போக்குவரத்துக் கழகங்களை காப்பாற்றுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அரசின் சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.
விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழ்மொழி போராட்ட வீரர்கள், விளையாட்டு வீரர்கள் , நாட்டுப்புற கலைஞர்கள், சட்டமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் கட்டணமில்லா சேவை வழங்கி வருகின்றது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை தமிழ்நாடு அரசு வழங்கி ஈடு செய்து வர வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியை காரணம் காட்டி, நீண்ட காலமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய ஈட்டுத்தொகையை வழங்கவில்லை.
இத்துடன் பேருந்துகள் பராமரிப்புக்கான உதிரிப்பாகங்கள் வாங்குவதற்கு, பணியாளர்களின் பணிக்கொடை தொகை, ஓய்வூதியம் போன்றவைகளை மடைமாற்றிக் கொண்டிருக்கிறது. இதனால் ஓய்வு பெறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பழுதடைந்த பேருந்துகளை நிறுத்தி விடுவதால் மக்கள் போக்குவரத்தும் பாதிக்கின்றது.
இந்த கவலையளிக்கும் நிலவரத்தை கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கழகங்களின் கடன்களை தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.