மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு நிவாரணம் வழங்கிடுக! – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை
NMMS முறை காரணமாக, வேலையிழந்து, பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நா. பெரியசாமி, தமிழ்நாடு அரசாங்கத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் ஒன்றியம், திருப்புன்னவாசல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களின் வருகைப் பதிவேடு, அலைபேசி மேற்பார்வை முறையால் (NMMS) மென்பொருள் செயலி மூலம் பதிவு செய்யப்படுகிறது.
கடந்த 11.10.2022 மற்றும் 12.10. 2022 தேதிகளில் திட்டப் பணி வேலை செய்வதற்காக ஏழு ஆண் தொழிலாளர்களுடன் 106 பெண் தொழிலாளர்கள் காலை 8 மணிக்கு பணியிடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தொழிலாளர்களை தொடுதிரை வசதியுள்ள அலைபேசியில் படம் எடுத்து பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்தப் படத்தை செயலி வழியாக பதிவேற்றம் செய்ய, இணையதள இணைப்புக் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, தொழிலாளர்களை ஊராட்சி நிர்வாகம் வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. இதனால் இரண்டு நாள் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமான இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் தொழிலாளர் தரப்பில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்பதை தங்கள் மேலான கவனத்துக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் மேற்கண்ட தேர்வில் நோடியாக தலையிட்டு, விசாரித்து, வேலைக்கு வந்து, திருப்பி அனுப்பப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தில் உள்ளபடி, இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.