரு பொதுவான மோதலைக் குறிக்கிறது. உலகளாவிய முதலாளித்துவ அமைப்பின் தலைமைப்பீடத்துக்கான மோதலைப் பற்றித் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்; நவீன ஏகாதிபத்திய உலகில் அதிகாரத்துக்கான போட்டி பற்றித் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா-நேட்டோ அணிக்கு உக்ரைனும், சீனாவுக்கு ரஷ்யாவும் உதவிகரமாக உள்ளன. முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான இந்த மோதலில் இவ்விரு நாடுகளின் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி, இம்மாபெரும் மோதல் ஏற்படுத்தியுள்ள பொருளாதார சீரழிவிற்கு ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் உள்ள மக்களும் பலியாகி வருகின்றனர்.
உக்ரைன்-ரஷ்யப் போரின் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தீவிரமான பங்கு வகித்து வருகிறது. 2014ம் ஆண்டில் உக்ரைனில் நடைபெற்ற, அரசியல் அமைப்புச் சட்ட நடைமுறைக்கு எதிரான அரசியல் நிகழ்வுகளில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய பங்காற்றியது. அத்தகைய அரசியல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற பாசிச சக்திகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்தது.
போர் நடவடிக்கைகளில் தீவிரமாக இயங்கி வரும் ஐரோப்பிய ஒன்றியம், மக்கள் நலனுக்கு எதிராக இயங்கி வரும் ஓர் அமைப்பாகும். ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்குள் ஊடுறுவி தத்தம் இலாபத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்பும் ஏகபோக சக்திகளின் வர்க்க நலனைப் பாதுகாக்க முடியும் என்ற மதிப்பீட்டை ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு மேற்கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மக்கள் விரோத அரசாங்கங்கள், அவற்றின் இராணுவமயமாக்கத்தையும், உழைக்கும் மக்களின் இயக்கங்களுக்கு எதிரான முறைமைகளையும் மேலும் வலுப்படுத்திக் கொள்ள இப்போரானது வித்திடுகிறது.
போர் நடவடிக்கைகளில் கிரீஸ் நாட்டின் பங்கேற்பிற்கும், ஏகாதிபத்திய சக்திகளின் ஏவுதளமாகவும், இராணுவ துருப்புகளின் தளமாகவும் கிரீஸ் நாட்டைச் சீர்குலைத்ததற்கும் நேட்டோ ஆதரவு சக்திகளும் அரசாங்கமும் தான் பொறுப்பாகும்.
ஏகாதிபத்திய அணி மற்றும் அதன் சூழ்ச்சிகளில் இருந்து நமது நாட்டை உடனடியாகப் பாதுகாத்திட வேண்டும். அயல்நாட்டு இராணுவ தளங்கள் மூடப்பட வேண்டும். தேச எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும். உக்ரைன் போர் கிரீஸ் – துருக்கி இடையிலான உறவு மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மீதான தடைகள் ஐரோப்பிய மக்கள் மீது புதிய பொருளாதார சுமைகளை ஏற்றி உள்ளது. எனவே, அவைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
கிரீஸ், துருக்கி மற்றும் நமது அண்டை நாடுகளில் உள்ள மக்களின் பிரச்சனைக்கு, மக்கள் போராட்டமே தீர்வு ஆகும். ஏகாதிபத்திய அணிகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களில் இருந்து மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டு, அவற்றின் சூழ்ச்சிகளுக்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டமே தீர்வாகும்.
மக்கள் போராட்டமே இரத்தவெறி கொண்ட போருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்!
இவ்வாறு கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உரையாற்றினார்.