போரை நிறுத்திடுக! அமைதிக்கான பேச்சுவார்தையைத் தொடர்ந்திடுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வலியுறுத்தல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த சில நாட்களாக உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் ரஷ்யா நடத்தி வரும் இராணுவத் தாக்குதலின் விளைவாக பெரும் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இராணுவ தாக்குதலைத் தவறு என்று கருதுவதோடு உக்ரைனில் ரஷ்யப் படைகள் மேலும் முன்னேறிச் செல்வதை நிறுத்த வேண்டும் என்றும், உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும், அமைதியை மீட்டு, மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
கடந்த சில மாதங்களாக, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு உக்ரைன் மற்றும் அதன் கிழக்கு ஐரோப்பிய நேச நாடுகளுக்கு அதி நவீன ஆயுதங்கள் அளித்ததையும், ரஷ்ய எல்லைப்புற பகுதிகளில் ஏவுகணைகளை நிறுத்தி, இரு நாடுகளுக்கு இடையே பகையுணர்வை அதிகரிக்கச் செய்ததையும், அந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதையும் நாம் அனைவரும் அறிவோம்.
இந்த இராணுவ மோதல் இரு நாடுகளுக்கும் எவ்வித தீர்வையும் வழங்காது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. மேலும், எரிபொருள், இயற்கை எரிவாயு மற்றும் மூலப் பொருள்கள் ஆகியவற்றின் சந்தையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், இது போன்ற தலையீடுகளை அமெரிக்கா ஒரு முன்னோட்டமாகப் பயன்படுத்திக் கொள்ளவே இந்த இராணுவத் தாக்குதல் உதவும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டு வரும் இராணுவ விரிவாக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; ரஷ்யாவுக்கு எதிரான அனைத்து, ஒருதலைப்பட்சமான மனிதநேயமற்ற தடைகளையும் திரும்பப் பெற வேண்டும்; 2014 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட மின்ஸ்க் ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
உக்ரைன் நாட்டின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பளிக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் சுமூகமான நட்புறவு நிலவ வேண்டும் என்று விரும்புகிறது. அந்நிய தலையீட்டுக்கு இடம் தராமல், தற்போதைய பிரச்சனைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண இரு நாட்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளும் முன்முயற்சியை வரவேற்பதுடன், பேச்சுவார்த்தை மூலமாக அமைதி திரும்பும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது