மக்களவையில் 22 மொழிகளிலும் நிகழ்நேர மொழிபெயர்ப்புக்கான உரிய கட்டமைப்பு – கே.சுப்பராயன் கடிதத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை பதில்!
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் மக்களவையில் கேள்வி கேட்பதற்கும் பதில் பெறுவதற்குமான நிகழ்நேர மொழிபெயர்ப்புக்கான உரிய மற்றும் போதுமான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து பிரதமருக்கு 23.02.2021 அன்று தோழர் கே.சுப்பராயன் கடிதம் எழுதி இருந்தார்.
அக்கடிதத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் 13.04.2022 அன்று எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் மக்களவையில் கேள்வி கேட்பதற்கும் பதில் பெறுவதற்குமான நிகழ்நேர மொழிபெயர்ப்புக்கான கட்டமைப்புகள் உருவாக்குவது குறித்து மக்களவை செயலகத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நிகழ்நேர மொழிபெயர்ப்பு பணியை எளிதாக மேற்கொள்ள பணியாளர்களை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.