பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பதை உறுதிப்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற முழு அமர்வு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு இன்று (08.11.2022) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு (மூவர் ஆதரவு – இருவர் எதிர்ப்பு) இட ஒதுக்கீடு கொள்கை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாத நிலையில், உயர்சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களைக் கண்டறிந்திட தரவுகளும், பொருளாதார அளவுகோல்களும் இல்லாத நிலையில், பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மீதான இந்தத் தீர்ப்பின் தாக்கம் குறித்து பல பொருத்தப்பாடுமிக்க கேள்விகள் எழுந்துள்ளன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் மத்தியில் கவலையை உண்டாக்கி உள்ளது. எனவே, இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் கூடுதலான நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பி, மேலும் பல விளக்கங்களைப் பெறவும், இந்தத் தீர்ப்பின் அரசியலமைப்புச் சட்ட ரீதியான தகுதிப்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்திட அரசியல் கட்சிகளும் இதர சமூக இயக்கங்களும் வலியுறுத்தியுள்ளன. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு மறு ஆய்வு செய்திட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
சாதியற்ற, வர்க்கமற்ற சமுதாயத்திற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடையறாது போராடி வருகிறது. சமத்துவம், சமூக நீதி மற்றும் சாதி ஒழிப்பு ஆகிய இலட்சியங்களுக்காக உறுதிபூண்டு நிற்கிறது.
இட ஒதுக்கீட்டின் சட்ட ரீதியான நோக்கம் வறுமை ஒழிப்பு அல்ல; மாறாக, வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த மக்களுக்கான நிகர்நோக்கு நடவடிக்கையே (affirmative action) இட ஒதுக்கீட்டின் சட்டப்பூர்வ நோக்கம் ஆகும்.
தற்போதுள்ள அரசாங்கம் மூர்க்கத்தனமாகத் தனியார்மயத்தை நடைமுறைப்படுத்தி வரும் இந்தச் சூழலில், தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதற்கான நமது போராட்டம் மேலும் தீவிரமாகத் தொடர வேண்டும்.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.