மக்கள் பட்டினியும் கார்ப்பரேட் நன்கொடையும்
கடும் பட்டினி நிலையில் உள்ள மக்களை காப்பாற்றுவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போப்பண்ணா, ஹீரா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 16 ஆம் தேதி வழக்கை விசாரித்தது.
“பட்டினி போக்குவது பற்றி ஒருங்கிணைந்த கொள்கையை உரு வாக்குவதாக நீங்கள் வாக்களித்தீர்கள். ஆனால் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. அதிலும் ஒரு கீழ்நிலை அதிகாரி இந்த பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார். கர்வம் தலைக்கேறிய அரசு செயலாளர், உச்சநீதிமன்றத்துக்கு துளியும் மதிப்பளிக்கவில்லை. இந்தப் பத்திரத்தை நாங்கள் ஏன் வீசி எறியக் கூடாது” என்று கோபமாக நீதிமன்றம் கேட்டுள்ளது.
“நாட்டில் 6.63 லட்சம் கிராமங்களும் 2.5 லட்சம் பஞ்சாயத்துகளும் உள்ளன. இங்கு மூன்று அடுக்கு அரசு – ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு- உள்ளது. ஒரே திட்டத்தை அமலாக்கினால் அது அரசியல் சாசனத்தின் விதிகளை மீறியதாகிவிடும்“ என்று அரசின் சார்பில், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன் றத்தில் பதில் அளித்துள்ளார்.
வேறுபட்ட தன்மைகள் கொண்ட பல மாநிலங்களை உள்ளடக்கியது இந்தியா. சமைத்த உணவை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தை மாநிலங்களின் மேல் திணிக்க முடியாது என்று அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் மாத்வி திவான் வாதிட்டிருக்கிறார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே தேர்தல், ஒரே அரசு என்றெல்லாம் தினமும் முழங்கி, மாநிலங்களிடமிருந்து, வரி, கல்வி, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட பல உரிமைகளை மோடி அரசு பறித்துக் கொண்டே இருக்கிறது.
மக்களை காப்பாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டதும், இந்தியா வெவ்வேறு தன்மைகளை, வெவ்வேறு மொழிகள், பண்பாடுகளைக் கொண்ட நாடு என்று அரசுக்கு அபூர்வ ஞானம் திடீரெனப் பிறந்து விட்டது.
“மக்களின் பசியைப் போக்குவதற்கு அரசியல் சாசனமும் அல்லது எந்த ஒரு சட்டமும் எதிராக நிற்காது; தடுக்காது. மூன்று வாரங் களுக்குள் மாநிலங்களைக் கூட்டி உரிய திட்டம் வகுக்க வேண்டும்“ என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
“பல்வேறு மாநிலங்கள், பொதுச் சமையலறை மூலம் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. இனிமேல் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கிற, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு மட்டுமே உணவைத் தரவேண்டும் தரவேண்டும் என திட்டங்களை மாற்றி யமைக்கச் சொல்கிறோம்“ என்று நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட் டுள்ளது!
நன்மை செய்வதாகவே கூறி தீமைகள் புரிவதில் கை தேர்ந்தது அல்லவா மோடி அரசு! அதனால், தமிழக அரசு நடத்தும் அம்மா உண வகங்களில், இனிமேல் ஆதார் அட்டையும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வருமானம் உள்ளவர் என்ற சான்றிதழும் கொண்டு வந்தால்தான் உணவு தரவேண்டும் என்று கூட மோடி அரசு உத்தரவிட்டு விடலாம்!
முன்பு தேர்தலுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிப்பவர்கள் பெயரை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும், ஒரு நிறுவனம் தனது வருவாயில் 10 சதத்திற்கு மேலாக தேர் தல் நன்கொடைகள் வழங்கக்கூடாது என்றும் விதி இருந்தது. தேர்தல் நன்கொடைகளை முறைப்படுத்தப் போவதாக மோடி அரசு, ‘தேர்தல் பத்திரம்‘ முறையைக் கொண்டுவந்தது. இதன்படி யார், எவ்வளவு நன் கொடை தந்தார் என்பது குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. என்ன அருமையான கட்டுப்பாடு!
2019-& 20 ஆண்டுகளில் எங்கிருந்து வசூலிக்கப்பட்டது என்ற விவரம் இல்லாமல் தேசியக் கட்சிகள், பெற்றுள்ள வருவாய் ரூ. 3377.41 கோடிகளாகும். இதில் பிஜேபிக்கு மட்டுமே 78%க்கும் அதிகமாக, அதாவது ரூ.2642.63 கோடி வந்துள்ளது. அடுத்து காங் கிரஸ் 526 கோடி ரூபாய் (15.57%) வந்துள்ளது. இரண்டும் சேர்ந்து 94% ஆகும்.
தேர்தல் நன்கொடைக்கும், அதன் பின்பு தேர்வுபெறும் அரசு வகுக் கும் கொள்கைகளுக்கும் நெருங்கிய உறவு உள்ளது. இந்தியாவில் மக் கள் மீது போடப்படும் வரி அதிகரிக்கிறது. 32 ரூபாய் பெட்ரோலுக்கு 58 ரூபாய் வரி!
ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு விதிக்கப்பட்ட வரி 30% இருந்து 22%ஆக குறைக்கப்பட்டு விட்டது.
பெரும் பணக்காரர்கள் அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டுமானால் கார்ப்பரேட் தேர்தல் நன்கொடைகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். அப்போது தான் ஜனநாயகமும் காப்பாற்றப்படும், பட்டினி கிடக்க வேண்டிய அவல நிலையும் மக்களுக்கு வராது.