பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது ! – மருத்துவர் த. அறம் கண்டனம்
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் த.அறம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாக வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கான செய்தி அறிக்கை பின்வருமாறு:
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத்தின் 103 வது அரசியல் சட்ட திருத்தம் செல்லும், அது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானதல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இது சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கும் எதிரானதாகும்.
உச்ச நீதிமன்றம், இந்திரா சஹானி வழக்கில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என முன்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொருளாதார அடிப்படையை மட்டுமே அளவுகோலாக கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.
சாதி அடிப்படையிலான படிநிலை ஏற்றத்தாழ்வு நிலவும் நமது நாட்டில் , சனாதன வாழ்க்கை முறை என்ற கொடுமை நிலவிய நமது மண்ணில் , தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இரண்டாயிரம் ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புகளுக்கு உள்ளாகினர்.
குலத்தொழில் அடிப்படையில் கடும் உடல் ரீதியான உழைப்புச் சுரண்டலுக்கு, இழிவுகளுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகினர்.
இதனால் ,அவர்கள் வரலாற்று ரீதியாக, கல்வியிலும்,சமூக வாழ்விலும் பின்தங்கும் நிலை, உயர்ஜாதி ஆளும் வர்க்கத்தால் ஏற்படுத்தப்பட்டது.
இதை வரலாற்று ரீதியாக சரிசெய்திடவே, சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கியோருக்கு உரிய பரிகாரமும், நிவாரணமும், நீதியும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ,சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கியோர் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஏறத்தாழ வெறும் 14 விழுக்காட்டினராக உள்ள முன்னேறிய வகுப்பினர், கல்வி வேலை வாய்ப்புகள்,உயர் பதவிகள் போன்ற அனைத்திலும் 80 விழுக்காட்டிற்கும் மேல் இடங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அனுபவித்து வந்தனர்.
இன்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள், ஐ.ஐ.டி க்கள், ஆராய்ச்சித் துறைகள் போன்றவற்றில் முன்னேறிய வகுப்பினரே அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.
எனவே, கல்வி,வேலை வாய்ப்பு , ஆட்சி ,அரசு நிர்வாகம்,நீதித்துறை போன்ற அனைத்திலும் அனைவருக்கும் உரிய பங்கு ,சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையிலான இட ஒதுக்கீடாகும்.
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு இக்கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.
பொருளாதார அடிப்படையில் உலகில் எங்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை.
மேலும் , பொருளாதார அடிப்படையை மட்டுமே அளவுகோலாக கொள்ளும் பொழுது ,அதை உயர்சாதிகளில் உள்ள 10% ஏழைகளுக்கு மட்டுமே வழங்குவது என்பதும், அதிலிருந்து பட்டியல் சாதியினர்,பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஏழைகளுக்கு வழங்க மறுப்பதும் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதையே தகர்க்கும் செயலாகும்.
உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு சம்பந்தமான பல வழக்குகளில், இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் செல்லக்கூடாது என முன்பு கூறியுள்ளது.
தற்பொழுது இட ஒதுக்கீடு 50 % க்கு மேல் செல்லலாம், அது நிர்ணயிப்பு மாற்ற முடியாத ஒன்றல்ல என நீதிபதிகள் கூறியுள்ளனர். எனவே, மண்டல் கமிஷனின் அறிக்கையில் கூறியுள்ளபடி இந்திய மக்கள் தொகையில் 52 விழுக்காட்டினராக உள்ள, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 27 விழுக்காட்டிலிருந்து 52 விழுக்காடாக உயர்த்திட வேண்டும். பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு 30 விழுக்காடாக இட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கிட வேண்டும்.
எல்லா வழக்குகளிலும் தரவுகளை ,புள்ளிவிவரங்களை, கேட்கும் உச்ச நீதிமன்றம், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த இருக்கும் ஒன்றிய அரசிற்கு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட வேண்டும்.
இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். எவ்வளவு காலத்திற்குத்தான் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பது. இட ஒதுக்கீடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துக்களும் தீர்ப்பில் வெளிப்பட்டுள்ளன.
இவை உண்மைக்கு, எதார்த்த நிலைமைகளுக்கு எதிரானது.
இந்தியச் சமூகத்தில் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, சாதி அடிப்படையில் பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட தொழிலையே செய்ய வேண்டும் என்ற குலத்தொழில் முறை நீடித்து வருகிறது. சாதி அடிப்படையிலான, அநீதியான இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு சாதியினர்,தொடர்ந்து கடுமையான உடல் உழைப்பு சார்ந்த வேலைகளையும், தூய்மைப்பணி, மனிதக் கழிவுகளை அகற்றுதல் போன்ற வேலைகளையும் குலத்தொழிலாக செய்து வந்தனர்.
குலத்தொழிலை மீறியோர் கடும் தண்டனைகளுக்கு உள்ளாகினர். மனுதர்மம் போன்றவையும் அதற்காகவே உருவாக்கப்பட்டன. குலத்தொழிலை மீறியதற்காக சம்பூகனின் தலை சீவப்பட்டதை ராமாயணமும், ஏகலைவனின் கட்டைவிரல் வெட்டப் பட்டத்தையும், கர்ணன் தனது குடி பிறப்பை மறைத்து, வில்வித்தை பயின்றதையும், இந்த உண்மை வெளியான போது, தனது குருவால் சபிக்கப்பட்டதையும் மகாபாரதம் மூலம் அறிகிறோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை. ஒரு சாதியினருக்கே உரிய குலத்தொழிலாக இன்றளவும் அது நீடித்து வருகிறது.
2500 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதிக்கு, சமத்துவத்திற்கு எதிரான வேலைப் பிரிவினை இருந்து வந்தது. இந்த 2500 ஆண்டு கால சமூக அநீதிக்கு, நிவாரணமாக சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தற்போது தான் அமலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக அமலாக்கப்படாத சூழலில், எத்தனைக் காலத்திற்குத்தான் இட ஒதுக்கீடு நீடிப்பது என்ற கேள்வியை எழுப்புவது, நியாயம் அல்ல.
சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது அண்மைக்காலமாக ஏற்பட்ட ஒன்றுதான். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தான், சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தொடர்பான கோட்பாடுகளும், கோரிக்கைகளும் மேலோங்கின.
அரசு வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மண்டல் கமிஷன் அறிக்கையால் 1980ல் பரிந்துரைக்கப்பட்டு,1991 இல் தான் ஒன்றிய அரசின் அறிவிப்பாக வெளிவந்தது.
இந்த இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 2006 க்குப் பிறகுதான் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியில் நடைமுறைக்கு வந்தது.
அதுவும் கிரீமிலேயர் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் முழுமையான பயன் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திடவில்லை. அந்த 27 விழுக்காடும் படிப்படியாகவே நடைமுறைக்கு வந்தது. அதிலும் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தற்பொழுது தான் பல துறைகளில் வழங்கப்பட துவங்கியுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து மிகவும் வருந்தத்தக்கது .
மேலும், இட ஒதுக்கீடுதான் சாதி மற்றும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளுக்கு, வேறுபாடுகளுக்கு, சமத்துவமின்மைக்கு காரணமாக உள்ளது போலவும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால் சாதி, வர்க்க வேறுபாடுகள் , ஏற்றத்தாழ்வுகள் மறைந்து, சமத்துவம் ஏற்பட வழிபிறக்கும் என்பது போலவும் தீர்ப்பில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் வரை உள்ள, 5 ஏக்கர் வரை நிலம் உள்ள, 1000 சதுர அடி வீடுள்ள, 900 முதல் 1800 சதுர அடி அளவில் வீட்டுமனை உள்ள உயர்சாதியினர் கூட பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என வரையறுத்திருப்பது அபத்தமானது. உயர்சாதியினரில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோரை வரையறுப்பதில் மட்டும் மிகவும் தாராளத்தை ஒன்றிய அரசு காட்டியுள்ளது.
அவசர கதியில், சமூக நீதியை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ,உயர்சாதியில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் எவ்வளவு பேர் என்ற புள்ளிவிவரங்களும் இல்லாமல் ஒன்றிய அரசு 103 வது அரசியல் சட்டத்தை கொண்டு வந்தது.
எனவே, சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான 103 வது அரசியல் சட்டத் திருத்தம் செல்லும் என்ற இந்த தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் . அதிக நீதி அரசர்கள் கொண்ட, முழுமையான அரசியல் சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது.
இந்த தீர்ப்பு தொடர்பாக அடுத்தக் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள , சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 12 ஆம் தேதி கூட்டியிருப்பது வரவேற்புக்குரியது.
இவ்வாறு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாக வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கான செய்தி அறிக்கையில் மருத்துவர் த.அறம் கூறியுள்ளார்.