இந்தியா

போராட்டக் களம் புகுவோம்! – ஏஐடியுசி மே தின அறைகூவல்! 

உழைக்கும் வர்க்கத்தில் சங்கமித்து வரும் இன்றைய இளந்தலைமுறை தொழிலாளர்களின் நலன் கருதி, 1886 – ஆம் ஆண்டு மே தினத்தின் புகழ்மிக்க வீரவரலாற்றை மீண்டும் எடுத்துரைப்பதற்கான தேவை எழுந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டு காலச் சூழலுக்குள் சற்றே பின்னோக்கி பயணிப்போம்… ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மனித சமுதாயம், அதன் வாழ்வாதார தேவைகளை உற்பத்தி செய்யும் முறையில் ஒரு மாபெரும் மாற்றம் உதயமானது. ஆம்! வேளாண்மையிலிருந்து தொழில்துறை எனும் மாபெரும் மாற்றம் அது! மதிப்பீடு செய்ய இயலாத அளவிற்கு, மனித சமுதாயம் முழுவதும் மாற்றத்திற்கு உள்ளானது. பண்ணை நிலங்களில் அடிமைகளாய் கிடந்த உழைக்கும் மக்கள், நிலப்பிரபுத்துவத்தில் இருந்து விடுதலை பெற்றனர்; தங்களைத்  தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தொழிற்சாலை எனும் புதிய கட்டமைப்பு உருப்பெறத் தொடங்கியது. அந்த ஒற்றைக் கூரையின் கீழ் ஆடைகள், பாத்திரங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பண்டங்களையும் உற்பத்தி செய்திடும் கரங்களாக தொழிலாளர்களைப் பணியமர்த்தியது.

இந்தத் தொழிற்சாலைகளில் உழைத்தவர்கள் பெயரளவிற்கு மட்டுமே சுதந்திர மனிதர்களாக இருந்தார்கள். தங்கள் உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேறிடம் செல்வதற்கான சுதந்திரம் கூட இல்லாதவர்களாகத் தவித்தார்கள். முதலாளி விதித்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு உழைத்திட அவர்கள் தொழிற்சாலைகளில் திரண்டனர். அதன் விளைவு சற்று ஏறக்குறைய எதிர்பார்த்தபடியே அமைந்தது: ஆண், பெண், குழந்தை என்ற வேறுபாடின்றி, முதலாளி அவர்களிடம் உழைப்பைச் சுரண்டினார்.  உயிர் பிழைத்திருப்பதற்கு போதுமான கூலியை மட்டுமே முதலாளி தொழிலாளிக்கு கொடுத்தார். ஆனால், வேலை நேரமோ காலை கதிரவன் விண்ணில் எழுந்தது முதல் மாலையில் மயங்கி விழுவது வரை நீட்டிக்கப்பட்டது. மின்சார ஆற்றல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, நாள் ஒன்றுக்கு 16, 17, 18, ஏன்… 20 மணி நேரம் வரையில் வேலை நேரம் நீண்டு கொண்டே போனது. உண்மையில் வேலை நேரத்திற்கு என்று ஒரு வரம்பும் இல்லாமல் இருந்தது. ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றன.

இத்தகைய போக்குகள் உற்று நோக்கப்பட்டன; ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன; பொருளியல் வல்லுநர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். ஏன் இத்தகைய போக்கு? என்பதற்கான உண்மையான காரணத்தை மாமேதை கார்ல் மார்க்ஸ் கண்டறிந்தார். முதலாளித்துவ பொருளாதார அமைப்பே இத்தகைய போக்கிற்கு மூலகாரணம் என்பதைப்  பறைசாற்றினார். உழைப்புச் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர மனித உருவாக்கமான இந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பைத் தகர்த்தெறிய வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். இந்த நோக்கம் நிறைவேற, “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்று உழைக்கும் வர்க்கத்திற்கு மாமேதை கார்ல் மார்க்ஸ் அறைகூவல் விடுத்தார். 1864 ஆம் ஆண்டு அவர் நிறுவிய சர்வதேச தொழிலாளர் அமைப்பு (முதலாவது அகிலம் என்றும் கூறுவர்) வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு 8 மணி நேரமாக வரையறை செய்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

8 மணி நேர வேலை உரிமைக்காக 1886ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற போராட்டத்தை முதலாளிகளின் குண்டர் படையும், போலீசாரும் ஒடுக்கினர். ‘ஹேமார்க்கெட் சதுக்க கலகம்’ என்று குறிப்பிடப்படும் இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களின் செங்குருதி சிகாகோ நகர வீதிகளை நனைத்தது. தொழிலாளர் தலைவர்கள் நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது; போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மூவர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 8 மணி நேர வேலை உரிமை கோரிக்கை மடிந்துவிடவில்லை. 1889ஆம் ஆண்டு இரண்டாம் அகிலம் நிறைவேற்றிய மற்றொரு தீர்மானத்தின் மூலமாக இந்த கோரிக்கை உலக அளவில் முழங்கப்பட்டது. அதன்படி, 8 மணி நேர வேலை உரிமைக்காக மே தினம் கடைபிடிக்கப்பட்டது. 1890 ஆம் ஆண்டில் உலகின் அனைத்துக் கண்டங்களிலும் உள்ள நாடுகளில் மே தினம் கடைபிடிக்கப்பட்டது.

அடால்ப் பிஷ்சர், ஜார்ஜ் ஏங்கல், ஆல்பர்ட் பார்சன்ஸ் மற்றும் ஆகஸ்ட் ஸ்பைஸ்
ஆகிய நால்வரும் 1887, நவம்பர் 11 அன்று தூக்கிலிடப்பட்டனர்.

எண்ணற்ற போராட்டங்கள் மூலமாக பல்வேறு உரிமைகளை மக்கள் வென்றெடுத்திருக்கிறார்கள். 1909ஆம் ஆண்டில் சீரான ஊதியம், பணியிட சூழல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நியூயார்க் நகரில் பெண்கள் ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டங்களே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ஆம் நாளை உலக மகளிர் தினமாகக் கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்தன.

இந்தியாவில் 10 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்பு தான், 1890ஆம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் அரை மணி நேர மதிய உணவு இடைவேளை உள்ளிட்ட உரிமைகள் வென்றெடுக்கப்பட்டன. இந்தப் போராட்ட இயக்கத்திற்கு மகாத்மா ஜோதிபா பூலேவின் சகதோழரான மேகாஜி லோகண்டே தலைமை ஏற்றார். இவர் பாம்பே மில் ஹேன்ட்ஸ் அசோஷியேஷனில் (Bombay Mill Hands Association) தலைமை பொறுப்பு வகித்தார்.

1920 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் இந்தியாவின் முதல் மத்திய தொழிற்சங்கமான ஏஐடியுசி உதயமானதே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தேசம் முழுவதிலும் ஆங்காங்கே வெடித்த போராட்டங்களின் உச்சகட்டமாக முகிழ்த்த ஏஐடியுசி, தொழிலாளர் போராட்டங்கள் மேலும் தீவிரமடைய உத்வேகம் ஊட்டியது. இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தையும் பன்மடங்கு வலுப்படுத்தியது.

உறுதிப்பாடுமிக்க தொழிலாளர் போராட்டங்கள் காரணமாக, உழைக்கும் வர்க்கத்தின் பல உரிமைகள் சட்டங்களாக இயற்றப்பட்டன. இதற்கு எடுத்துக்காட்டாக வேலையாள் இழப்பீட்டுச் சட்டம் 1923, தொழிற்சங்க சட்டம் 1926, சம்பள பட்டுவாடா சட்டம் 1935, தொழில் தகராறு சட்டம் 1947, இ.எஸ்.ஐ. சட்டம் 1948, இ.பி.எஃப். சட்டம் 1952, மகப்பேறு கால பயன்கள் சட்டம் 1961, போனஸ் பட்டுவாடா சட்டம் 1965, சம ஊதிய சட்டம் 1976 ஆகிய சட்டங்களைக் குறிப்பிடலாம்.

தேச விடுதலைக்குப் பிறகு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களைக் கட்டமைப்பதில் ஏஐடியுசி மாபெரும் பங்காற்றியது. இதன் மூலம், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதியளித்துள்ளபடி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வழங்கப்பட ஏஐடியுசி மாபெரும் பங்காற்றியது.

சுருக்கமாக சொல்வதானால், இன்றைய தலைமுறையினர் உரிமைகள் என்று கருதும் பணியிட சூழல் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு மகத்தான போராட்ட வரலாறு உண்டு. எடுத்துக்காட்டாக, மிகை நேர பணிக்கு (overtime work) இரு மடங்கு ஊதியம் என்ற உரிமைக்கு பின் நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை என்றும், 8 மணி நேரத்திற்குப் பிறகு உழைப்பதற்கு இரு மடங்கு ஊதியம் என்று சட்டப்படி வரம்பு கட்ட நடைபெற்ற போராட்ட வரலாற்றைக் கூறமுடியும்.

இன்றைய சவால்கள்:

முதலாளி – தொழிலாளி உறவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை இருபதாம் நூற்றாண்டு ஏற்படுத்தியது. இரு உலக மகா யுத்தங்கள், ரஷ்ய புரட்சி, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) போன்ற முத்தரப்பு நிறுவனங்களின் உருவாக்கம், மக்கள் நல அரசு எனும் புதிய கருத்தாக்கம் ஏற்கப் பெறுதல் மற்றும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவை சர்வதேச தொழிலாளர் அமைப்பில் விவாதிக்கப்பட்டு, அவை உறுதி செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்திட உறுப்பு நாடுகள் சட்டங்கள் இயற்றுவது என்று முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்றன.

20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின், தேசிய விடுதலை இயக்கங்கள் தீவிரமடைந்தன; ஐக்கிய நாடுகள் சபை உருவானது; பனிப்போர் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தொழில்நுட்பத்தின் அதிவிரைவு வளர்ச்சி முதலாளி – தொழிலாளி இடையிலான உறவில் மேலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தகவல் தொழில்நுட்பம் 4-வது தொழிற்புரட்சிக்கு கட்டியம் கூறியது.

அரசியல் தளத்தில் 1989 – 90களில், சோவியத் சோசலிச ஒன்றியம் சிதைவுற்றது. உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம் மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவற்றைக் கொண்டு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் மீண்டும் உலகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றன.

21 ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டு காலகட்டத்தில் நாம் பயணித்து வருகிறோம். இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு மே தினத்தில் உழைக்கும் வர்க்கத்தினராகிய நமது தற்போதைய நிலை என்ன? வரலாறு, தொடங்கிய இடத்திற்கே வட்டமடித்து மீண்டும் வந்து நிலை கொண்டுவிட்டது. கடந்த 150 ஆண்டு காலமாக உழைக்கும் வர்க்கம் போராடி வென்றெடுத்த உரிமைகளை இழந்து மீண்டும் பழைய நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். நமது முன்னோடிகள் வென்றெடுத்த உரிமைகள் பறிபோய்க் கொண்டிருப்பதை எண்ணி வேதனையுற்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அமைப்புரீதியான தொழிற்சங்கம் இல்லாத காலத்திலும் இந்திய தொழிலாளர்கள் போராட்ட களம் புகுந்தார்கள். எனவே,

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நம்மிடமிருந்து தொழிலாளர் சட்ட தொகுப்புகள் பறித்தால்தான் என்ன?

வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்த இடையூறுகள் செய்தால் தான் என்ன?

நிரந்தரப் பணிகளை காலமுறை பணிகளாக மாற்றினால் தான் என்ன?

முதலாளிகள் எளிதாக தொழில் நடத்திட இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று ஒன்றிய அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்தால் தான் என்ன?

சுதந்திரம் அடைந்த பின்பு 70 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உழைத்து உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசாங்கம் அழித்தால் தான் என்ன?

இவை அனைத்தையும் போராடி முறியடிப்போம்! இழந்த உரிமைகளை மீண்டும் வென்றெடுப்போம்!

இந்த ஆண்டு மே தினம் என்பது, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, மற்றும் தேச விரோத ஒன்றிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட நடவடிக்கைகளுக்கான ஓர் அறைகூவல் ஆகும்.

தங்கள் மீது திணிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை, தங்களின் ஒற்றுமை மற்றும் உறுதிப்பாட்டின் மூலமாக, விவசாயிகள் ஒன்றிய அரசாங்கத்தைத் திரும்பப் பெற செய்தார்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். சாதிய மற்றும் மதவாத சூழ்ச்சிகள் மூலமாக பிளவுகளை உண்டாக்குவதற்கான முயற்சிகளை முறியடித்து தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

2024 ஆம் ஆண்டில் மோடி அரசாங்கத்தைத் தூக்கியெறிந்திடுவோம் என்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் முழக்கத்தையே நாமும் மேதின சபதமாக ஏற்போம்!

தமிழில்: அருண் அசோகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button